9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவது ஏன் என்பது  குறித்து ஒரு பார்வை.

9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்:

2016 ஆம் ஆண்டில் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் பல்வேறு காரணங்களால் தொடந்து தள்ளிப்போனது. அதன்பின்னர் நீதிமன்றத்தின் அழுத்தத்தை தொடர்ந்து தமிழகத்தில் முதன்முறையாக ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என இரு பிரிவாக உள்ளாட்சி தேர்தல் பிரிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2019 ஆம் ஆண்டு முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30 ஆம் தேதியும் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சியிலும்கூட புதிதாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை.  அந்த மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

image

கூட்டணியின்றி தனித்து களம் காணும் கட்சிகள்:

இத்தேர்தலில், தனித்துப்போட்டியிடுவதாக பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அறிவித்துவிட்டன. அமமுகவும் தனித்து போட்டியிடும் ஐடியாவிலேயே உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலுமே அதிமுக கூட்டணியிலேயே பாமக இடம்பெற்றிருந்தது. தேமுதிகவும் நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பெரும்பாலும் அதே கூட்டணியிலேயே இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால், அதிமுகவில் வடமாவட்டங்களில் முக்கிய கூட்டணி கட்சியாக இருந்த பாமக விலகியதால், பாஜக, தமாகா ஆகிய கட்சிகள்  மட்டுமே அந்த கூட்டணியில் உள்ளது. பெரிய கட்சிகள் மட்டுமின்றி புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகளும் தனித்து போட்டியிடும் முடிவிலேயே உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க ஆர்வம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல்தான் ஜனநாயகத்தின் கடைசி நபர் வரை துல்லியமாக கட்சியை கொண்டு சேர்க்கும் வலிமையான களமாக உள்ளது. அதுமட்டுமின்றி கிளைக்கழகம் அளவிலும், ஒன்றியம் அளவிலும் பணியாற்றும் கட்சி உறுப்பினர்கள் பலருக்கும் தேர்தல் வாய்ப்பு வழங்குவதால் எதிர்காலங்களில் நடக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி கட்டமைப்பை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவி செய்யும். மேலும் கட்சி அடையாளம் தாண்டி தனிநபர்களின் செல்வாக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதனால் கட்சியின் செல்வாக்கு மிக்க நபர்களை முன்னிறுத்தி அப்பகுதிகளில் கட்சியை வளர்க்கவும் தலைமைகள் திட்டமிடும்.

image

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கே கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுக வாரக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தி அலைக்கழிக்கும். அப்படியிருக்கையில் உள்ளாட்சி தேர்தலில் நியாயமான பங்கீட்டினை நம்மால் பெற முடியாது என்றே பல கட்சிகளும் கருதுகின்றன. இதற்கு உதாரணமாக கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பல மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டன. எனவே தனித்து போட்டியிடுவதன் மூலமாக கட்சியின் பலத்தை நிரூபிக்கவும், சில இடங்களில் வெற்றிபெற்று தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வாய்ப்புகளை உருவாக்கவும், அடுத்த பெரிய தேர்தல்களுக்கான துருப்புசீட்டாகவுமே இந்த முடிவை பெரும்பாலான கட்சிகள் எடுக்கின்றன.

தனித்து நிற்கும் கட்சிகளின் கணக்கு என்ன?

தற்போது தனித்து நிற்பதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டது, அதிலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 7 சதவீதம் அளவுக்கு வாக்குகளை வாங்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதே உற்சாகத்துடன் கிராம அளவிலும் கட்சியை கொண்டு செல்ல திட்டமிட்டு தனித்து களம் காண்கிறார் சீமான். மக்கள் நீதி மையம் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தது விமர்சனத்திற்குள்ளானது. எனவே, தற்போது தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் கமல்.  கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட அமமுக 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வென்றது, சில ஒன்றிய சேர்மன், துணை சேர்மன் பதவிகளையும் கைப்பற்றினர், எனவே இப்போதும் தனித்து போட்டியிட தயாராக உள்ளார் டிடிவி.தினகரன்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதே முக்கிய பேசுபொருளாக உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதற்காரணம் அதிமுகவில் வலுவான தலைமை இல்லாததால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு அதிமுக சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை, இதனால்தான் கணிசமான தொகுதியில் தங்களால் வெற்றிபெற முடியவில்லை என்ற ஆதங்கத்தை அக்கட்சியின் தலைவர்களே வெளிப்படுத்தினர். மேலும், தற்போது தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர 7 மாவட்டங்கள் பாமக வலுவாக உள்ளவையே. எனவே தனித்து போட்டியிடுவதன் மூலம் கட்சியை வலுப்படுத்தவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை மாற்றவும் வாய்ப்பாக பாமக பார்க்கிறது என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

image

பாமகவை போலவே தேமுதிகவும் வடமாவட்டங்களில் கணிசமான வாக்குவங்கியை கொண்டுள்ள கட்சிதான், எனவே அக்கட்சியும் தனது பலத்தை காண்பிக்க இத்தேர்தலை பயன்படுத்தும். பாமக மற்றும் தேமுதிகவின் தனித்து போட்டியிடும் முடிவு நிச்சயமாக அதிமுகவுக்கு பாதகத்தையே உருவாக்கும். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு தற்போது தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தென்காசி, திருநெல்வேலியில் மட்டும் கணிசமான வாக்குவங்கி உள்ளது, என்றாலும் இடப்பங்கீட்டின் போது முரண்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியிலும் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையின் போது முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதனைப்படிக்க…“வேண்டியவர்களை மட்டும் நியமிக்கிறது”  – மத்திய அரசை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.