2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளது.

2020 -ல், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – 13,618

2021 -ல், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – 19,953

அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியல்:

முதலிடம் – உத்தரப் பிரதேசம் -10,084 குற்றங்கள்

இரண்டாமிடம் – டெல்லி – 2,147 குற்றங்கள்

ஹரியானா – 995 குற்றங்கள்

மகாராஷ்டிரா- 974 குற்றங்கள்

கர்நாடகா- 467 குற்றங்கள்

தமிழ்நாடு – 375 குற்றங்கள்

வளர்ந்து வரும் இந்தியாவில், தினம் தேய்கிறது பெண்களின் பாதுகாப்பும், அதன்வழி சுதந்திரமும். இரவு,பகல், வீடு, வேலை என 360 கோணத்திலும் பெண்களுக்கான அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இளமை, மூப்பு என வேறுபாடு இருப்பதில்லை. குழந்தை, குமரி என வன்முறையாளர்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

image

இந்தியாவில் தினம் பதிவாகும் பெண்களுக்கெதிரான நூற்றுக்கணக்கான குற்றச்சம்பவங்களில் பெண்களின் பெயர்களில் மட்டுமே மாற்றம் இருக்கிறது. அத்தகைய நிகழ்வுகளோ தொடர்கதையாக இருக்கின்றன. ஒவ்வொரு செய்தியையும் மீண்டுமொரு பெண் என்ற வகையிலேயே இந்தியா எதிர்கொள்கிறது.

சமீபத்தில், தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 2020-ஐ காட்டிலும், 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2021-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

image

இந்நிலையில், அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2021-ல் உத்தரப்பிரதேசத்தில் 8 மாதங்களில் மட்டும் 10,084 குற்றங்கள் பதிவாகியுள்ளன.கடந்த அக்டோபர் மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ‘க்ரைம் இன் இந்தியா’ ஆய்வு முடிவுகளின்படி, கடந்த 4 வருடங்களில் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 66.7% அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2,147 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில் 995 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 974 குற்றங்களும், கர்நாடகாவில் 467 குற்றங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 8 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 375 குற்றங்கள் பதிவாகியுள்ளது.இந்த எண்ணிக்கை குறைந்து, பள்ளிக்கும், கல்லூரிக்கும், வேலைக்கும், நீதிகேட்டு – காவல்நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் செல்லும் பெண்கள் நிச்சயம் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என்பதே சுதந்திர இந்திய அரசு, இந்தியப் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய உறுதி.

image

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்னென்ன சட்டங்கள் உள்ளன?

இது தொடர்பாக வழக்கறிஞர், சீனி சையதம்மா கூறுகையில், ”பெண்கள் என எடுத்துக்கொண்டால் அதை 3 விதமாக பார்க்கலாம். குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள். இதில் குழந்தைகள் என எடுத்துகொண்டால், குழந்தை திருமண தடுப்புச்சட்டம் , பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கிறது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு பணி இடங்களில் பாதுகாப்புக்கென சட்டம் உள்ளது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதில் 20% பெண்களுக்கு மட்டுமே விழிப்புணர்வு உள்ளது; 80% பெண்களிடம் விழிப்புணர்வு இல்லை. கல்வி நிலையங்களிலேயே பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் தொடர்பாக வழக்கறிஞர் திலகவதி பேசுகையில், ”7,036 குற்றங்கள் வாழ்வுரிமை தொடர்பாக பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறையால் 4,289 குற்றங்களும் வரதட்சணையால் 2,923 குற்றங்களும், பெண்களின் கண்ணியம் தொடர்பாக 1022 குற்றங்களும், சைபர் கிரைமில் 585 குற்றங்களும் பெண்களுக்கு எதிராக அரங்கேறியுள்ளன. தற்போது, புகார் கொடுக்கும் அளவுக்கான தைரியம் ஏற்பட்டிருப்பது சாதகமான விஷயம். நமக்கு எதிராக நடப்பது வன்முறை என்பது கூட அந்த பெண்களுக்கு தெரிவதில்லை. தெரிந்தால் தானே காவல்துறை, நீதித்துறையை அவர்களால் அணுக முடியும். நிறைய பெண்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வே இல்லை.

image

‘என் கணவர் என்னை அடித்தார். அது கலாச்சாரம்’ என்று கருதுவதிலிருந்து வெளியேறி புகார் கொடுக்க பெண்கள் முன்வருவது நல்ல விஷயம். இருந்தாலும் கடந்தாண்டை விட குற்றம் இந்தாண்டு அதிகரித்திருப்பதை ஏற்க முடியாது. கணவன், மனைவியை அடிப்பது சாதாரணமான ஒன்று என இந்த சமூகம் தொடர்ந்து கற்பித்து வருகிறது. இதனால் அந்த பெண் தன் மீதான ஒடுக்குமுறை குறித்து அறியாமலேயே பாதிக்கப்படுகிறார். சாலையில், பேருந்தில், பொது வெளியில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் வெளிக்கொணர்வதில்லை. காரணம், அது தனக்கான அவமானமாக கருதுகிறார்கள். இதை தவிர்த்துவிட்டு, பெண்கள் தன் மீதான கொடுமைகள் குறித்து புகார் கொடுக்க முன்வந்தால் இதைவிட அதிக குற்ற எண்ணிக்கைகள் வெளியேவரலாம்.

இந்த சமூகம் பெண்ணை ஒரு உடமையாக பார்க்கிறது. பெண் என்பவள் தனக்கான உடைமை, ஒரு பொம்மை போல என கருதி அடிக்கலாம் அதற்கு உரிமை இருக்கிறது என கருதுகிறார்கள். இதை சாதாரணமான விஷயமாக கருதுகிறார்கள். இது களையப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது” என்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.