ஐ.நா. சபைக் கூட்டத்தில், இந்தியா குறித்தான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பேச்சுக்கு, அதிரடியான பதிலடிக் கொடுத்திருக்கிறார், சினேகா தூபே. உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஐ.நா. கூட்டத்தில், இந்தியாவின் முதன்மைச் செயலாளர் என்ற முறையில் பேசிய சினேகாவின் உரை, உலக அரங்கில் கவனம் பெற்றுவருகிறது. தூபேவின் இந்த துணிச்சலான பேச்சை, இந்தியர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஐ.நா சபை

யார் இந்த சினேகா தூபே? ஐ.நா.வில் அவர் என்ன பேசினார்? பாகிஸ்தான் பிரதமர் கூறிய கருத்து என்ன?

இந்தியா குறித்து இம்ரான்கானின் சர்ச்சைப் பேச்சு:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த செப்.14-ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது ஐ.நா. சபையின் 76-வது பொதுக்கூட்டம். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரடியாக கலந்துகொள்ளாமல் காணொளி பதிவின் வயிலாகப் பேசினார்.

இம்ரான் கான்

அப்போது அவர், “ இந்தியா ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து, ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீதான உரிமை மீறல்களை இந்தியா ராணுவம் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. சமீபத்தில் இறந்த காஷ்மீர் விடுதலைப்போராட்டத் தலைவர் கிலானியின் உடலை, அவர் குடும்பத்தாரின் அனுமதி இல்லாமலே அடக்கம் செய்யப்பட்ட இடத்திருந்து கைப்பற்றி ரகசிய இடத்தில் அடக்கம் செய்துள்ளது இந்திய அரசாங்கம். இதுகுறித்து ஐ.நா. சபை முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என பேசியிருந்தார்.

இம்ரான்கானுக்கு பதிலடிகொடுத்த இந்திய அதிகாரி:

“ இந்தியாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐ.நா. பொதுச்சபையை தவறாகப் பயன்படுத்துகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இப்படி பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல்முறை அல்ல என்பதையும் இங்கு வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயங்கரவாதிகளை உருவாக்குவது, அவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவு அடைக்கலம் தருவது என்பதெல்லாம் பாகிஸ்தானின் நிரந்தரக் கொள்கையாகவே இருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலை முன்னின்று நடத்திய ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான் என்பது உலகத்துக்கே தெரியும்!

சினேகா தூபே

பாகிஸ்தான் போல் இல்லாமல் இந்தியாவில் எல்லா வகையிலும் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரமான நீதித்துறை கொண்ட நாடு இந்தியா. நமது அரசியல் அமைப்பை பாதுகாக்கிறது. இன்றுவரை பாகிஸ்தான் தலைவர்கள் பலர் ஒசாமா பின்லேடனை தியாகி என்றே போற்றிப் புகழ்கின்றனர்.

ஒரு கட்டடத்திற்கு தீ வைத்து விட்டு, அந்த தீயை அணைக்க முற்படுவது போல இருக்கிறது பாகிஸ்தானின் செயல்பாடுகள். வெளியில் தீயணைப்பு வீரர்கள் போல காட்டி கொள்ளும் பாகிஸ்தான் உண்மையில் தீ வைத்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளை கொள்ளைபுறத்தில் வளர்த்து வருகிறது. இதனால் உலகமே பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இம்ரான் கான் – ஒசாமா பின் லேடன்

உலக அரங்கில் பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான்.

காஷ்மீர் எப்போதும்இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். இதில் பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளும் அடங்கும். பாகிஸ்தான் உடனடியாக அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று பேசி பாகிஸ்தான் செயல்பாடுகளுக்கு எதிராக கர்ஜித்திருக்கிறார் சினேகா தூபே!

யார் இந்த சினேகா தூபே?!

ஐ.நா. சபையில் இந்தியாவின் முதன்மைச் செயலாளராக தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் சினேகா தூபே, தனது 12-ம் வயதிலிருந்தே ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தவர். கோவாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர், புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், டெல்லி ஜே.என்.யு-வில் எம்.ஏ மற்றும் எம்ஃபில் முடித்தார்.

தனது முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று, கடந்த 2012-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியானார். அதன்பிறகு, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகப்பணியில் நியமிக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டில் இருக்கும் மாட்ரிட் தூதரகத்தில் இந்தியாவின் மூன்றாவது செயலாளரானார். தற்போது, ​​ஐ.நா. சபையில் இந்தியாவின் முதன்மைச் செயலாளராக இருக்கிறார்.

சினேகா தூபே

பாகிஸ்தான் பிரதமருக்கு துணிச்சலான பதிலடிகொடுத்து, இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக அரங்கில் நிலைநிறுத்திய இந்திய இளம்பெண் அதிகாரி சினேகா தூபேவின் பேச்சு, இந்திய சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு பாராட்டைப்பெற்று வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.