மரங்கள், நீர் எனப் பசுமை சூழக் காட்சியளிக்கும் இடங்கள் மனிதர்களின் மனதில் உள்ள அழுத்தங்களைப் போக்கி மனதை லேசாக்கி மகிழ்ச்சியடையச் செய்யும் என்பது அனுபவ ரீதியாக அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அடர்ந்த மரங்கள், மதகுகள் வழியாக ஆனந்த இரைச்சலுடன் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் எனப் பல சிறப்புகளை உள்ளடக்கி அனைவரையும் கவரக்கூடிய சுற்றுலாத் தலமாகக் கல்லணை திகழ்கிறது.

கல்லணை

திருச்சியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலையில் தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது கல்லணை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிறந்த ஆட்சியினை வெளிப்படுத்திய சோழ மன்னன் கரிகால சோழனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல், மண் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட கல்லணை இன்றைக்கும் உலக வல்லுநர்களால் வியந்து பாராட்டப்பட்டு வருகிறது. உலக புராதனச் சின்னங்களில் ஒன்றாகக் கல்லணையைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

மேட்டூரிலிருந்து வரும் நீர் சேலம், திருச்சி வழியாகக் கல்லணையை வந்தடைகிறது. கல்லணையிலிருந்து காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய மதகுகள் வழியாகப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையிலிருந்து வரும் தண்ணீரே டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களின் விவசாயம் செழித்து உயிர்ப்புடன் இருக்க உதவி வருகிறது.

மரம்

விளை நிலங்களை மட்டுமல்ல, மனிதர்களின் மனத்தையும் வளமாக்கிப் புத்துணர்ச்சி தரக்கூடிய மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் கல்லணை திகழ்ந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கல்லணைக்கு ஒரு விசிட் அடிக்க புகைப்படக்காரருடன் ஆஜர் ஆனோம். கல்லணை முழுவதும் பழைய, அடர்ந்த மரங்கள் சூரிய ஒளி தரையில் விழாதபடி குடைகளாக மாறி நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. கல்லணையின் மையப்பகுதியில் கரிகால சோழன் யானை மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: திருச்சி ஊர்ப்பெருமை: 10 வகை பானிபூரி, 4 வகை பாவ் பாஜி… சொக்க வைக்கும் சேட் ஜி சாட் கடை!

கொள்ளிடம் கரையில் கரிகால சோழனுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கல்லணை கட்டப்பட்ட விதம், கரிகால சோழனின் சிறப்புகள் போன்றவை ஓவியங்களாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கல்லணைக் கால்வாய்க் கரையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி ஆறு விளக்கக் கூடத்தில் ஆறுகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளக் கூடிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அணையின் வடக்குப் பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம், அதிகாரிகளுக்கான ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன.

கரிகாலன் சோழன்

கல்லணை மதகுகள் வழியாகக் காவிரி ஆற்றில் ஆனந்தமாகச் சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து வெள்ளைப் பனித்துளிகளாகக் காற்றில் பறந்து வந்து மழைத்துளியாக அனைவரது முகத்திலும் பட்டுப் பரவசப்படுத்துகிறது. வேகமாக வரும் தண்ணீரில் மதகுகளுக்கு அருகிலேயே இரைகளைப் பிடிப்பதற்காகப் படையெடுத்துக் காத்து நிற்கும் நீர்க் காகம் எனப்படுகிற பறவைகள் நீரில் மூழ்கி தன் அலகால் மீன்களைப் பிடிப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறது.

படு வேகத்தில் வரும் தண்ணீரை எதிர்கொண்டு லாகவமாக மீனைப் பிடிக்கும் நீர்க் காகங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையினை விதைக்கவும் தவறவில்லை. காவிரி மதகுகள் அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் சென்றால் ராட்சச ராட்டினம், மிதவைப் படகு, ஹெலிகாப்டர், விமானம் போன்றவற்றில் செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளவை பொருட்காட்சிக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. அதன் அருகிலேயே அணையிலிருந்து முழங்கால் அளவில் தண்ணீர் வெளியே வரும் சிறிய வாய்க்காலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தக் கும்மாளமிட்டுக் குளிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள்

பூங்காவில் அமர்வதற்கான சிமெண்ட் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்தபடியே படுக்கை நீர் வீழ்ச்சிபோல் வெளியேறும் தண்ணீரின் அழகை ரசிக்க முடிகிறது. மீன் வறுவல் கடைகள், வேர்க்கடலை, சோளம் போன்றவற்றை விற்பனை செய்கின்ற கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் என அனைத்தும் உள்ளன. காவிரியில் பிடிக்கப்பட்ட மீன்களை சுடச்சுட வறுத்துக் கொடுக்கின்றனர். ஒரு பீஸ் பத்து ரூபாயில் தொடங்கி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அணையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் சாலையில் சிறிய அளவிலான சாப்பாட்டுக் கடைகளும் அமைந்துள்ளன. பூங்காவிற்குள் ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் என குழந்தைகளை குஷியாக்கும் தற்காலிகக் கடைகளும் நிரம்பியிருக்கின்றன. பாதுகாப்பிற்காகக் காவல் துறை அலுவலகம் அமைக்கப்பட்டு அதில் பணியில் உள்ள போலீஸார் எச்சரிக்கை செய்துகொண்டே அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றனர். ஆறுகளில் ஆழம் அதிகம் என்பதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கிக் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கல்லணை

அதையும் மீறி ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளிக்கின்றனர். மக்கள் இதன் ஆபத்தை உணர்ந்து இதைத் தவிர்க்கவேண்டும்.

தினமும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்றாற்போல் கழிப்பிட வசதிகள் இல்லாதது குறை. இருப்பவையும் சுத்தமில்லாமல் உள்ளன. பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி போதுமான சுகாதாரத்துடன் இல்லை.

Also Read: திருச்சி ருசி: பாம்பே காஜா, பன் அல்வா, அக்கார அடிசில் – 3 மணிநேரம் மட்டுமே இயங்கும் வெங்கடேச பவன்!

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலையில் உள்ள திருவாணைக்காவல் பகுதி வழியாகச் செல்லும் சாலை, காவிரிப் பாலம் வழியாகச் செல்லும் சாலை என இரண்டு வழிகளிலும் கல்லணைக்குச் செல்லலாம். திருச்சியிலிருந்து மட்டுமல்ல, தஞ்சாவூரிலிருந்தும் பஸ் வசதி உள்ளது.

பூங்கா

திருச்சியிலிருந்து அரை மணி நேரத்தில் கல்லணை சென்றடையலாம். ஒரு நபருக்கு ரூ. 200 இருந்தால் போதும் முழுதாக என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம். மனதில் உள்ள இறுக்கம் களைவதற்கு ஏற்ற இடம் கல்லணை.

அணையைச் சுற்றிலும் உள்ள மரங்கள் வெளிப்படுத்தும் சுத்தமான காற்று, கடல் போல் தேங்கி நிற்கும் தண்ணீர் கண்களின் வழியாக மனதுக்குள் புகுந்து லேசாக்கி உடம்பில் புத்துணர்ச்சியைத் தருவதால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இடமாகவே கல்லணை அமைந்திருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் ஒரு ஜாலி டிரிப் செல்வதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமான கல்லணைக்கு ஒரு ட்ரிப் அடிச்சுதான் பாருங்களேன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.