சார்பட்டா பரம்பரை’யில் கபிலனையே கதிகலங்க வைக்கும் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன். இப்போது இவர் பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’, புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சார்பட்டா பரம்பரையில் கபிலனுக்கு எப்படி ரங்கன் வாத்தியாரோ, அதேபோல் வேம்புலியான இவருக்கு துரைக்கண்ணு வாத்தியார். அப்படியிருக்கும்போது, ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் குறித்து கேட்காமல் இருக்கமுடியுமா?  நாம் கேட்டபோது  உற்சாகமுடன் பேசினார்.

 ”என்னோட பூர்வீகம் கேரள மாநிலம் திருச்சூர். சிறுவயதிலேயே குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டோம். அதனால் நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே மும்பைதான். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு உணவுக்குகூட கஷ்டப்பட்டோம். குடும்பச் சூழலால் அம்மா சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் செவிலியராக பணிபுரிய எங்களை சிறுவயதிலேயே அப்பாவிடம் விட்டுவிட்டுச் சென்றார். அப்பாவுக்கு ஒரு கல்லூரியில் புரொஃபசர் பணி கிடைத்தது. பின்பு, கல்லூரியின் துணை முதல்வராகவும் ஆனார். எங்களுக்காகவே அப்பாவும் அம்மாவும் பிரிந்து கடுமையாக உழைத்தார்கள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் எங்களைச் சந்திக்க வருவார் அம்மா. நாங்கள் கல்லூரி படிப்பு முடிக்கும்போதுதான் பணியிலிருந்து விலகி எங்களுடன் வந்தார். அதுவரை, அப்பாதான் முழுக்க எங்களைப் பார்த்துக்கொண்டார்: வீட்டிலேயே படிப்பையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். அதனால், எனக்கு முதலில் பிடித்த டீச்சர் எனது அப்பா ஜான் கொக்கன்தான். எனது பெயர் அனிஷ். அப்பா பெயரையே முதன்மையாக்கிக்கொண்டேன். அப்பா ஒரு அம்மாவாகவும் இருந்து எங்களை வளர்த்தது மட்டுமல்லாமல் வாழ்க்கை பாடத்தையும் கற்றுக்கொடுத்தார். ”நாம ரொம்ப சிம்பிள். நம்மக்கிட்ட ஒன்னுமே இல்லை. அம்மா  உங்களுக்காகத்தான் வெளிநாட்டுக்குச் சென்று உழைக்கிறார். நாமெல்லாம் நல்லா படிச்சி நல்லா வாழணும். நாம் எங்கிருந்து வந்தோம்? வாழ்க்கையை தொடங்கும்போது யாரெல்லாம் நமக்கு உதவினார்கள்? என்பதை மறக்கவே கூடாது”  என்பதுதான் அப்பா எங்களுக்குக்  கற்றுக்கொடுத்தப் பாடம். அதனால், அப்பாதான் என் ஆசிரியர் வழிகாட்டி எல்லாமே.

image

 அடுத்ததாக, நான்காம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை டியூஷன் சென்ற ஜெயக்குமார் சார் பிடிக்கும். கேரளாவிலிருந்து மும்பை சென்றதால் மராத்தி, இந்தி எனக்கு புதிய மொழி. அங்கு பள்ளியில் சேர்ந்தபோது ஒவ்வொரு வருடத்தையும் எப்படியாவது படித்து பாஸ் செய்யவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். மொழி தெரியாததால் குறிப்பிட்டு என் பள்ளியின் ஆசிரியர்களை நினைவு வைத்து சொல்ல முடியவில்லை. என் நினைவில் இருப்பதெல்லாம் டியூஷன் படித்த ஜெயக்குமார் சார்தான். எனக்கு எப்பவும் ஸ்பெஷல். கொஞ்சம் வித்தியாசமானவர். அவரிடம் கணிதம் மற்றும் மராத்தி, இந்தி மொழி கற்றுக்கொள்ளச் சென்றேன்.  டீச்சராக இருந்தாலும் அவருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். எப்போது டியூஷன் சென்றாலும் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் டிவியைப் போட்டுவிட்டு படம் பார்க்க வைத்தப்பிறகே டியூஷன் எடுக்க ஆரம்பிப்பார்.  இந்தி, தெலுங்கு, தமிழ் படங்கள் எல்லாம் பார்ப்போம். ‘நாயகன்’ படமும் அப்போதுதான் பார்த்தேன். ஆனால், ’சார்பட்டா பரம்பரை’ பார்த்துவிட்டு கமல்ஹாசன் சார் அழைத்து பாராட்டியது மறக்க முடியாதது. ஜெயக்குமார் சாரிடம்  இருந்துதான் எனக்கு சினிமா பிடிக்க ஆரம்பித்தது.

image

என் மூன்றாவது, ஆசிரியர் அஜித் சார். வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தேன். பெரிய நடிகராக இருந்தாலும் எளிமையாகப் பழகி ஊக்கப்படுத்தினார். ‘நமக்கான நேரம் வரும் வரை காத்திருக்கவேண்டும்’ என்றார். அவர் சொன்ன நேரம் இப்போதுதான் வந்தது. அதனால், அஜித் சாரும் எனக்கு ஆசிரியர்தான்” என்கிறார் உற்சாகமுடன்.

 

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.