தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கருப்பூரில் வெறி நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் வெறி நாய்கள் கடித்து, ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்து போனாதால் இப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையிலும் பீதியிலும் உள்ளனர். நேற்று இரவு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையையும், இன்று காலை 12 வயது சிறுவனையும் வெறி நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

வீர ராஜேந்திரன்

கருப்பூர், காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்களான சதீஷ்- வினோதா தம்பதியரின் 5 வயது மகள் சஸ்மிதா நேற்று இரவு, தனது வீட்டின் வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, வெறி நாய் ஒன்று இக்குழந்தையின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. இதனால் அக்குழந்தை வலியாலும் பயத்தாலும் கதறி அழுதிருக்கிறது. இக்குழந்தையை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சஸ்மிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இப்பகுதியில் உள்ள வெறி நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்தநிலையில், இன்று காலை, அரசு என்கிற 12 வயது சிறுவனை வெறி நாய் கடித்த சம்பவம் இப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இச்சிறுவனின் தொடைப் பகுதியில் வெறி நாய் கடித்ததால் ஆழமான, பயங்கரமன காயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இன்று மேலும் இருவரை வெறி நாய்கள் கடித்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான வீர,ராஜேந்திரன் ‘’கருப்பூர்ல, தெரு நாய்களின் தாக்குதலால் ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்து போயிக்கிட்டு இருக்கு, இதனால் இப்பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்னு, கடந்த ஜூலை 31-ம் தேதி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் குரூப்பில் பதிவிட்டேன். அந்த குரூப்பில் ஆட்சியரும் இருக்கார். அவரோ அல்லது மற்ற அதிகாரிகளோ உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்ப இந்த சின்னஞ்சிறு குழந்தைகள் பதிக்கப்பட்டிருக்கமாட்டாங்க’’ என ஆதங்கப்பட்டார்.

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நாம் பேசியபோது ‘’ நேற்று நாய் கடித்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுல நான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். கருப்பூர் பகுதியில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, நான் ஏற்கனவே உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள நாய்களை அழிக்க, பிராணிகள் நல சட்டம் அனுமதிக்காது. மக்களை பாதுகாக்க சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை நல்ல முறையில் செய்து வருகிறேன்’’என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.