நாகரீக அரசியல்… பக்குவமான பேச்சு இதுதான் பாஜக சட்டமன்றக்குழுத் தலைவரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனின் அடையாளம். ஆசிரியர் தினத்தில் ‘உங்களுக்குப் பிடித்த ஆசிரியர்’ யார் என்று கேட்டால் ”திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியர்கள்தான் தன்  வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்” என்று மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.

 “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோயில். அரசியலுக்குத்தான் திருநெல்வேலி. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அரசு பெண்பாட சாலையிலும், எட்டாம் வகுப்புவரை மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் நாகர்கோயிலில் படித்தேன். அதன்பிறகு, எங்கள் குடும்பம் திருச்சியில் ஓட்டல் வைத்திருந்ததால், அங்கு சென்று படிக்கும் சூழல் உருவானது. திருச்சி பாலக்குறிச்சி செயிண்ட் ஜேம்ஸ்  உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை படித்தேன். திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் பள்ளியில் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய மூன்று ஆசிரியர்கள் குறித்து சொல்லியே ஆகவேண்டும். எங்கள் பி.டி டீச்சர் பத்மநாபன் சார், எனக்கு ரொம்பப் பிடித்தவர். அனைத்து மாணவர்கள் மீதும் அக்கறையாக இருப்பவர், என்மீது கூடுதல் அக்கறையாய் இருப்பார். ‘சாப்ட்டியாடா’ என்று கேட்பதோடு சாப்பிடவில்லை என்றால், அவருடைய உணவையே கொடுத்து சாப்பிட வைப்பார். அப்படியொரு அன்பானவர். அடுத்ததாக, எங்கள் 9 ஆம் வகுப்பு  கணித ஆசிரியர் ஞானப்பிரகாசம் சார் பிடிக்கும். பாடம் நடத்தும்போதே கேள்விக் கேட்டுக்கொண்டே இருப்பார். அதுவே, எங்களுக்கு கணிதத்தின் மீது ஈடுபாட்டை வரவைத்தது. அடுத்தது, எங்கள் ஆங்கில ஆசிரியர் சுவாமிநாதன் சாரைப்  பிடிக்கும். எனக்கு ஆங்கில அறிவு கொஞ்சம் குறைவுதான். அதனால், புரியும்படி நேரம் எடுத்துக்கொண்டாலும் 10-ஆம் வகுப்பில் இலக்கணத்தை அக்கறையோடு சொல்லிக் கொடுப்பார். மீண்டும் இவர்களிடம் படிக்க முடியாதா என்ற ஏக்கம் இப்போதுகூட வருவதுண்டு. வரலாறும் அறிவியலும் தமிழும்தான் எனக்கு பிடித்தப் பாடங்கள். பிடித்ததாலேயே அந்தப் பாடங்களில், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன்.,ஆசிரியர்களைப் பார்த்து நான் என்றும் பயந்ததில்லை. அவர்களும் என்னிடம் கண்டிப்பாக இருந்ததில்லை. ஏனென்றால், பள்ளியில் சேட்டையெல்லாம் செய்யமாட்டேன். அதனாலேயே, என்மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள்”  என்று தனது பள்ளிகால ஆசிரியர்களை நினைவுக் கூர்ந்தவர் கல்லூரியில் பிடித்த ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

image

     “பி.யூ.சி மற்றும் பி.எஸ்.சி படிப்பை அறிஞர் அண்ணா கல்லூரி ஆரல்வாய் மொழியில் படித்தேன். அங்கு கெமிஸ்ட்ரி ஆசிரியர் ராஜதிருமேனி சாரும் மறக்க முடியாதவர். அக்கறையோடு பாடங்களைச் சொல்லிக்கொடுப்பார். ப்ராக்டிகல் எல்லாம் புரியும்படி விளங்க வைப்பார். அவரிடமிருந்து ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுக்கொண்டேன். சட்டை பட்டனையெல்லாம் கழட்டிவிடக்கூடாது. வகுப்புக்கு நீட்டாக  வரவேண்டும் என்று நினைப்பார். இப்படி, ஒவ்வொரு ஆசிரியரிடமும் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவன்தான். ஆனாலும், ஆசிரியர்கள் அக்கறை செலுத்தி என்னை கல்லூரி படிப்புவரை முடிக்க வைத்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, எனது மகள் திருமண வரவேற்பு அம்மா தலைமையில் சென்னையிலும் திருநெல்வேலியிலும் நடந்தது. எனது ஆசிரியர்களையும் நேரில் சென்று மகள் திருமணத்திற்கு அழைத்திருந்தேன். நான் படித்த பள்ளி கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் இருக்கும். எனது ஆசிரியர்களும் நண்பர்களும் ஐந்தாறு வேன் பிடித்துக்கொண்டு வந்து நெகிழ வைத்துவிட்டார்கள். வரவேற்பில் 1 லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்டார்கள். அவ்வளவுக் கூட்டத்திலும் நானும் எனது மகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் எங்கள் ஆசிரியர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம். அதேமாதிரி, என் கல்லூரி ஆசிரியர்களும் மகள் திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார்கள். இப்போதுவரை, அனைத்து ஆசிரியர்களுடனும் நல்ல தொடர்பில் இருக்கிறேன்.

எங்கள் பி.டி சாரின் மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டியதோடு டீச்சர் டிரெய்னிங் படிக்க இடம் வாங்கிக்கொடுத்தேன். அமைச்சரானதும் அவரது வீட்டிற்கேச் சென்று ஆசிர்வாதம் வாங்கினேன். மேலும், நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்புவரை படித்த பள்ளிக்கு சின்ன ஆடிட்டோரியம் கட்டிக்கொடுத்தேன். ஆசிரியர்கள் எங்கள் காலத்தில் தவறு செய்தால் அடிப்பார்கள். கண்டிப்பாக இருந்தாலும்கூட தாய்ப்பாசத்துடன் இருப்பார்கள். நாங்களும் மிகுந்த மரியாதையுடன் பழகியிருக்கோம். ஆனால், இப்போது எல்லோரும் சேர்ந்தே படத்திற்குச் செல்கிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம். குருவுக்கு அடுத்துதான் தெய்வம் வருகிறது. ஆசிரியர்களை கடவுளுக்கும் மேலாக  போற்றவேண்டும்” என்கிறார், நெகிழ்ச்சியுடன்.

 

 

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.