அமெரிக்காவின் 9/11 தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவணப்படம் ஒன்றில் பேசியுள்ளார். இச்சம்பவம் நடந்த 20வது ஆண்டான இன்று அவரது அந்த பேட்டியில் என்ன பேசினார் என்பது குறித்து பார்ப்போம். 

2001, செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்கா நேரப்படி காலை 8.46 மணிக்கு நியூயார்க் நகரின் அடையாளமான உலகவர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரம் மீது விமானம் ஒன்று மோதியது. என்ன நடக்கிறது என தெரியாமல் அமெரிக்கர்கள் நிலைகுலைந்து போயினர். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்த 17 நிமிடங்களில் மற்றொரு விமானம் உலக வர்த்தக மைய கட்டடத்தின் தெற்கு கோபுரத்தில் மோதியது. கட்டடம் தீப்பற்றி எரிந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் மீது ஒரு விமானம் மோதியது. பென்சில்வேனியா பகுதியில் வெட்டவெளியில் விமானம் ஒன்று மோதி கீழே விழுந்தது. அமெரிக்கா மட்டுமல்ல உலகமே இந்தக் காட்சிகளை கண்டு உறைந்து போனது.

image

இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலக வல்லரசின் கருப்பு தினமாக இது அமைந்தது.அமெரிக்காவின் ருத்ரதாண்டவத்தால் அல்கொய்தா கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. அதன் தலைவர் ஒசாமா பின்லேடன் 2011ம் ஆண்டு மேமாதம் பாகிஸ்தானில் அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் மட்டும் நிறைவு பெறவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்களிடமே ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவால் இன்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். உலக அரசியலும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கே திரும்பியுள்ளது. அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ஜார்ஜ் புஷ்-ன் முடிவு வரலாற்றின் போக்கை மாற்றியது.

அன்று என்ன நடந்தது என்பது குறித்து 9/11 என்ற ஆவணப்படத்தில் பேசிய ஜார்ஜ் புஷ், “நான் செய்வது சரி என்று நினைக்கிறேன். நான் சில பெரிய முடிவுகளை எடுத்தேன். அமெரிக்கா போரில் இருப்பது போல எண்ணி தொடங்கினேன். மேலும் அந்த முடிவுகள் கோபத்தினால் எடுக்கப்பட்டவை அல்ல, அவை அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக ஒரு இலக்கை மனதில் கொண்டு எடுக்கப்பட்டது. நான் செய்தது சரி என்று நினைக்கிறேன். இதையடுத்து அமெரிக்கா மீது வேறு எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. எனவே நான் எடுத்த முடிவுகள் சரியானவை. முதல் விமானம் விபத்து, இரண்டாவது விமானம் மோதல் தாக்குதல், மூன்றாவது விமானம் மோதியது போருக்கான அறிவிப்பு”என்றார் புஷ்.

image

மேலும் அவர் பேசுகையில், ”நான் முதலில் அது பைலட்டின் தவறு என்று தான் நினைத்தேன். என்னால் அப்போது வேறு எதைப்பற்றியும் யோசிக்க தோன்றவில்லை” என்றார். சம்பவத்தன்று புஷ் புளோரிடாவின் சரசோட்டாவில் உள்ள எம்மா இ புக்கர் தொடக்க விழாவில், குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி அப்போதைய வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஆண்டி கார்டால் மூலம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு தெரிவிக்கப்பட்டது.

“ஆண்டி கார்ட் என் பின்னால் வந்து, ‘இரண்டாவது விமானம் இரண்டாவது கோபுரத்தைத் தாக்கிவிட்டது. அமெரிக்கா தாக்குதலில் உள்ளது’ என்று கூறினார். அப்போது நான் ஒரு குழந்தை படிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்”என்று புஷ் நினைவு கூர்ந்தார்.

image

”அப்போது நான் அங்கிருந்தவர்கள் முகத்தில் பீதியைப்பார்த்தேன். அவர்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்தேன். இது போன்ற பிரச்னையான சூழலில், பதற்றமடையாமல் இருப்பது முக்கியம். அதனால், அங்கிருந்து வெளியேற சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தேன். நாடக்கத்தனமாக எதையும் செய்ய விரும்பவில்லை. நான் நாற்காலியை விட்டு எழுந்து குழந்தைகள் நிறைந்த வகுப்பறையை பயமுறுத்த விரும்பவில்லை, அதனால் நான் காத்திருந்தேன்” என்றார்.

“அவரது முகம் ஒருவித இறுக்கத்துடன் இருப்பதை பார்தேன். கிட்டத்தட்ட ஒரு கணம் அவரது கண்களில் ஒரு பீதி இருந்தது. அந்த நிகழ்வை கடந்து செல்ல முயற்சிப்பதில் உண்மையில் அவர் கவனமாக இருந்தார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்று ப்ளூம்பெர்க் நிருபர் ரிச்சர்ட் கெயில் ஆவணப்படத்தில் கூறினார். இந்த தாக்குதல்களை “தீய, வெறுக்கத்தக்க பயங்கரவாத செயல்கள்” என்று கண்டனம் செய்த புஷ், “இந்த செயல்களைச் செய்த பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.