கடந்த பத்து வருடங்களாகவே வங்கி சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் வங்கியில் பணம் போடுபவர்களுக்கு கிடைக்கும் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனா தாக்கத்துக்கு முன்பு இருந்த வட்டி விகிதத்தைவிட, மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றன.

இதை மையமாகக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், “நோய்த் தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வங்கிகள் 8.5% முதல் 9% வரை வட்டி கொடுத்தன. தற்போது இந்த வட்டி 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

Retirement (Representational Image)

இதன் காரணமாக, இந்தத் தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, வட்டியைக் குறைத்து போட்ட உத்தரவை ரத்து செய்து நோய்த்தொற்றுக்கு முன்னர் வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எவ்வளவு வட்டி கொடுக்க வேண்டும் என்பதைக் கணக்கிடுவது மத்திய அரசின் கொள்கை முடிவாகும். அதனால், இது குறித்த எந்த ஓர் உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க இயலாது. அதே சமயம், எந்தவிதமான வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதால், மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

வங்கி சேமிப்புத் திட்டங்களுக்காக வட்டி விகிதங்களை மத்திய அரசு தொடர்து குறைத்து வர என்ன காரணம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் தவிர, மூத்த குடிமக்களுக்கு வேறு சேமிப்புத் திட்டங்களே இல்லையா, ஃபிக்ஸட் சேமிப்புத் திட்டங்களில் பணத்தைப் போடுவதற்கு முன், மூத்த குடிமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் பேசினோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

ஏன் வட்டி குறைக்கப்படுகிறது?!

“முன்பெல்லாம் வங்கிகள், தங்களை நம்பி மக்கள் சேமிக்கும் பணத்தை வைத்துதான் பிசினஸ் செய்தன. மக்களின் பணத்தை அதிக வட்டிக்குக் கடனாகக் கொடுத்து அல்லது அந்தப் பணத்தை வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை வட்டியாக மக்களுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். அதனால் அன்றைய நிலையில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு அதிகமான வட்டி வழங்கப்பட்டது.

Retirement (Representational Image)

2000-க்கு முன்பு வரையிலும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிகமான வட்டி வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 2003 – 2004-ம் ஆண்டில்தான் வரலாறு காணாத வீழ்ச்சியை வங்கி சேமிப்புத் திட்டங்கள் சந்திக்க ஆரம்பித்தன. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்த ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கான வட்டி விகிதம் தற்போது 5 – 7% என்கிற நிலையில் இருக்கிறது.

Also Read: மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள்… எப்படி முதலீடு செய்வது..?

கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்த பிறகு, இன்றைய நிலையில் வங்கிக்குப் பணமானது பல்வேறு வழிகள் மூலம் டெபாசிட் செய்யப்படுவதால், அதுவே வங்கிகளுக்கான பிசினஸூக்குப் போதுமானதாக இருக்கிறது. மக்களிடமிருந்து அவர்கள் பணத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால்தான், மக்களின் சேமிப்புப் பணத்துக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமும் குறைகிறது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள்!

மூத்த குடிமக்களின் நலனுக்காக, பொதுத்துறை வங்கிகளைவிட, தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பலவும் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைவிட கூடுதல் வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. மேலும், அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சேமிப்புத் திட்டமான எஸ்.சி.எஸ்.எஸ் (Senior Citizen Savings Scheme – SCSS) 7.40% வட்டியை மூத்த குடிமக்களுக்குத் தருகிறது.

Also Read: ஓய்வுபெறுபவர்களின் நம்பர் 1 சாய்ஸ் இந்த அஞ்சலக திட்டம்தான்; ஏன் தெரியுமா?- பணம் பண்ணலாம் வாங்க-12

அதே போல, எல்.ஐ.சி நிறுவனத்தில் ‘Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)’ என்கிற மூத்த குடிமக்களுக்கான திட்டமும் 7.40% வட்டியை வழங்குகிறது. ஆனால், இந்த இரண்டு திட்டங்களிலும் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் மட்டுமே சேமிக்க முடியும் என்பது விதிமுறை.

Savings (Representational Image)

Also Read: வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? – 11

இவை தவிர, வங்கிகளில் ‘Floating Rate Savings Bond’ (SRSB) என்கிற சேமிப்புத் திட்டமும் மூத்த குடிமக்களின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான வட்டி விகிதம் 7.15%. இந்தத் திட்டத்தின் பெயரில் பாண்ட் என்கிற பெயர் இருந்தாலும், இது ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு ஆரம்பிப்பது போன்ற நடைமுறைகளைக் கொண்டதுதான். டீமேட் கணக்கு இதற்குத் தேவையில்லை. ஆனால், இதற்கான வட்டி விகிதம் மாற்றத்துக்கு உட்பட்டது. இந்தச் சேமிப்பில் பணத்தைப் போடுவதற்கு அதிகபட்ச வரையறை கிடையாது. எஸ்.சி.எஸ்.எஸ் மற்றும் பி.எம்.வி.வி.ஒய் திட்டங்கள் பிரத்யேகமாக மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. ஆனால், எஃப்.ஆர்.எஸ்.பி திட்டமானது அனைவருக்குமானதுதான்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்றைய நிலையில், அதிக வட்டி வழங்கக்கூடிய தனியார் நிறுவனங்களின் சேமிப்புத் திட்டங்கள் சந்தைக்கு அதிகம் வர ஆரம்பித்திருக்கின்றன. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் வட்டி குறைவு என நினைக்கும் மூத்த குடிமக்கள், மேலே குறிப்பிட்ட மற்ற மூன்று திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அந்த திட்டங்கள் வழங்கும் வட்டியைவிட, கார்ப்பரேட் டெபாசிட் சேமிப்பில் 9% வட்டி தருகிறார்கள், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் 10% வட்டி தருகிறார்கள் எனத் தனியார் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என்பதை மூத்த குடிமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வித்யா பாலா

இருப்பினும், தற்போது வங்கி பிக்சட்ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ரூ.5 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு இருப்பதால், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரிஸ்க் அதிகம் என்றாலும்கூட, குறைந்த மதிப்பிலான தொகையை ஃபிக்ஸட் சேமிப்பாகப் போட்டு வைப்பதில் தவறில்லை” என்றார் தெளிவாக.

ஆகையால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகித குறைவால், மூத்த குடிமக்கள் கவலைப்படாமல், மேலே குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களிலும் கவனம் செலுத்தலாமே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.