எதிர்வரும் கனடா பொதுத் தேர்தல் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், கனடாவில் வாழும் இந்தியர்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும்தான். இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கனடா தேர்தலில் களம் காண்கிறார்கள் இந்திய வம்சாவளியினர். இதுதொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.

செப்டம்பர் 20 அன்று நடக்கும் கனடா பொதுசபைக்கான தேர்தல், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைவிதியை மட்டுமல்ல, இந்திய வம்சாவளியினரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 பேர் இம்முறை தேர்தல் களம் காண்கிறார்கள். இதில் லிபரல் கட்சி சார்பில் 17 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 13 பேரும், புதிய ஜனநாயக கட்சி சார்பில் 10 பேரும், கனடா மக்கள் கட்சி சார்பில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 338 உறுப்பினர்கள் கொண்ட கனடா பொதுச்சபையில் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில், பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் எஸ்.சஜ்ஜன், சுகாதாரத்துறை அமைச்சரான தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், இளைஞர் நலத்துறை அமைச்சர் பார்டிஷ் சாக்கர் ஆகிய அமைச்சர்களும் அடங்குவர். இந்த முறையும் இவர்கள் அனைவரும் போட்டியிடுகிறார்கள்.

ஓண்டாரியோவின் ஓக்வில்லில் இருந்து மீண்டும் அனிதா ஆனந்த் போட்டியிடும் அதேவேளையில், வாட்டர்லூ பகுதியில் இருந்து பார்டிஷ் சாக்கர் மீண்டும் போட்டியிடுகிறார். ட்ரூடோ அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஹர்ஜித் சஜ்ஜன் 2015-ல் தான் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வான்கூவர் தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த மாகாணத்தின் மக்கள்தொகையில் இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதால், இங்கு பெறும் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுபவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். சுக்பீர் சிங் கில் என்பவரே போட்டியிடுகிறார்.

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றுமொரு முக்கியமான நபர், ஜஸ்டின் இரண்டாம் முறை ஆட்சி அமைக்க கைகொடுத்த ஜக்மீத் சிங். கடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில், ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை மட்டும் பெற்றது. அப்போது மூன்றாவது பெரிய கட்சியாக 32 இடங்களை வென்று உருவெடுத்திருந்த பிளாக் கியூபெகோயிஸ்-ஐ பெரிதாக நம்பினார் ட்ரூடோ. ஆனால், அவர்கள் கைவிட காப்பாளராக ட்ரூடோவுக்கு உதவியவர் புதிய ஜனநாயக கட்சியை வழிநடத்தி வந்த ஜக்மீத் சிங்தான். 2019-ல் பர்னாபி தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஜக்மீத் சிங், அந்தத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை வழிநடத்தி 24 இடங்களை வெல்ல உதவினார். ஜக்மீத் சிங் ‘கிங் மேக்கர்’ ஆக உருவெடுத்து இரண்டாம் முறையாக ட்ரூடோ ஆட்சியமைக்க உதவினார்.

இந்தமுறையும் ஜக்மீத் சிங் கனடா அரசியல் முக்கிய ரோல் வகிக்க வாய்ப்பிருக்கிறது. நடக்கவிருக்கிற தேர்தலிலும், ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பெறாத பட்சத்தில் ஜக்மீத் சிங் மீண்டும் ஒருமுறை கிங் மேக்கராக உருவாக வாய்ப்பிருக்கிறது. கிரேட்டர் டொராண்டோ பெருநகரப் பகுதி இந்திய கனேடிய மக்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். இந்தப் பகுதியில் இருந்து மணீந்தர் சித்து (பிராம்ப்டன் கிழக்கு), ரூபி சஹோட்டா (பிராம்ப்டன் நார்த்), கமல் கெரா (பிராம்ப்டன் மேற்கு) மற்றும் சோனியா சித்து (பிராம்ப்டன் சவுத்) போன்றோர் லிபரல் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் அனைவரும் மீண்டும் தேர்தல் களம் காண்கிறார்கள்.

இதேபோல் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்வீன் ரத்தன், ஜகதீப் சிங், நேவல் பஜாஜ், மேதா ஜோஷி மற்றும் ரமன்தீப் சிங் பிரார் ஆகியோர் மிசிசாகா-ஸ்ட்ரீட்ஸ்வில்லி, பிராம்ப்டன் சென்டர், பிராம்ப்டன் கிழக்கு, பிராம்ப்டன் நார்த் மற்றும் பிராம்ப்டன் சவுத் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். இவ்வளவு பேர் போட்டியிட காரணம், கனடாவில் ஒரு சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வம்சாவளி மக்கள். அவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களேயே வேட்பாளர்களாக களமிறக்கின்றன முக்கிய கட்சிகள் அனைத்தும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் முன்னாள் சுகாதார துறை அமைச்சருமான உஜ்ஜால் தோஸன்ஜ், ” இந்தத் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையிலான இந்திய கனேடியர்கள் (இந்திய வம்சாவளியினர்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள், குறிப்பாக சர்ரே போன்ற மாவட்டங்களில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர்கள் அதிகம் வசிக்கின்றனர்” என்று இந்தியர்களின் வெற்றி தொடர்பாக பேசியிருக்கிறார். இந்த முறை கனடா தேர்தலை தீர்மானிக்கும் காரணிகளாக கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதாரம் ஆகியவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி, இந்தியர்கள் வசிக்கும் தொகுதிகளில் வெற்றியாளர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயமாக கனடாவில் இந்திய சமூகம் சந்தித்து வரும் பிரச்னைகள் இருக்கலாம் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

image

ஒட்டாவாவை தளமாகக் கொண்ட இந்திய வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் வர்த்தக இயக்குனர் ஹேமந்த் எம் ஷா என்பவர், ” இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ள பயணத் தடை இந்தியர்களை கடுமையாக பாதிக்கிறது. கனேடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கனேடிய பொருளாதாரத்திற்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை கொண்டுவரும் இந்திய மாணவர்கள், இந்த விமான தடையின் காரணமாக தனிப்பட்ட வகுப்புகளில் கலந்து கொள்வதில் தங்கள் நிறுவனங்களை அடைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தவிர, இந்தத் தடை கனடாவில் உள்ள சிறு வணிகங்களையும் பாதிக்கிறது. அவற்றில் பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்றன. மேலும் கனடா – இந்தியா வர்த்தகமும் பாதிக்கப்படுகிறது” என்று தற்போது நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி இருக்கிறார்.

மருத்துவரும், சர்வதேச வணிக நெட்வொர்க்குகளை உருவாக்க உதவும் கனடா – இந்தியா குளோபல் மன்றத்தின் தேசிய தலைவருமான டாக்டர் சிவேந்திர திவேதி என்பவரும் இதே பிரச்னைகளை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ” தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு கூட தளர்வு இல்லாமல் விதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மீதான பயணத் தடை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் நாள் முடிவடையும் வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற தடையை எதிர்கொள்ளாததால் இது மிகவும் நியாயமற்றது. நாங்கள் இதை கனேடியப் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவித்தோம். மேலும், இந்தியா – கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் நீண்ட தாமதம் மற்றும் பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்திற்கு கனேடிய அரசு ஆதரவு அளிப்பது போன்ற பிரச்சனைகளும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

கனடா தேர்தல், கனடா மக்களுக்கு மட்டுமில்லை, இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் முக்கியமான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக மாறிவருகிறது. அதற்கேற்ப ஜஸ்டின் ட்ரூடோ போன்று அந்நாட்டு தலைவர்கள் இந்தியர்களை கவர்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

– மலையரசு

தகவல் உறுதுணை: The Tribune, TOI

| தொடர்புடைய செய்திக் கட்டுரை: அதீத நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல்… கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ? |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.