கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. 2014-ம் ஆண்டு முதல் அங்கு பட்டுப்புழுவியல் துறை தொடங்கப்பட்டது. அதில் ஏராளமான மாணவர்கள் படித்துவரும் நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளில் பட்டுப் புழுவியல் துறை நீக்கப்பட்டுள்ளது.

பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டம்

Also Read: “கோவை விதை சான்றளிப்பு இயக்குநரகத்தை இடம் மாற்றக் கூடாது!” – எதிர்க்கும் விவசாயிகள்; என்ன காரணம்?

இது அந்தத்துறை ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை கண்டித்து, பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் கடந்த ஏழு நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சிலர் கூறுகையில், “அரசாங்கத்திடம் இருந்து போதுமான அளவுக்கு நிதி வந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்தப் படிப்பை எதற்காக நிறுத்துகின்றனர் என்ற தெளிவான விளக்கத்தை யாரும் கூறவில்லை. இந்தத் துறையில், தற்போது 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறோம். பொய்யான தகவல்களை வழங்கி, துறையை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டம்

இதனால், வேலை வாய்ப்பில் மாணவர்களுக்குப் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளன. மாணவர் சேர்க்கை தடையில்லாமல் நடக்க அனுமதிப்பதுடன், இதைத் தரம் உயர்த்தி பட்டுப்புழு கல்லூரியைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் (அ.தி.மு.க) எங்கள் கோரிக்கை நியாயமானதுதான் என்று கூறி நேரில் வந்து ஆதரவளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்துதான் சரியான பதில் வரவில்லை.

பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டம்

செல்போன் டார்ச் எரிய விடுவது, மெழுகுவத்தி ஏந்துவது என்று பல வகைகளில் கவனம் ஈர்ப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் கூறுகையில், “ஏற்கெனவே அந்தப் பாடப்பிரிவில் படித்த பலர் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு தேவையான பட்டுகளில் 80 சதவிகிதம் இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது. பட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் துறை தொடங்கப்பட்டது.

ஈசன்

இந்தியாவில் மூன்று இடங்களில்தான் இந்தத் துறை உள்ளது. அதில் இதுவும் ஒன்று. மாணவர்கள் முறையாகப் படித்து வந்தால்தானே, விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அந்தப் பாடப்பிரிவை நிறுத்தக் கூடாது” என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “அந்தப் படிப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் 37 இடங்கள் உள்ளன. ஆனால், 20 பேர்தான் வருகின்றனர். அதை விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அப்படியே வந்தாலும் பலர் பாதியில் சென்று விடுகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவினர், `இந்தத் துறைக்கு மேட்டுப்பாளையம் சரியான அமைப்பில் இல்லை.

துணைவேந்தர் குமார்

இந்தப் பாடத்திட்டத்தில் மேலும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இது பலனளிக்கும்’ என்று கூறியுள்ளனர். அதற்காகத்தான் இதை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளோம். இந்த முடிவால் தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

கடைசி மாணவர் அந்தத் துறையில் படிக்கும்வரை எங்கள் கடமையை விட்டு விலக மாட்டோம். அதேபோல விவசாயிகளுக்கும் பல்கலைக்கழகம் தொடர்ந்து கை கொடுத்துக்கொண்டேதான் இருக்கும். இது தற்காலிகமான முடிவுதான். தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைப்படி திருத்தங்களைச் செய்து மேம்படுத்தி மீண்டும் இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டம்

Also Read: “நெல் கொள்முதல் செய்வதுபோல் வெங்காயத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!” – விவசாயிகள் கோரிக்கை

ஆனால், அதற்கு சற்று காலம் தேவை. இதை மாணவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், சிலர் தூண்டிவிடுவதால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் மற்றும் அரசாங்கத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு கொடுக்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.