மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் இறந்தனர். அது போன்ற ஒரு பிரச்னை இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மல்ஹெட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்து வருவதாகவும், கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் ராஜேந்திர புர்மா மற்றும் பூர்ணிமா ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதில், மல்ஹெட் வனப்பகுதியில் ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து இதுவரை 40 பழங்குடியின குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இம்மனு நீதிபதி திபன்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

Baby (Representational Image)

Also Read: வீட்டு பெயர் பலகையில் மகள், மருமகளுக்கும் இடம்; மகாராஷ்டிரா கிராம மக்களின் புது முயற்சி!

அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கும்பகோனி, பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வாசிக்க ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், ஊட்டச்சத்துக் குறைவால் மரணங்கள் நடந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினர். “அரசின் இந்த நடவடிக்கைகளால் என்ன பயன்? திட்டங்கள் காகிதத்தில் மட்டும்தான் இருக்கின்றன. மனித உயிர்களுக்கு அரசு மதிப்புக் கொடுப்பதில்லை” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், “மாநிலத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. மல்ஹெட் வனப்பகுதியில் 2016-2017-ம் ஆண்டில் 407 குழந்தைகள் இறந்திருந்தனர். ஆனால் அது இப்போது 203 ஆகக் குறைந்துள்ளது” என்றார். மனுதாரர் ராஜேந்திர புர்மா ஆஜராகி, “கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து இது வரை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் 40 குழந்தைகளும், குறைப்பிரசவத்தில் 24 குழந்தைகளும் இறந்துள்ளனர். இப்பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லை. அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கும், உண்மையாள கள நிலவரத்திற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு பழங்குடியினக் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்திற்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கவேண்டும். ஆனால் அந்த நிதியில் மகாராஷ்டிரா அரசு 3 ஆண்டுகளில் வெறும் 24 சதவிகிதத்தை மட்டுமே செலவிட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார்.

PM Narendra Modi

Also Read: `அவள் விருப்பப்படி வாழட்டும்!’ – திருநம்பியுடன் மகளை வாழ அனுமதிக்காத பெற்றோர்; உதவிய உயர்நீதிமன்றம்!

இதையடுத்து பேசிய அரசு வழக்கறிஞர், பழங்குடியினர்கள் அதிகம் இருக்கும் கோண்டியா, கட்சிரோலி பகுதியில் காலியாக இருக்கும் மருத்துவப் பணியிடங்களை நிரப்ப ஆள்களை நியமித்தாலும் அவர்கள் அங்கு பணிக்குச் செல்ல மறுப்பதாகத் தெரிவித்தார்.

நீதிபதிகள், “டாக்டர்கள் பணிக்குச் செல்ல ஊக்கத்தொகை அறிவியுங்கள். உங்களது நோக்கம் குழந்தைகள் இறப்பை கட்டுப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஒரு மாதத்திற்குள் 40 குழந்தைகள் இறந்துள்ளனர். தேவைப்படும் வசதிகளை உடனே அரசு செய்து கொடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.