மாறா வருகிறார் என மொத்த அலுவலகமும் பரபரப்பாக இருந்தது. மாறாவின் சினிமா பயணதுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமோ என மார்க்ஸுக்கு கவலையாயிருந்தது. டிவிக்கு வருவதே சினிமாக்காரர்களின் தோல்வி என உலகம் நினைக்கிறபோது, அந்த நிகழ்ச்சியும் தோற்றுப் போனால் அது இன்னும் மாறாவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது.

மாறாவை சம்மதிக்க வைக்க தாங்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் அர்த்தமற்றதாக மாறிவிட்டதென்கிற வருத்தத்தில் இருந்தாள் திவ்யா. மாறாவை எப்படி சமாளிப்பது என்கிற கவலை தாட்சாவுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எப்போதும் போல மேனன் சின்ன புன்னகையுடன் அமைதியாகயிருந்தார்.

ஒட்டுமொத்த அலுவலகமும் மாறாவின் கோபத்தை எதிர்கொள்ள தயாராக காத்துக் கொண்டிருந்தது. ஆனால் மாறாவின் வருகை அவர்கள் எதிர்பார்த்ததை போலின்றி முற்றிலும் வேறொன்றாகயிருந்தது.

ஆளுயர கேக்குடன் ஆரஞ்ச் டிவிக்குள் மாறா நுழைவார் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பின்னால் டப்பா டப்பாவாக இனிப்புக்களை சுமந்தபடி மாறாவின் ஆட்கள் உள்ளே வந்தார்கள். கான்ஃபரன்ஸ் ரூமில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு ஆரஞ்சு டிவியே கொண்டாட்டமாக மாறியது. வெற்றி பெறுவதற்கான முதல் படி வெற்றிபெற்றது போல தோற்றம் தருவது என்கிற பாணியில் இருந்தார் மாறா.

கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் கலைந்து செல்ல முக்கியமான நபர்கள் மட்டும் கான்ஃபரன்ஸ் அறையில் அமர்ந்திருந்தார்கள்.

இடியட் பாக்ஸ் | மாறா

“இப்ப சொல்லுங்க… பெரிய ஃபிளாப்பா நம்ம ஷோ?” என கேட்டார் மாறா.

“24 வார நிகழ்ச்சி இது. ஒரு வாரம் தான் முடிஞ்சிருக்கு. இப்பவே இதை வெற்றி தோல்வின்னு சொல்ல முடியாது. நம்ம எதிர்பார்த்த மாதிரி இந்த ஷோ ஆரம்பிக்கலைன்னு வேணா சொல்லலாம்” என்றாள் தாட்சா.

“அவ்வளவுதான… அதுக்கு ஏன் எல்லாரும் கவலையா இருக்கீங்க” என்றார் மாறா.

“இல்ல சார் எங்களை நம்பி இந்த ஷோ பண்றீங்க… அது சரியா போகலன்றதால எங்களுக்கு கில்ட்டியா இருக்கு” என்றான் மார்க்ஸ்.

மாறா சிரித்தார்.

“இதைவிட பெரிய பெரிய தோல்வி எல்லாம் நான் பார்த்திருக்கேன். இது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. விழாம இருக்கிறது வெற்றி இல்ல. விழுந்ததும் எவ்வளவு வேகமாக எந்திரிக்கிறோம்றதுதான் வெற்றி. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்றார் மாறா.

“உலகம் பூரா சக்ஸஸ்புல்லான பார்மேட்தான்…. ஆனா அத தமிழ்ல பண்றப்ப அதுல ஏதோ ஒரு எக்ஸ்ட்ரா விஷயம் தேவைப்படுது” என்றார் மேனன்

“கரெக்ட் சார். அது என்னன்னு கண்டுபிடிப்போம். அதை நிகழ்ச்சியில சேர்ப்போம். அதுக்கப்புறம் பார்ப்போம்” என்றான் மாறா.

அனைவரும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தனர்.

“அப்புறம் ரேட்டிங் கம்மியான விளம்பரங்கள் கம்மியாகும் இல்லையா?”

“ஆமா” என்றாள் தாட்சா.

“ஒரு வேளை நினைச்ச மாதிரி விளம்பரங்கள் வரலைன்னா என்னோட சம்பளத்தை நான் பாதியா குறைச்சிக்கிறேன்”

அறையில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.

“தோல்விக்கு நானும் பொறுப்பு ஏத்துக்கணும் இல்லையா” என சிரித்தார் மாறா.

“நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே மாறா” என்றார் மேனன்.

மாறா புன்னகையுடன் தலையசைத்தார்.

“அதிர்ஷ்டம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும், உழைப்பு அதை தக்கவச்சுக்க உதவும். ஆனா, அதைத்தாண்டி நல்ல மனசு இருந்தா மட்டும் தான் பெரிய வெற்றிகள் தேடிவரும்” என்றார் மேனன்.

மாறா புன்னகைத்தார்.

“எனக்கு கடவுள் மேல நம்பிக்கை பெருசா கிடையாது. ஆனா சில நம்பிக்கைகள்தான் எனக்கு கடவுள். ரொம்ப சிம்பிள்தான் அது. நல்லது பண்ணா நல்லது நடக்கும். கெட்டது பண்ணா கெட்டது நடந்தே தீரும். தட்ஸ் ஆல். இந்த ஷோ மேல எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ மாறா பண்ற ஷோ தோத்து போகாதுன்ற நம்பிக்கை எனக்கு இப்ப வருது” என்றார் மேனன்.

“தேங்ஸ் சார்” என்றார் மாறா.

மேனன் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அவரை அப்படி அனைவரும் பார்ப்பது அதுவே முதல் தடவை.

“இந்த ஷோல என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்” என கேட்டாள் தாட்சா.

“மேம் ஷோவுல ஒரு ரசிகையா நான் மாறாவை மிஸ் பண்றேன்” என்றாள் ஏஞ்சல்.

அனைவரும் திரும்பி ஏஞ்சலை பார்த்தார்கள்.

“மாறான்னாலே ஃபன் தான். ஆனா இந்த ஷோவை மாறா ரொம்ப சீரியசா பிரசன்ட் பண்ற மாதிரி இருக்கு. கோட் சூட்டோட சீரியசா பேசிட்டு அவரு மாறா மாதிரியே இல்லை. ஜாலியா சிரிச்சுட்டு வர்றவங்களோட டான்ஸ் ஆடி பாட்டு பாடி கலாட்டா பண்ணி கட்டிப்பிடிச்சு கண் கலங்கி அப்படி நான் படங்கள்ல பாக்குற ஒரு லைவ்லியான மாறாவை நான் இதுல மிஸ் பண்றேன்” என்றாள் ஏஞ்சல்.

“எக்ஸாக்ட்லி இதைத்தான் நானும் யோசிச்சேன்” என்றார் மாறா.

“இந்த ஃபார்மேட்டுக்கு அது செட்டாகுமா?” என சந்தேகமாக கேட்டாள் திவ்யா.

“முயற்சி பண்ணி பாக்கலாம்னு எனக்கு தோணுது” என்றார் மேனன்.

“விடுங்க பின்னிரலாம்” என சிரித்தார் மாறா.

“எல்லாரும் பணம் ஜெயிக்கிறாங்க… அந்த பணம் அவங்களுக்கு எவ்வளவு தேவையா இருக்குன்னு ஒவ்வொருத்தரும் விளையாடுறதுக்கு

முன்னால ஒரு ஸ்டோரி பண்ணலாம்” என்றார் நெல்லையப்பன்

“ரொம்ப எமோஷனலா இருக்கும் நல்ல ஐடியா” என்றார் மேனன்.

“வாரம் வாரம் ஒரு எபிசோட் மட்டும் டிவி ஃபிலிம் செலிபிரிட்டிகள் வச்சு பண்ணலாம்” என்றாள் தாட்சா.

“கண்டிப்பா பண்ணலாம்… நானே என்னோட கோ ஸ்டார்ஸ் நிறைய பேரை கூட்டிட்டு வரேன்” என்றார் மாறா. ஆளுக்கொரு ஐடியாக்களை அள்ளி வீச கடந்த வார தோல்வி மறைந்துபோய் அடுத்த வாரத்துக்கான நம்பிக்கை துளிர் விட தொடங்கியது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பலமே அது தான். சாதாரணமாக போய் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி எங்கிருந்து வேண்டுமானாலும் சட்டென உயரம் போக முடியும். இடைவிடாத உழைப்பும் முயற்சியும் தான் முக்கியம்.

இடியட் பாக்ஸ் – மேனன், தாட்சா

“உங்களுக்கு எல்லாம் நம்பிக்கை குடுக்கனும்னுதான் நான் கிளம்பி வந்தேன். ஆனா எனக்கு நீங்க எல்லாம் பெரிய நம்பிக்கை குடுத்திருக்கீங்க தேங்ஸ்” என்றார் மாறா.

அனைவரும் உற்சாகமும் நம்பிக்கையுமாக கலைந்தார்கள்.

“என்ன மேனன் நீங்க கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட மாதிரி இருந்திச்சு” என்றாள் தாட்சா.

“நேர்மையானவங்களை பார்க்கும்போது கொஞ்சம் அப்படி ஆயிடுது” என சிரித்தார் மேனன்.

“உங்களைப் பார்க்கும் போது அடிக்கடி எனக்கும் அப்படி தோணியிருக்கு” என்றாள் தாட்சா.

மேனன் வெட்கத்துடன் புன்னகைத்தார்.

“உங்களோட பலமே அதுதான் மேனன். புத்திசாலிங்க எப்பவும்

கொஞ்சம் ஸ்டிஃப்பா தான் இருப்பாங்க. நீங்க அப்படியில்ல.

பெரிய பெரிய முடிவுகள எடுப்பீங்க. ஆனா மனச எப்பவும் குழந்தை மாதிரி வச்சிருப்பீங்க. இந்த காம்பினேஷன் தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறதுக்கு காரணம்” என்றாள் தாட்சா.

மேனன் புன்னகையுடன் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டார்

மார்க்ஸும் திவ்யாவும் காபி ஷாப் ஒன்றில் அமர்ந்திருந்தார்கள்.

“ஏஞ்சலோட ஐடியா வொர்க் அவுட்ட் ஆகும்னு எனக்கு தோணல” என்றாள் திவ்யா.

“பார்க்கலாம்” என்றான் மார்க்ஸ்.

“பார்க்கலாம்னா” என கேட்ட திவ்யாவின் குரலில் லேசான கோபம் ஒளிந்திருந்தது.

“இல்ல திவ்யா… ட்ரை பண்ணி பார்க்கலாம்னு தோணுது” என்றான் மார்க்ஸ்.

“உனக்கு அவ ஐடியா வொர்க்காகும்னு தோணுதா?” என கேட்டாள் திவ்யா.

“ஆமா” என்றான் மார்க்ஸ். திவ்யாவின் முகம் மாறியது.

“கோச்சுக்காத திவ்யா… என் மனசுக்கு தோன்றதை நான் சொல்றேன்” என்றான் மார்க்ஸ்.

“திடீர்னு ஏஞ்சலுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கே என்ன விஷயம்” என்றாள் திவ்யா.

“பார்த்தியா… சம்பந்தம் இல்லாம எதுக்கு இதயும் அதயும் முடிச்சு போடுற?”

“அது ஒரு இன்டர்நேஷனல் ஃபார்மேட்… அத மாத்துறதுக்கு அந்த டீம் ஒத்துக்க மாட்டாங்க”

மார்க்ஸ் மெளனமாக அவளை பார்த்தான்.

இடியட் பாக்ஸ்

“அதான் வாய் வரைக்கும் வார்த்தை வந்திருச்சுல்ல… எதுக்கு முழுங்குற? நினைக்கிறத சொல்லு” என்றாள் திவ்யா.

“இப்ப நான் எது சொன்னாலும் உனக்கு கோபம் வரும். வேணாம்…”

“ஓ… இதுல பழி என் மேலயா… உனக்கு என்ன தோணுதோ அத ஒளிக்காம சொல்லு”

“திவ்யா… நீ இப்படி எல்லாம் பேசக்கூடிய ஆள் இல்லையே”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மார்க்ஸ்”

“திவ்யா… ஏஞ்சல் சொன்ன ஐடியா வொர்க் ஆகும்னு நான் நம்புறேன். நாம சொல்ற சேஞ்சஸை புரடியூசர்ஸ் ஏத்துகிட்டு தான் ஆகனும். இல்லைன்னா ரெண்டு பேருக்கும் நஷ்டம்தான். இந்த ஃபார்மேட் இங்க வொர்க்கானாதான் மலையாளம், தெலுங்கு, கன்னடா எல்லாம் அவங்க விக்க முடியும்”

திவ்யா அவனையே தீர்க்கமாக பார்த்தாள்.

“என்ன பாக்குற?”

“அப்ப என்ன இந்த விஷயத்தில நீ சப்போர்ட் பண்ண மாட்ட இல்ல?”

“என்ன நீ இப்படி எல்லாம் பேசுற? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? எனக்கு சரின்னு தோன்ற ஒரு விஷயத்தை இல்லன்னு உனக்காக பொய் சொல்ல கூடாதில்ல”

“ஒஹோ” என்கிற பாவனையில் திவ்யா தலையாட்டினாள்.

“ஏஞ்சல் சொல்ற மாதிரி இந்த ஷோ பண்ணா இப்ப வர்ற ரேட்டிங் கூட வராது. எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்றீங்க… அதுக்காக வருத்தப்படப் போறீங்க… நான் ஒரு புரோகிராமிங் ஹெட். ஆனாலும் நான் சொல்றதை யாரும் கேக்க மாட்றீங்க பார்க்கலாம்… என்ன நடக்குதுன்னு” என திவ்யா எழுந்தாள்.

“ஏய் திவ்யா… ஏன் இப்ப டென்ஷாகுற? உட்காரு” என்றான் மார்க்ஸ்.

“இல்ல… நான் கிளம்பறேன்” என்றாள் திவ்யா.

“சரி வா… போலாம்” என மார்க்ஸ் எழுந்தான்.

“இல்ல… நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்… அப்புறம் பார்க்கலாம்!” என அவள் கிளம்பி சென்றாள்.

மார்க்ஸ் என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான். தன்னை நேசிக்கும் பெண்ணுடன் இணைந்து வேலை செய்வது என்பது சந்தோஷமானது என்றுதான் நேற்று வரை அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சட்டென ஒரே நாளில் அது மிக கடினமானது என உணர்ந்தான் மார்க்ஸ்.

விட்டு கொடுத்தல் உறவின் மிக முக்கியமான தேவை. நம்பிக்கைகளை சமரசம் செய்து கொண்டு வேலை செய்வது பணியிடத்தை பொறுத்த வரை மிக கொடுமையான நிகழ்வு. இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டதை போல உணர்ந்தான் மார்க்ஸ்.

கண்ணை மூடிக் கொண்டு காதலியை ஆதரிப்பது என்பது வேறு. மேலதிகாரி என்ன சொன்னாலும் அது சரி என தலையாட்டுவது என்பது வேறு. காதலியே மேலதிகாரியானால் என்ன செய்வது? காதலுக்கு ஈகோ எதிரி. வேலையை பொறுத்தவரை அடையாளத்தை இழக்காமல் இருப்பது மிக முக்கியமான ஒன்று. சற்றும் எதிர்பாராத ஒரு புதிய பிரச்னையை சந்தித்தான் மார்க்ஸ்.

இடியட் பாக்ஸ்

அடுத்த வாரத்துக்கான மாறாவின் நிகழ்ச்சி துவங்கியது. மாறா முற்றிலும் வேறு ஒரு மாறாவாக மாறியிருந்தார். இளம் பெண்களுடன் நடனமாடினார்.

சாதித்த ஒருவரின் கதையை கேட்டு கண்கலங்கினார். இளைஞர்களுடன் இளைஞர்களாக மாறி கேலியும் கிண்டலுமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திவ்யாவும் நிகழ்ச்சியை இயக்க மும்பையிலிருந்து வந்திருந்த இயக்குநரும் அதிருப்தியின் உச்சத்தில் இருந்தார்கள். தான் இதற்கு பொறுப்பேற்க முடியாது என அந்த இயக்குநர் ஸ்டூடியோவை விட்டு வெளியேறினான். ஏஞ்சல் இயக்குநராக பொறுப்பெடுத்துக் கொண்டாள்.

தொலைக்காட்சி நிகழ்சிகளை பொறுத்தவரை மூன்று ரகங்கள் உண்டு. நிகழ்ச்சி சிறப்பாக இருக்கிறது, ரேட்டிங் சிறப்பாக வருகிறது என்றால் இதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். நிகழ்ச்சி கேவலமாக இருக்கிறது. ஆனாலும் என்ன காரணம்ன்னு தெரியல ரேட்டிங் வருது. இதுவும் ஒப்புக் கொள்ளப்படும். நிகழ்ச்சி சூப்பரா இருக்கு. ஆனா என்னன்னு தெரியல ரேட்டிங் வரல. இந்த மூன்றாவது ரகத்தை யாரும் ஒப்புக் கொள்வதில்லை.

சிறந்தது எது என்பதை பெரும்பாலும் வெற்றியே முடிவு செய்கிறது.

பரபரப்பாக நள்ளிரவைத் தாண்டி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

ஸ்டூடியோவுக்கு வெளியே திவ்யா அமர்ந்திருந்தாள். மார்க்ஸ் மெதுவாக அவள் அருகே வந்து அமர்ந்தான்.

திவ்யா திரும்பி அவனை பார்த்தாள்.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

திவ்யா அமைதியாக இருந்தாள். மார்க்ஸ் எழுந்து சென்று கேனிலிருந்து இரண்டு கோப்பைகளில் காபியை எடுத்து கொண்டு வந்தவன் மீண்டும் அவள் அருகே அமர்ந்தான். அவளிடம் ஒரு கோப்பையை நீட்டினான்.

“உன் ஆளுக்கு கொண்டு போய் குடு” என்றாள் திவ்யா.

“என் ஆளுக்குத்தான் குடுக்குறேன்” என சிரித்தான் மார்க்ஸ்.

“இந்த கதை எல்லாம் வேண்டாம். உள்ள உன் ஆளு கஷ்டப்பட்டு டைரக்ட் பண்ணிட்டு இருக்கா… அவளுக்கு கொண்டு போய் குடு”

“கஷ்டப்பட்டு டைரக்ட் பண்றது என் ஆள் கிடையாது. கஷ்டப்பட்டுட்டு வெளிய உட்கார்ந்திருக்கிறது தான் என் ஆளு” என்றான் மார்க்ஸ்.

“எனக்கு வேணாம்” என்றாள் திவ்யா.

“சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காத திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“நான் ஒண்ணும் சின்ன குழந்தையும் இல்ல… என்ன யாரும் சமாதானப்படுத்தவும் தேவையில்லை”

“என்ன கோபம் என் மேல?”

“கோபமெல்லாம் இல்லையே… உன் கிட்ட கோபப்பட நான் யாரு?”

உன் கிட்ட கோபப்பட நான் யாரு என்பதுதான் பெண்களின் உச்சபட்ச கோபம். கோபத்தில் அமைதியாக புன்னகைத்தார்கள் என்றால் அடுத்த கணம் மதுரை எரிய போகிறது என்று அர்த்தம். பேச்சை அவர்கள்

குறைப்பதற்கு காரணம் அந்த பிரச்னையை பேசி தீர்க்க விரும்பவில்லை என்பதுதான். பிரச்னைக்கான தீர்வு என்பது அவர்களுக்கு பொருட்டல்ல. உன்னால் நான் பிரச்னையிலிருக்கிறேன் என்பதை நேசிப்பவர்களுக்கு

புரியவைப்பது தான் முக்கியம். எதிரிகளை உடனேவும், நேசிப்பவர்களை

இறுதியிலும் மன்னிப்பது பெண்களின் வழக்கம்.

“திவ்யா” என மார்க்ஸ் ஏதோ பேச முயன்றான்.

“என்ன நீ சப்போர்ட் பண்ணல இல்ல” என்றாள் திவ்யா.

“திவ்யா… இது நியாயமே இல்லை” என்ற மார்க்ஸின் குரலில் மெல்லிய கோபம் எட்டிப்பார்த்தது.

“ஓ… உனக்கு என் மேல கோபம் வேற வருதில்ல” என்றாள் திவ்யா.

உணர்ச்சிகள் பந்தாக இருவராலும் மாற்றி மாற்றி இந்த புறமும் அந்த புறமுமாக அடிக்கபடுவதை உணர்ந்த மார்க்ஸ் சட்டென பேச்சை நிறுத்தினான். திவ்யாவை பார்த்தான். ஏதோ ஒன்று அவளை காயப்படுத்தியிருக்கிறது என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது. ஆனால் அதை திவ்யாவாக சொல்லாத வரை எப்படி தெரிந்து கொள்வதென அவனுக்கு புரியவில்லை.

“ஐ லவ் யூ” என்றான் மார்க்ஸ்.

திவ்யா அவனை திரும்பி பார்த்தாள். அந்த பார்வையில் நியாயம் கேட்டால் காதல் தருகிறாயா? தேவையில்லை என்கிற பாவம் தெரிந்தது.

மார்க்ஸ் ஏதாவது பேசுவான் என திவ்யா எதிர்பார்த்தாள். மார்க்ஸ் எதுவும்

பேசவில்லை. மார்க்ஸ் எழுந்து போவான் என திவ்யா நினைத்தாள். அதையும் அவன் செய்யவில்லை. இருவரும் மெளனமாக அமர்ந்திருந்தார்கள்.அவர்களின் மெளனங்கள் மட்டும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

மாறாவின் புதிய எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆயிருந்தன. மீண்டும் ஒரு வியாழக்கிழமை ரேட்டிங்கிற்காக அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் எதிர்பாராத வண்ணம் மாறாவும் ஆரஞ்சு டிவிக்கு வந்திருந்தார்.

கான்ஃபரன்ஸ் அறையில் சாந்தினி ரேட்டிங்கிற்காக காத்திருந்தாள். அவள் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக அனைவரும் காத்திருந்தார்கள்.

“என்னன்னே ரேட்டிங் எப்படி வரும்” என நெல்லையப்பனை கேட்டார் மாறா.

“இன்னைக்கு பயங்கரமா வரும்” என்றார் நெல்லையப்பன்.

“எப்படின்னே சொல்றீங்க” என சிரித்தபடி கேட்டார் மாறா.

“என்னமோ தோணுது” என்றார் நெல்லையப்பன்.

“போன வாரம் சரியான ரேட்டிங் வராதப்ப உங்களுக்கு என்ன தோணிச்சு?”

“அப்பவும் ரேட்டிங் பயங்கரமா வரும்னுதான் தோணிச்சு” என சொன்னார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தார்கள்.

“சரியான போங்குன்னே நீங்க” என்றார் மாறா.

“இல்ல சார்… நினைக்கிறதை எப்பவுமே நல்லா நினைச்சிர்றது… அந்த நினைப்புக்கு ஒரு பவர் இருக்கில்ல” என்றார் நெல்லையப்பன்.

மேனன் சிரித்தபடி “இன்னைக்கு ஒன்பது ரேட்டிங் வரும்” என்றார்.

அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்தனர்.

“சார் எப்படி சார் சொல்றீங்க?” என ஆச்சரியமாக கேட்டார் நெல்லையப்பன்.

“அது சீக்ரெட்” என்றார் மேனன்.

“ரேட்டிங் வந்திருச்சு” என சாந்தினி டேட்டாக்களை ஒருங்கிணைக்க தொடங்கினாள். அனைவருக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மார்க்ஸ் மெதுவாக திரும்பி திவ்யாவைப் பார்த்தான். அவள் சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள். அவளது மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் சத்தம் மார்க்ஸுக்கு கேட்டது.

திவ்யா நிமிர்ந்து பார்த்தவள் மார்க்ஸ் தன்னை பார்ப்பதை உணர்ந்து பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

மார்க்ஸ் மெதுவாக தலையை திருப்பி ஏஞ்சலை பார்த்தான். ஏஞ்சல் சாந்தினியை விடுத்து திவ்யாவை பார்த்துக் கொண்டிருந்தாள். தான் வெற்றி பெறுவதை விட அது திவ்யாவை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தான் ஏஞ்சல் ஆவலாக இருக்கிறாள் என்பது மார்க்ஸுக்குப் புரிந்தது.

“ஏய்” என உற்சாகமாக கத்தினாள் சாந்தினி.

சந்தோஷமான செய்தி என்பது சட்டென அனைவருக்கும் புரிந்து விட்டது. அனைவரும் ஓ என குரலெழுப்பினார்கள்.

“ஏய் அமைதியா இருங்கப்பா… எவ்வளவு ரேட்டிங்குன்னு சொல்லிட்டு கத்தும்மா” என்றார் நெல்லையப்பன்.

“ஒன்பது புள்ளி ஆறு” என சொல்லி முடித்ததும் கான்ஃபரன்ஸ் அறையே கூச்சலால் அதிர்ந்தது.

மாறா ஏஞ்சலுக்கு கை கொடுத்தார்.

“இதுக்கான மொத்த கிரெடிட்டும் உங்களுக்கு தான் சேரனும்” என்றார் மாறா.

மாறாவை தொடர்ந்து மேனன் தாட்சா என அனைவரும் ஏஞ்சலுக்கு கை கொடுத்தனர். மார்க்ஸ் சற்று முன்னால் நகர்ந்து ஏஞ்சலுக்கு கை கொடுத்தான்.

“தேங்க்யூ… தேங்க்யூ” என ஏஞ்சல் நன்றிகளை தொடர்ந்து சொல்லியபடி சொல்லியபடியிருந்தாள்.

மார்க்ஸ் சட்டென திவ்யாவின் நினைவு வந்தவனாக அவளை திரும்பி பார்த்தான். அவள் அமர்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. கூட்டத்தை தள்ளியபடி மார்க்ஸ் கான்ஃபரன்ஸ் அறையிலிருந்து வெளியே

வந்தான். அனைவரும் கான்ஃபரன்ஸ் அறையில் கூடியிருந்ததால்

மொத்த அலுவலகமும் காலியாக இருந்தது. வேகமாக ஓடி வந்தவன்

லிஃப்ட் அருகே இருந்த செக்கியூரிட்டியிடம்

“திவ்யா மேடம் பார்த்தீங்களா” என கேட்டான்

“அவங்க லிஃப்ட்ல கீழ போயிட்டாங்க சார்” என்றான் செக்கியூரிட்டி…

மார்க்ஸ் என்ன செய்வதென அறியாமல் லிஃப்ட் பட்டனை அழுத்தி விட்டு காத்திருந்தான். கான்ஃபரன்ஸ் அறையிலிருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.