பதிவுத்துறையில் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக பதிவுத்துறை அலுவலகங்களில் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ள பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்குவதை முழுமையாகத் தடுக்க முடியாத நிலையே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மாதவரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சார்-பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர். சென்னை மாதவரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 10,000 ரூபாயை லஞ்சமாக வாங்கியபோது சார்-பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோரை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: திருமணத்தை பதிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது..!
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், “மாவதரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 8.7.2021-ம் தேதி பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்றை கொடுக்க சார்-பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக சம்பந்தப்பட்டவர் எங்களிடம் புகாரளித்தார். அதனால், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து அனுப்பினோம். அதோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் அங்கு சென்று ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது, பணத்தை வாங்கியபோது இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளோம். கிருஷ்ணமூர்த்தி, சுதாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.

சார்-பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி குறித்து இன்னொரு முக்கிய தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. பதிவுத்துறையில் டிஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவருடன் சார்-பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி நட்பில் இருந்து வருகிறார். வில்லங்க சொத்துக்கள், விதிகளை மீறி பதிவு செய்தல் போன்ற வேலைகளில் ஓய்வு பெற்ற டிஐஜியின் தலையீடு உள்ளது. அவரின் கட்டுப்பாட்டில் சென்னையில் இன்னும் சில சார்-பதிவாளர்கள் உள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குடன் செயல்பட்ட அந்த ஓய்வு பெற்ற டிஐஜி, ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் அதே செல்வாக்குடன் இருந்து வந்தார். கடந்த ஆட்சியில் சில காரணங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஓய்வு பெற்ற டிஐஜியுடன் சேர்ந்து செயல்பட்ட சார்-பதிவாளர்களை கையும் களவுமாக பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறோம். அதில் சென்னை ராயப்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், சென்னையில் காலியாக உள்ள சார்-பதிவாளர் பதவியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்திவருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏற்கெனவே வீட்டு வசதி வாரிய இடத்தை விதிகளை மீறி பதிவு செய்த முருகனின் பெயரைக் கொண்ட சார்-பதிவாளர் ஒருவர், தற்போது கிழக்குக் கடற்கரை சாலையில் பணியாற்றி வருகிறார். அவர் மீது பதிவுத்துறை சார்பில் விசாரணை நடந்துவரும் சூழலில் ஓய்வு டிஐஜியுடன் இணைந்து பல வேலைகளை அவர் செய்திருக்கும் ஃபைலும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர்.