கொரோனா பேரிடர் காலம் என்பது வெறும் நோய்த்தொற்று காலமாக மட்டும் இருந்துவிடவில்லை. பொருளாதார இழப்புகள், மனநல பிரச்னைகள், அதீத ஆன்லைன் பயன்பாடு, வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போதல் என பலவற்றின் தொகுப்பாகவே இருந்தது. அந்த வகையில் கொரோனா காலமென்பது பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு பெரும் இன்னல்களை கொடுத்துள்ளது. காரணம், பெரியவர்களுக்காவது உலகுடன் ஏதாவதொரு வகையில் தொடர்பு இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு வெளியுலகுடன் தொடர்பேயற்ற நிலை உருவானது. அதிகபட்சம் அண்டை வீட்டாருடன் மட்டுமே அவர்கள் உலகம் முடிந்துவிட்டது. அதைவிட்டால் மொபைல், கேட்ஜெட்ஸ் என ஆன்லைனாகிவிட்டார்கள். இந்த ஆன்லைன் கலாசாரமும், வெளியுலகுடன் தொடர்பற்ற நிலையும் குழந்தைகளின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, இது அவர்களின் எதிர்காலத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும், அவற்றை எப்படி சமாளிப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு எளிதான பதில் சொல்லும் தொகுப்பாக இந்தத் தொடர் இருக்கும்.

முதல் அத்தியாயத்தில், கொரோனா காலத்தில் மனநலம் சார்ந்த என்ன மாதிரியான பிரச்னைகளை குழந்தைகள் எதிர்கொண்டார்கள், இனியும் எதிர்கொள்வார்கள், அதன் பின்னணியில் மொபைல் ஃபோன் எந்தளவுக்கு உள்ளது, ‘ஆரோக்கியமான மனநலன்’ என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் பார்ப்போம். குழந்தைகளுக்கான மனநல மருத்துவரான பூங்கொடி பாலா இதுபற்றி நம்மிடையே விரிவாகப் பேசினார்.

image

“குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல்நலன் எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட கூடுதல் முக்கியமானது ஆரோக்கியமான மனநலன். ஏனெனில், இந்த வயதில் அவர்களுக்கு மனநலன் நன்றாக இருந்தால்தான் அவர்களால் எதிர்காலத்தில் சமூகத்துடன் இணைந்து வாழும்போது சிக்கலற்ற வாழ்வை எதிர்கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் சிறு வயதில் வீட்டில் இருப்போரிடம், பள்ளிக்கூடத்தில் இருப்போரிடம், பக்கத்து வீட்டில் இருப்போருடன் மகிழ்ச்சியான மனநிலையில் நாட்களை கழிக்கும் குழந்தைகள், வருங்காலத்தில் நேர்மறையான வாழ்வை வாழ்வதாக யுனிசெஃப் அமைப்பே கூறியுள்ளது.

இதுவே சிறுவயதில் ஏதேனும் மோசமான சூழலிலிருந்து மீளாமல், மன அழுத்தத்துக்கு உள்ளாகி பெரியவர்களாகும் குழந்தைகள், வளர்ந்த பிறகு கற்றல், ஒழுக்கம், எமோஷனல் ஹேண்ட்லிங் ஆகிய விஷயங்களில் பின்தங்கியே இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கொரோனா கால முடக்கத்தில் குழந்தைகளின் ஆரோக்கியமான மனநலன் என்பது, மொபைலிலிருந்து அவர்களை விடுவிப்பதிலிருந்தே தொடங்குகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொதுமுடக்க காலத்தில், குழந்தைகளின் ஒரே நண்பனாக மொபைல் ஃபோன்கள் மாறிவிட்டன. மொபைல் ஃபோன் என்பது, கிட்டத்தட்ட ஒருவகை போதைதான். இதை குறிப்பிடக் காரணம், இதில் அந்தளவுக்கு ஒருவரை அடிமையாக்கும் ஆபத்து நிறைந்துள்ளது. தனக்கான போதைப்பொருள் கிடைக்காதபோது, எப்படி ஒரு நபர் ஆத்திரத்துடனும் கோபத்துடனும் எதிரிலிருப்போரை அணுகுவார்களோ அப்படித்தான் குழந்தைகளும் பெற்றோரை அணுகுவர்.

image

என்னதான் இது போதைப்பொருள் அளவுக்கு ஆபத்து என நமக்கு தெரிந்தாலும், ‘மொபைலே கொடுக்காமல் குழந்தைகளை வளர்க்க முடியாது’ என்ற நிலையை இந்த கொரோனா காலம் ஏற்படுத்திவிட்டது. எனில், என்ன செய்யலாம் என்றால், எதற்கு கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டும் மொபைல் கொடுக்க வேண்டும். அதாவது, கல்வி சார்ந்த பயன்பாடுகளும், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் நேரம் – இதற்கு மட்டும் மொபைல் கொடுக்கலாம். இந்த நேரத்திலும், பெற்றோரோ அல்லது வீட்டுப் பெரியவரோ குழந்தைக்கு அருகிலமர்ந்து அவர்களை ஓரளவு கண்காணிப்பது நல்லது. மற்றபடி விளையாடுவதற்கு, கார்ட்டூன் பார்ப்பதற்கு, கண்கவர் காட்சிகள் கொண்ட வீடியோ பார்ப்பதற்கு என எதற்கும் குழந்தைகளிடம் மொபைல் கொடுக்க வேண்டாம். படம் பார்ப்பதற்கென்று சில குழந்தைகள் மொபைல் உபயோகிப்பர். முடிந்தவரை டி.வி. திரையிடலில் குடும்பத்தோடு அமர்ந்து படம் பார்ப்பதை மட்டும் குடும்பங்கள் ஊக்குவிப்பது நல்லது.

அதேநேரம் ‘மருத்துவர் சொல்லிவிட்டார்’ என்ற அடிப்படையில் ஒரேடியாக ஒரேநாளில் தடாலடியாக குழந்தைகளிடமிருந்து மொபைலை பிடுங்கினால், அதுவும் குழந்தைகளை பாதிக்கும். அந்த பாதிப்பின் வெளிப்பாடாய், அவர்கள் அடம்பிடிக்கக்கூடும் அல்லது அழுது ஆர்ப்பாட்டம் செய்யக்கூடும்… சில நேரங்களில் கோபமாக நம்மிடையே ரியாக்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே, இதை பெற்றோர் சற்று பொறுமையாக செய்ய வேண்டும்.

முதலில் உங்கள் குழந்தை ஒரு நாளில் எவ்வளவு நேரம் மொபைல் உபயோகிக்கின்றனர், அதில் எத்தனை மணிநேரம் படிப்புக்கின்றி பிறவற்றுக்காக செலவிடுகின்றனர் என்பதைப் பாருங்கள். அதைப்பொறுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து மொபைலை உங்கள் வசம் கொண்டுவாருங்கள். நிறைய பெற்றோர், குழந்தைகளுக்கென தனியாக மொபைல் கொடுப்பதை பார்க்கமுடிகிறது. இது அநாவசியமானது என்பதால், பெற்றோர் அப்படி செய்யாமல் இருக்கவும்.

மொபைலை குழந்தைகளின்வசம் விடுவதால், அவர்கள் எதிர்கொள்ளும் / எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகள்:

* பசியின்மை – மொபைல் பார்த்துக்கொண்டே பசியை மறப்பது. இது ஒருகட்டத்தில், உணவு நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, பசியின்மைக்கு வழிவகுக்கும்.

* ஊட்டச்சத்தின்மை – நிறைவாக சாப்பிடாமல் மொபைல் பார்ப்பதால் வரும் பிரச்னை.

* கண் சார்ந்த குறைபாடுகள் – அதிக நேரம் திரை பார்ப்பதால் வரும் பிரச்னை.

* தூக்கமின்மை – படுக்கையில் மொபைல் உபயோகிப்பதால் வரக்கூடிய சிக்கல் இது.

* தூக்கத்தில் அடிக்கடி பயந்து எழுவது – அதிகம் மொபைல் உபயோகிக்கும்போது, தூங்கும்போது மூளை முழு ஓய்வுக்கு செல்வதில் சிக்கல் உருவாகும்.

* இயற்கை உபாதைகளை தவிர்ப்பது – சில குழந்தைகள் ‘இந்த ஒரு கேம்; இந்த ஒரு லெவல்’ எனக்கூறி இயற்கை உபாதைகளை தள்ளிப்போட்டு, அதனால் உடல்சார்ந்த சிக்கலை எதிர்கொள்வர்.

image

* குணநலனில் மாற்றம் – வன்முறை விளையாட்டுகளின் வெளிப்பாடாய், பெற்றோரிடம் கோபமாக பேசுவது, அதிகம் அடம்பிடிப்பது போன்றவை இதில் அடங்கும்.

* பேச்சு மொழித்திறனில் மாற்றம் – கார்ட்டூன், அனிமேஷன் வீடியோக்களில் பேசும் வார்த்தைகளை, அதே தொனியில் பேசுவர்.

* சமூகத்துடன் இணைவதில் சிக்கல் – மொபைல் மட்டுமே கதியென இருப்பதால், வெளிநபர்களுடன், நேருக்கு நேர் ஒருவரை முகம் பார்த்து பேசுவதில் சிக்கல் உருவாகும்.

* ஒழுக்கமின்மை – சாப்பிடுவது, தூங்குவது, இயற்கை உபாதை கழிப்பது என எதிலுமே நேர வழிமுறையை கடைபிடிக்காத காரணத்தால், எவ்வித ஒழுக்க வரைமுறையுமின்றி இயல்பு வாழ்க்கையில் செயல்படுவர். இதனால் சொல் பேச்சு கேட்காமை – தாமதமாக வேலை செய்வது – நேரத்துக்குள் வேலையை முடிக்காதது என்றாகிவிடுவர்.

மேற்குறிப்பிட்ட இப்பிரச்னைகளையெல்லாம் தடுக்க, மிகச்சிறந்த வழி மொபைலிலிருந்து அவர்களை விடுவிப்பதுதான். ஆகவே அதை பெற்றோர் செய்ய வேண்டும். இவற்றுடன் கூடுதலாக அவர்கள் சில விஷயங்களையும் செய்ய வேண்டும். அதில் முதன்மையானது, குழந்தையுடன் அமர்ந்து பேச வேண்டும். அவர்களுக்கு போர் அடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். வேலைக்கு செல்லும் பெற்றோர் எனும்போது, மாலை மற்றும் இரவு வேளையில் அமர்ந்து பேசவேண்டும்.

அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவை – ‘குழந்தை தூங்கும்போது அவர்களுடன் இருந்து, அந்தநேரத்தில் அவர்கள் மொபைல் பயன்பாட்டை தவிர்ப்பது; பெயின்டிங், லூடோ, க்ளே, பில்டிங் ப்ளாக்ஸ் என ஏதாவதொரு விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்துவது; சிறு சிறு வீட்டு வேலைகளான அவர்களின் தட்டை அவர்களே கழுவிக்கொள்வது, சுயமாக குளிப்பது, பல் துலக்குவது போன்றவற்றை பெற்றோரின் மேற்பார்வையில் செய்ய பழக்கப்படுத்துவது’ போன்றவை அடங்கும்.

image

வீட்டுக்கு வெளியில் விளையாட இடமிருந்தால், அண்டைவீட்டு குழந்தைகளுடன் இணைந்து இவர்களை ஓடியாடி விளையாடகூட அனுமதிக்கலாம். சில குழந்தைகள் மொட்டை மாடிக்கு விளையாட செல்வதுண்டு. மொட்டை மாடி, சற்று ஆபத்தான பகுதி என்பதால் அதைமட்டும் தவிர்ப்பது நல்லது. இவை எல்லாவற்றுக்கும் பிறகு, அன்றைய ஆன்லைன் க்ளாஸில் நடத்திய பாடங்களை புத்தகம் வைத்து அவர்களை படிக்க சொல்லவும். இதுவே, அவர்களின் நேரத்தை நிறைத்துவிடும்.

இப்படியாக மொபைலின்வசமிருந்து நம் பிள்ளைகளை மீட்டெடுத்து, வீட்டுக்குள்ளும் அவர்கள் பிஸியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும்போது, கொரோனா காலத்திலும் நம் பிஞ்சுகளின் மனநலனை நம்மால் பாதுகாக்க முடியும்” என்கிறார் குழந்தைகளுக்கான மனநல மருத்துவரான பூங்கொடி பாலா.

இந்த அத்தியாயத்தில், குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்த்தோம். தொடர்ந்து, அவர்களின் பிற நலன்கள், பிற பிரச்னைகளுக்கான தீர்வுகள், கையாளும் வழி உள்ளிட்டவற்றை காண்போம்.

(இன்னும் காப்போம்…)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.