கோவிட்-19 பெருந்தொற்றால் 2020-ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நாமும் அதைப் `புதிய இயல்பு வாழ்க்கை (நியூ நார்மல்)’ எனச் சொல்ல ஆரம்பித்து, அதைப் பின்பற்றப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

தொழில் நிறுவனங்கள்

சென்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி (CMIE) என்கிற அமைப்பு சமீபத்தில் தேசிய அளவில் 1.75 லட்சம் குடும்பங்களிடம் நடத்திய கணக்கெடுப்பில் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் 3% குடும்பங்களின் வருமானம் அதிகரித்திருப்பதாகவும், 55% குடும்பங்களின் வருமானம் குறைந்திருப்பதாகவும், 42% குடும்பத்தினரின் வருமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. நேரடியாக வருமானத்தில் மாற்றம் இல்லை என்றாலும் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது அவர்களுடைய வருமானத்தின் மதிப்பு குறைந்திருக்கும். எனவே, சுமார் 97% குடும்பத்தினரின் வருமானம் கடந்த 15 மாத காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அது போல, ஏப்ரல் மாதம் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 8% எனவும், மே மாதம் 12 சதவிகிதமாக இருக்கக்கூடும் எனவும் கணித்திருந்தது.

தடுமாறும் சிறுதொழில் நிறுவனங்கள்!

தனிநபர்களின் நிலை இப்படியிருக்க, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் (MSME) நிலைமை எப்படி இருக்கிறது?

அரசாங்கம் இத்துறைக்கு சில நிதித் தொகுப்புகளை அறிவித்தாலும் அதனால் அதிகமான நிறுவனங்கள் பயன் பெறவில்லை என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தேசிய அளவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட தொகையையே வசூலிக்க முடியாமல் பல நிறுவனங்கள் தடுமாறிக்கொண்டிருந்தன. அதன்பின் அவ்வப்போது ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. அடுத்து, இரண்டாவது அலை. இப்போது மூன்றாவது அலை வருமென எச்சரிக்கை வந்துகொண்டிருக்கிறது. எனவே, பல நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓரளவுக்கு உற்பத்தியை மறுபடியும் ஆரம்பித்திருக்கும் நிறுவனங்கள் போக்குவரத்து, விற்பனை சார்ந்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அரசு அறிவித்திருக்கும் சலுகைகளில் ஒன்றான ஈடுதேவையில்லாத கடனைப் பெறுவதற்கு வங்கிகளுக்கு அலைய வேண்டியிருப்பதாகப் புகார்கள் எழும்பியிருக்கின்றன.

சிறுதொழில் நிறுவனங்கள்

இந்தியாவில் சுமார் 6.33 கோடி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.60 லட்சம் கோடியாகும். 2018-19-ம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு 30% ஆகும். 2015 – 16 ஆண்டு தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இந்த நிறுவனங்கள் சுமார் 11 கோடி வேலைகளை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு இவையெல்லாம் பெரிய கேள்விக்குறியாகிருக்கிறது.

இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

சந்திக்க வேண்டிய சவால்கள்..!

மூலதனம் மீதான கட்டுப்பாடுகள் (limited access to capital),

மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பு,

விநியோகம் செய்வதிலிருக்கும் பிரச்னை,

தொழிலாளர்களின் புலம்பெயர்வு,

பொருள் அல்லது சேவையை வாங்கியவர்கள் பணம் கொடுப்பதில் தாமதம் போன்றவை இவை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்.

பிக்கி (FICCI) தொழில் கூட்டமைப்பும் துருவா அட்வைசர்ஸும் மேற்கொண்ட ஆய்வின்படி, மூன்றில் இரண்டு சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கோவிட்-19 இரண்டாம் அலையில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக துயர்நீக்கம் தேவையென்றும் கூறியிருக்கிறது.

சிறுதொழில் நிறுவனங்கள்

Also Read: `இது சிறு குறு வணிகர்களுக்கான வரப்பிரசாதம்!’ – மத்திய அரசின் புதிய நடவடிக்கையால் என்ன நன்மை?

துயர்நீக்க நடவடிக்கைகள் எதுவுமில்லை எனில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட வேண்டியிருக்க வேண்டும் என்றும் வேறொரு ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த அச்சம் நாடெங்கிலும் இருக்கும் இந்தத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் பீடித்திருக்கிறது.

இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (Consortium of Indian Associations) ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, 14% நிறுவனங்கள் லாபம் ஈட்டியதென்றும், 73% நிறுவனங்கள் லாபம் ஈட்டவில்லை எனவும், மீதமிருக்கும் 13% நிறுவனங்கள் வருமானமும் செலவும் சரியாக இருந்தன எனவும் தெரிவித்திருந்தது.

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 22% தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்திருக்கிறது; 42% நிறுவனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றன. மீதமுள்ள 36% நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசின் உதவி பாராட்டும்படி இல்லை!

அரசு அறிவித்த நிதித் தொகுப்பு மற்றும் சலுகைகள் எத்தனை நிறுவனங்களை சென்றடைந்திருக்கின்றன என்பது குறித்தும் சில புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 88% பேர், தங்களுக்கு அரசின் ஆதரவு கிடைக்கவில்லை என சொல்லியிருக்கின்றனர். இந்தத் துறை சம்பந்தமாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டும்படி இல்லை என்று ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களில் 80 சதவிகித்தினர் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் அரசு ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு அறிவித்தது. இதில் ரூ.3 லட்சம் கோடி `அவசரக் கடன் உத்தரவாத திட்டம் (ECLGS)’ ஆகும். இதைப் பெறுவதற்கு ஈடாக எந்தச் சொத்தும் தேவையில்லை. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது `ஒரு வருடம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும், நான்கு வருடத்துக்குள் (ஒரு வருட moratorium சேர்த்து) வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த வேண்டுமென்றும்’ சொல்லப்பட்டது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் வரை, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 90 லட்சம் நிறுவனங்களுக்கு சுமார் ரூ 2.14 லட்சம் கோடியைக் கடனாகக் கொடுத்துள்ளன. அதாவது, சராசரியாக நிறுவனமொன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.2.37 லட்சம். ஜனவரி மாதத்துக்குப் பிறகு, புதிய புள்ளிவிவரங்கள் எதையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை.

ஒன்றிய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகளிடமிருந்து சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.5 லட்சம் கோடி எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தத் துறை நிறுவனங்களிடையேயான பணச்சுற்றைப் பாதித்திருக்கிறது.

Rupee (Representational Image)

Also Read: `30 ஆண்டுகள் ஆகிவிட்டன, மகிழ்ச்சி; ஆனால்..!’ – தாராளமயமாக்கலை நினைவுகூரும் மன்மோகன் சிங்

அதிகரித்த வாராக்கடன்

ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் வெளியிட்ட, `நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை’யின்படி, 2019, 2020-ம் ஆண்டுகளில் மறுகட்டமைப்புக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் பொதுத்துறை வங்கிகளில் எம்.எஸ்.எம்.இ துறையின் வாராக்கடன் அதிகமாகவே இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18.2 சதவிகிதமாக இருந்த இந்தக் கடன், இந்த ஆண்டு மார்ச் மாதம் 15.9 சதவிகிதமாகக் குறைந்திருந்தாலும் இதுவே அதிகமாகும். இதே காலகட்டத்தில் 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டிய கடனில் வாராக்கடன் 6.9 சதவிகிதத்திலிருந்து 10.6 சதவிகிதமாகவும், 31 நாளிலிருந்து 60 நாள்களுக்குள் செலுத்த வேண்டிய கடனில் வாராக்கடன் 5.7 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது.

ஆக, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் மரணப்படுக்கையில்தான் இருக்கின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இதிலிருந்து மீள அரசு நிபுணர்களின் உதவியோடு இந்தத் துறையை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.