கான்ஃபரன்ஸ் ரூமில் புரோகிராமிங் டீம் ஆட்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். நெல்லையப்பன் தலையில் கட்டுடன் உள்ளே நுழைய அனைவரும் ‘ஹே’ என்ற சத்தத்துடன் கை தட்டினார்கள். நெல்லையப்பன் வெட்கம் கலந்த புன்னகையுடன் சேரில் அமர்ந்தார்.

“ஆபிஸுக்காக அடிபட்டு ரத்தம் சிந்திருக்கேன். உங்களுக்கு என்ன பார்த்தா கிண்டலா இருக்கா?”

“மாமா… உன் தலையில இருந்து கொட்டுனது ரத்தம் இல்ல மாமா… அம்புட்டும் டிஆர்பி” என்றான் பாண்டியன்.

திவ்யா அவர்கள் பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.

“மாமா… அந்த மாயோன் மருத்துவ செலவுக்கு கொடுத்த 2 லட்சம் ரூபாயை என்ன பண்ண?’’ என்றான் டார்லிங்.

“50 ரூபால எனக்கு ஒரு பேண்டேஜ் துணியை வாங்கி குடுத்திட்டு மீதியை ஆச்சி 5 சவரன் சங்கிலி வாங்கிட்டாப்பா” என்றார் நெல்லையப்பன்.

அனைவரும் சிரித்தனர்.

“என்ன மாமா அநியாயமா இருக்கு” என்றான் மார்க்ஸ்.

“அது கூட பரவாயில்லப்பா… அவளுக்கு அட்டிகை வாங்கணுமாம்… அடுத்து எப்ப அடி வாங்குவீங்கன்னு வேற கேக்குறாப்பா!”

மீண்டும் அறை முழுவதும் சிரிப்பில் அதிர்ந்தது. ஏஞ்சல் மட்டும் இது எதையும் ரசிக்காமல் தீவிரமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

மேனனும், தாட்சாவும் அறைக்குள் நுழைந்தார்கள்.

“என்ன ஜோக்குன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்” என்றாள் தாட்சா.

“அடுத்து யாரு கல்ல விடுவாங்க… தலையில வாங்கலாம்னு மொத்த ஆபிஸும் காத்துகிட்டு இருக்கு மேம்” என்றான் பாண்டியன்.

“ஏன் அப்படி?”

“கல்லடி பட்டா 2 லட்சம் கிடைக்குதே” என பாண்டியன் சொன்னான்.

அனைவரும் சிரித்தனர். தாட்சாவும் மேனனும் புன்னகைத்தபடி அமர்ந்தார்கள்.

மேனன் மார்க்ஸை பார்த்தார். மார்க்ஸ் அவரை பார்த்து புன்னகைத்தான்.

“அடுத்து என்ன பண்ணலாம் மார்க்ஸ்?” எனக் கேட்டார் மேனன்.

“நியாயமா அதை நீங்க புரோகிராமிங் ஹெட் திவ்யா கிட்டதான் சார் கேட்கணும்” என்றாள் ஏஞ்சல்.

அனைவரும் திரும்பி ஏஞ்சலை முறைத்தனர்.

“என்ன ஏன் முறைக்கிறீங்க.. இந்த பொறுப்ப சமாளிக்க முடியலன்னு வேற டிப்பார்ட்மென்ட்டுக்கு போன ஆள்கிட்ட என்ன பண்ணனும்னு கேட்டா அவருக்கு என்ன தெரியும்… பாவம்” என குத்தலாகச் சொன்னாள் ஏஞ்சல்.

இடியட் பாக்ஸ்

“ஏஞ்சல்… அடுத்து என்ன செய்யறதுன்ற பிளானிங் மீட்டிங் இது. உங்க பர்சனல் விருப்பு வெறுப்புகளை இங்க காட்ட வேண்டாம். 7 வருஷமா இந்த சேனலை லீட் பண்ண மார்க்ஸுக்கு இந்த மீட்டிங்ல பேசுறதுக்கு நம்ம எல்லோரைவிடவும் தகுதி இருக்குன்னு நான் நினைக்கிறேன்” என திவ்யா சொல்ல ஏஞ்சல் முகம் மாறியது.

ஒருவரை எதிர்ப்பதென்றாலும் ஆதரிப்பதென்றாலும் பெண்கள் ஒளித்து மறைத்து செய்வதில்லை.

“போன வாரம் நம்ம சேனலுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்தது. ஒரு கெட்ட விஷயமும் நடந்தது” என்றார் மேனன்.

“ரேட்டிங் வர்றதுல என்ன கெட்ட விஷயம் இருக்கு சார்” எனக் கேட்டாள் ஏஞ்சல்.

“இது வரைக்கும் நம்பர் ஒண்ணா இருக்கிற மார்ஸ் டிவி நம்மளை பெருசா கண்டுக்கல. ஏன்னா அவங்க எங்கயோ இருக்காங்க, நாம ரொம்ப கீழ இருக்கோம். நம்மளை அவங்க போட்டியா நினைக்க வாய்ப்பில்ல!” அனைவரும் மேனன் பேச்சை உன்னிப்பாக கவனிக்க, மேனன் தொடர்ந்தார்.

“ஆனா, இந்த வார ரேட்டிங்குக்கு அப்புறமா அவங்களுக்கு நிச்சயமா ஒண்ணு தோணியிருக்கும். ஒரு வாய்ப்பு கிடைச்சா அவங்க நம்மளைத் தொடமுடியும்றதுதான் அது!”

அனைவருக்கும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது.

“சார்… அவங்க 1350 GRP சார். நம்ம வெறும் 325 தான் சார். அவங்க நம்மளை பார்த்து கவலைப்பட வாய்ப்பே இல்லை சார்” என்றாள் ஏஞ்சல்.

“அவங்க கவலைப்பட ஆரம்பிச்சிட்டாங்க” என்றார் மேனன். அனைவரது முகமும் ஆச்சர்யத்தில் மாறியது.

“யூஷுவலா மத்தியானம் அவங்க சாதாரண பழைய படங்கள்தான் போடுவாங்க. இந்த வாரம் மதியம் அவங்க போடுற படங்கள் எல்லாமே ஹிட்டான, கொஞ்சம் ரீசன்ட்டான படங்கள். அடுத்த வாரம் முழுக்க அவங்களோட ஒவ்வொரு சீரியல்லயும் ஒரு மூவி ஸ்டாரை வாக் இன் செலிபிரிட்டியா கொண்டு வரப் போறாங்க. அதை விட முக்கியமா அவங்களோட ஷோஸ்க்கு எல்லாம் அவங்க ப்ரோமோ போட்டு யாராவது பார்த்திருக்கீங்களா? ஆனா, இந்த வாரம் முழுக்க அவங்க சேனல்ல ஏகப்பட்ட ப்ரோமோக்களை நான் பாக்குறேன்!”

அனைவரையும் சின்ன பதற்றம் தொற்றிக் கொண்டது. “என்னோட கணிப்பு சரின்னா நாம அடுத்த வாரம் 50 GRP கீழ போக வாய்ப்பிருக்கு” என்றார் மேனன்

“என்ன பண்ணலாம் சார்?” எனக் கேட்டாள் திவ்யா.

“நாம ஜாலியா நமக்கு பிடிச்சதை பண்ணிட்டு இருந்தோம். அதுல ஒரு GRP வந்துட்டு இருந்துச்சு. நாம அவங்களைத் தொடணும்னு நினைக்கல. அவங்களும் நம்மளை போட்டியா நினைக்கல. ஆனா, இப்ப நாம அவங்களை உரசிட்டோம். வீ கால்ட் ஃபார் எ ஃபைட். அதுக்கு நாம தயாராகித்தான் ஆகணும்” என்றார் மேனன்.

“சார்… ஒரு எதிரி இருக்குறப்பதான் சார் லைஃப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்” என்றான் மார்க்ஸ்.

“கரெக்ட்… அதுதான் நாம அடுத்த ஸ்டெப் போறதுக்கான வழியும் கூட. அதனால அடுத்து என்ன பண்ணலாம்னு எல்லாருமே யோசிங்க… உங்க புது ஐடியாக்களோட திரும்பவும் வெள்ளிக்கிழமை நாம சந்திக்கலாம்” என்றார் மேனன்.

அனைவரும் ஆர்வமாகத் தலையாட்டினார்கள்.

“ஒண்ணு மட்டும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க… நாம அவங்களைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கிற இந்தச் சமயத்தில அவங்களும் நம்மளைப் பத்தி நிச்சயம் யோசிச்சிட்டு இருப்பாங்க. நம்மளை எப்படி முளையிலேயே கிள்ளி எறியறதுன்னு அவங்க சைடுல ஒரு திட்டம் ரெடியாயிட்டு இருக்கணும்” என முடித்தார் மேனன்.

…………………………………………………………..

மதுரை அண்ணா நகர்… தனது அம்மாவின் வீட்டு வராண்டாவில் தாம்சன் யோசனையாக அமர்ந்திருந்தார். தெருவில் நின்று கொண்டிருந்த அவரது ரோல்ஸ் ராய்ஸ் கார் முன்னால் நின்று இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அவரது அம்மா ஆக்னஸ் டீ கோப்பையுடன் வந்தவர் அதை தாம்சனுக்கு கொடுத்துவிட்டு அவர் எதிரே அமர்ந்தார்.

“என்ன தாம்சன் என்ன யோசனை?” எனக் கேட்டார் அம்மா.

“நத்திங் மா… ஒரு சின்ன ஆபிஸ் டென்ஷன்… சின்ன ப்ராப்ளம்தான். ஆனா அது பெருசாகுமோன்னு தோணுது” என சொன்னபடியே தாம்சன் டீயை வாங்கி குடித்தார். அதன் சுவையை ரசித்தவர்…

“உலகம் பூரா டிராவல் பண்ணிட்டேன்… இதைத் தாண்டி ஒரு பெஸ்ட் டீ இதுவரைக்கும் நான் டேஸ்ட் பண்ணதே இல்லை” என்றார் தாம்சன்.

“அதான் அம்மா டீ” என ஆக்னஸ் சிரித்தார். தாம்சனும் சிரித்தார்.

தாம்சன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். மதுரை அமெரிக்கன் காலேஜில் பட்டம் படித்தார். அதன் பிறகு பெங்களூர் ஐஐடியில் மேற்படிப்பு. அதை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மற்றொரு முதுகலை பட்டம். அங்கேயே ஆங்கிலேய பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். உலகின் நம்பர் ஒன் மீடியா கம்பெனியான மார்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க்ஸில் அவருக்கு வேலை கிடைத்தது.

அந்த நிறுவனம் இந்தியாவில் மீடியா கம்பெனியை ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தது தாம்சன்தான். இந்தியாவில் தொலைக்காட்சி தொழில் மிகப் பெரிய வளர்ச்சியடையும் என்பது தாம்சனின் கணிப்பு. மார்ஸ் நிறுவனம் இந்தியில் சேனல் ஆரம்பிக்கும் போதே தமிழிலும் ஒரு சேனலை துவங்கியது. இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்த நிறுவனத்திற்கு அனைத்து பிராந்திய மொழியிலும் ஒரு சேனல் இருக்கிறது. எல்லா மாநிலத்திலும் நம்பர் ஒன் இடத்திலும் இருக்கிறது.

தாம்சன் மார்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க்ஸின் ஏசியா பசிபிக் ஹெட். ஆசியா முழுவதும் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான சேனல்கள் அவருக்கு கீழ்தான் வருகின்றன. இருந்தாலும் அவர் ஒரு தமிழராக இருப்பதால் மார்ஸ் டிவியின் தமிழ்சேனல் மீது அவருக்கு எப்போதும் ஒரு தனி அக்கறை உண்டு.

வாரத்துக்கு ரெண்டு நாள் அம்மாவுக்கு போன் பண்ணி நலம் விசாரிக்கும் போதே மார்ஸ் டிவி பற்றியும் அம்மாவிடம் விசாரித்து தெரிந்து கொள்வார் தாம்சன். அம்மா சொல்லும் கருத்துகள் மார்ஸ் டிவியின் நிர்வாக இயக்குநருக்கு தாம்சனிடமிருந்து மெயிலாகப் போகும்.

“எத்தனையோ நாடுகளின் சேனல் நெட்வொர்க்குக்கு பொறுப்பாக இருக்கும் பிஸியான மனிதர் எப்போது நமது தமிழ் சேனலை பார்க்கிறார்” என அவர்கள் தலையை பிய்த்துக் கொள்வார்கள். அம்மாதான் தாம்சனின் ரேட்டிங் மீட்டர்.

“அம்மா… ஆரஞ்ச் டிவின்னு ஒண்ணு வருதே எப்பவாவது பார்த்திருக்கீங்களா?” எனக் கேட்டார் தாம்சன்.

“எப்பவாவது பார்க்குறதா? அதை நான் ரெகுலரா பாக்குறேன்” என்றார் அம்மா.

தாம்சன் முகம் ஆச்சர்யத்தில் மாறியது.

“என்ன ஷோஸ்மா பார்க்குறீங்க?”

“ஒரு ஸ்கூல் ஸ்டோரி வருது தாம்சன். ஃபென்டாஸ்டிக்கா இருக்கு!”

தாம்சன் சிரித்தார். “என்னம்மா சொல்றீங்க… நீங்க ஸ்கூல் ஸ்டோரி பாக்குறீங்களா? சின்ன பசங்க கதைமா அது!”

“நாம எல்லாரும் ஒரு காலத்துல சின்ன பசங்களா இருந்தவங்கதான தாம்சன். நாம எல்லாரும் ஸ்கூல் போயிருப்போம்ல?!” அம்மாவின் பதில் தாம்சனை பட்டென அறைந்தது.

“அத பாக்குறப்ப என்னோட ஸ்கூல் டேஸ் எல்லாம் எனக்கு ஞாபகத்துக்கு வருது” என்றார் அம்மா.

“வேற என்னம்மா அதுல பாக்குறீங்க?”

“அந்த பாட்டுப் போட்டி…”

“நம்ம சேனல்லயும் பாட்டுப் போட்டி வருதே”

“வருதுப்பா… ஆனா, இதுல ஒவ்வொரு ஊர்ல இருந்தும் ஆளுங்களை செலக்ட் பண்ணுவாங்க. அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் போட்டிக்கு வந்தாங்கன்னு சொல்லுவாங்க. பாட்டை தாண்டி பாடுறவங்க மேல நமக்கு ஒரு கனெக்ட் வருது தாம்சன். போன சீசன்ல மதுரையிலிருந்து ஆட்டோ ஓட்டுற ஒரு பையன்தான் வின் பண்ணான். அவனுக்காக நான் ப்ரே பண்ணேன்னா பாரேன்” என்றார் ஆக்னஸ்.

மக்களின் ரசனை ஏதோ ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. அது என்ன எனத் தெரிந்து கொள்ள முடியாத ஓர் உயரத்தில் தங்களது சேனல் இருக்கிறது என்பது தாம்சனுக்குப் புரிந்தது.

“அம்மா… தமிழ்ல நிறைய சேனல்ஸ் இருக்கு. இதுவரைக்கும் நீங்க எங்க சேனலை விட்டு வேற எந்த சேனலையும் பார்த்ததில்லை. இப்ப எதுக்காக ஆரஞ்ச் டிவியை பார்க்குறீங்க?”

“மத்த எல்லா சேனலும் நீங்க என்ன பண்றீங்களோ அதையே பண்றாங்க. ஒரே மாதிரி ஷோஸ். ஒரே மாதிரி கதை உள்ள சீரியல்ஸ். அது எனக்கு மார்ஸ் டிவியிலயே கிடைக்கிறதால வேற சேனல் பாக்கணும்னு எனக்கு இதுவரைக்கும் தோணல. ஆனா, ஆரஞ்ச் டிவி அப்படியில்ல தாம்சன். நீங்க பண்ணாத விஷயங்களை அவங்க பண்றாங்க. தே ஆர் யுனிக். அந்த ஷோஸ், அந்த டிராமக்களை அங்க மட்டும்தான் பாக்க முடியும். அதனால உங்க டிவி போரடிக்கிறப்ப எல்லாம் ஆரஞ்ச் டிவிக்கு போயி அங்க இருக்கிற சில ஷோஸை பாக்குறேன்” என்றார் அம்மா.

எத்தனையோ கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் மூலம் கிடைக்காத தெளிவு தாம்சனுக்கு அவரது அம்மாவின் சாதாரண வார்த்தைகளில் கிடைத்தது.

“எப்பவுமே நீ மதுரை வர்றப்ப ரெகுலரா நம்ம லன்ச்சுக்கு அம்மா மெஸ்தான் போவோம். போன தடவ நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா?”

தாம்சன் யோசித்தார்.

“அம்மா மெஸ் சூப்பராதான் இருக்கு. வேற ஏதாவது புதுசா ஹோட்டல் வந்திருக்கா, ட்ரை பண்ணி பார்க்கலாம்னு கேட்டியே மறந்திடுச்சா?” எனச் சிரித்தார் அம்மா.

தாம்சனுக்கு இன்னும் தெளிவாகப் புரிந்தது.

“நீ அம்மா மெஸ்… உன்கிட்ட இல்லாத அயிரை மீன் குழம்பு சாப்பிடணும்னா நான் குமார் மெஸ்தானே போயாகணும்!”

தாம்சன் புன்னகையுடன் அம்மாவைப் பார்த்து கும்பிட்டார்.

“சனங்க மாறிக்கிட்டே இருக்காங்க தாம்சன். அவங்களுக்கு ஏத்த மாதிரி நாம மாறணும்… இல்லன்னா அவங்க நம்மளை மாத்திடுவாங்க” என்றார் அம்மா. தாம்சன் தலையாட்டினார். அவருக்குள் புதிதாக யோசனை முளைத்திருந்தது.

………………………………………………..

மார்க்ஸ் காலையில் எழுந்து வந்தபோது திவ்யா இறுகிப் போன முகத்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே கோப்பையில் காபி ஆறிக் கொண்டிருந்தது.

“குட் மார்னிங்” என்றான் மார்க்ஸ்.

அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“என்னாச்சு?” என்றபடி அவள் எதிரே அமர்ந்தான் மார்க்ஸ்.

அவள் தனது போனில் வாட்ஸ் அப்பை திறந்தவள் அதிலிருக்கும் மெசேஜ் ஒன்றை ஒப்பன் செய்து அவன் பக்கமாகத் தள்ளினாள். மார்க்ஸ் போனை எடுத்துப் பார்த்தான். அவனும் ஏஞ்சலும் கட்டிப்பிடித்தபடி எடுத்த பல புகைப்படங்கள் இருந்தன.

மார்க்ஸ் மெதுவாக ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டே வந்தான்.

“என்ன ரசிக்கிறியா?”

மார்க்ஸ் பதில் ஏதும் சொல்லாமல் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“புது நம்பர்ல இருந்து வந்திருக்கு” என்றாள் திவ்யா.

“அது ஏஞ்சலோட இன்னொரு நம்பர்” என்றான் மார்க்ஸ்.

“என்ன பண்ணலாம்?” எனக் கேட்டாள் திவ்யா.

“தூக்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான். ரெண்டு பேரும் காதலிச்சோம்னு உனக்கு தெரியும். காதலிக்கிறப்ப இப்படி எல்லாம் போட்டோ எடுத்துக்கிறது சகஜம்தானே?”

“ஓஹோ” எனக் கோபமாகச் சொன்னாள் திவ்யா.

“என்ன திவ்யா சின்ன பசங்க மாதிரி கோபப்படுற!”

“இதே மாதிரி நானும் ராயும் சேர்ந்து எடுத்த போட்டோஸ் பார்த்தா நீ என்ன பண்ணுவ?”

“இக்னோர் பண்ணுவேன்.”

“பொய்… கோபப்படுவ… என்கிட்ட சண்டை போடுவ…”

“கண்டிப்பா மாட்டேன்!”

“அப்படி ஒரு போட்டோ வந்தா தெரியும். நீ எப்படி நடந்துக்கிறேன்னு.”

“அப்படி ஒரு போட்டோ வந்துச்சு. அதை நான் இக்னோர் பண்ணிட்டேன்”

திவ்யா மெலிதான அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

மார்க்ஸ் தனது போனை ஒப்பன் செய்து அவள் பக்கமாக தள்ளிவிட்டான்.

போனை பார்த்த திவ்யா முகம் மாறினாள். அவளும் ராயும் எடுத்த புகைப்படங்கள் அதிலிருந்தன.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“இது எப்ப வந்துச்சு?”

“ரெண்டு வாரம் இருக்கும்.”

“ஏன் என்கிட்ட சொல்லல?”

“இதுல சொல்ல என்ன இருக்கு… தேவையில்லைன்னு தூக்கி போட்டுட்டேன். டெலிட்டட் ஃபோல்டர்ல இருந்ததால உன்கிட்ட காட்டுனேன். இல்லன்னா காட்டியிருக்க கூட வாய்ப்பில்ல” என்றான் மார்க்ஸ்.

திவ்யா கண்கள் கலங்கினாள்.

“நிஜமாவே இந்த போட்டோ பார்த்தப்ப நீ என்ன ஃபீல் பண்ணேன்னு சொல்லு. உனக்கு வருத்தமா இல்ல?”

“வருத்தமா இருந்துச்சு… இந்த மாதிரி நிறைய போட்டோ நாம எடுக்கவே இல்லையேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு” என்றான் மார்க்ஸ்.

சட்டென திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது. மார்க்ஸும் சிரித்தான்.

“அப்ப வா… எடுத்துக்கலாம்.”

மார்க்ஸ் எழுந்து வந்து திவ்யாவை அணைத்துக் கொண்டான். திவ்யா போனில் படபடவென செல்ஃபிக்களை எடுத்தாள்.

………………………………………………………………..

Also Read: இடியட் பாக்ஸ் – 61: மாயோனின் மன்னிப்பு, மேனனின் வெற்றி… ஆனால், பின்னால் நடந்ததோ?!

மார்ஸ் டிவியின் கான்ஃபரன்ஸ் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கமாக வருடத்திற்கு இரண்டு முறை தாம்சன் அங்கு வந்தாலே பெரிய விஷயம். ஆனால் இரண்டு நாள்களுக்கு முன்னால் வந்தவர், மீண்டும் உடனே வந்திருக்கிறார், அதுவும் மீட்டிங்கிற்கு அழைத்திருக்கிறார் என்பது தமிழ் சேனலின் நிர்வாக இயக்குநர் மனோஜுக்கு உதறலாக இருந்தது.

அனைவரும் மெளனமாக அமர்ந்திருந்தார்கள்.

“என்ன மனோஜ் ஆரஞ்சு டிவியை எப்படி கவுன்ட்டர் பண்றதுன்னு யோசிச்சீங்களா?” எனக் கேட்டார் தாம்சன்.

“வொர்க் பண்ணிட்டு இருக்கோம் சார். வீக் டேஸ் மூவி ஷெட்யூல் ஸ்ட்ராங் பண்ணியிருக்கோம் சார். நாம ரெகுலர் சீரியல்ஸ்ல செலிபிரட்டி வாக் இன் பிளான் பண்ணியிருக்கோம். ப்ரோமோஸ் இன்க்ரீஸ் பண்ணியிருக்கோம். வீக் எண்ட் நான் ஃபிக்ஷன் ஷோஸ்ல கூட ஸ்பெஷல்ஸ் பண்ண சொல்லியிருக்கோம் சார்”

“இது இந்த வாரத்தை சமாளிக்கிறதுக்கு நல்ல ஐடியா… ஆனா இத வருஷம் முழுக்க பண்ண முடியாதில்ல”

“யெஸ் சார். வேற என்ன பண்ணலாம்னு ரிசர்ச் டீம் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க சார்”

“எனி அப்சர்வேஷன்” என அறையிலிருந்த மற்றவர்களை பார்த்துக் கேட்டார் தாம்சன்.

“சார், அவங்ககிட்ட இழக்குறதுக்கு எதுவும் இல்ல சார். அதனால என்ன வேணா முயற்சி பண்ணி பாக்குறாங்க சார். அதுல சில விஷயங்கள் வொர்க் அவுட் ஆயிடுது. நாம நம்பர் நம்பர் ஒண்ணா இருக்கோம். புதுசா ஏதாவது முயற்சி பண்ணி இருக்கிற ஆடியன்ஸை இழந்திருவமோன்னு பயமா இருக்கு சார்!”

“யூ ஆர் ரைட்” என்றார் தாம்சன்.

வெற்றி என்பது மிகப்பெரிய சுமை. அதை தக்க வைத்துக் கொள்கிற கவலையோடு கவனமாகத்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியதிருக்கும். தோல்வி என்பது சுதந்திரம். படு தோல்வி என்பது இன்னும் சிறப்பு. மீண்டும் நீங்கள் எதை வேண்டுமானாலும் முதலில் இருந்து முயற்சி பண்ணி பார்க்கிற வாய்ப்பை தோல்வி தருகிறது. கூடவே இலவச இணைப்பாக எதை செய்யக்கூடாது என்கிற அனுபவ பாடம் வேறு.

தோல்வி தந்த சுதந்திரத்தில்தான் பல புது யோசனைகள் பிறந்திருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த வெற்றிகள் அனைத்தும் தோல்வி தந்த சுதந்திரத்திலும் அனுபவத்திலும் கிடைத்தவைகள்தான்.

“நாம உயரமான ஓர் இடத்துல இருக்கோம். நாம இறங்கி அவங்களோட போட்டி போட்டா நாம அவங்களைப் பார்த்து பயந்துட்டோம்னு ஜனங்க நினைப்பாங்க. நாம அவங்கள மாதிரி ஷோஸ் பண்ண ஆரம்பிச்சா நாம அவங்களைப் பார்த்து காப்பியடிக்கிறதா சொல்வாங்க. இந்தப் போட்டியை நாம எப்படி சமாளிக்கிறது?” என தாம்சன் கேட்டார்.

அனைவரும் அவரையே பார்த்தனர்.

அவர் தனது லேப்டாப் பேக்கில் இருந்து இரண்டு சலவை சோப்புகளை எடுத்து மேஜையில் வைத்தார்.

“இந்த சோப் 25 ரூபா… இந்த சோப் 7 ரூபா… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்த ரெண்டு சோப்பையும் பண்றது ஒரே கம்பெனி தான்.”

அனைவரும் அவரை முகம் மாறி பார்த்தனர்.

“இந்த 25 ரூபா சோப்போட விளம்பரம் தரம்தான் முக்கியம்னு பேசும். இந்த 7 ரூபா சோப்போட விளம்பரம் விலை குறைவுன்னு பேசும். ஆனா ரெண்டுமே ஒரே கம்பெனியோட தயாரிப்புதான்.

நிறைய சின்ன சின்ன நிறுவனங்கள் மலிவான சோப்பைப்போட ஆரம்பிச்சப்ப அதை கவுன்ட்டர் பண்றதுக்காக, அதை வாங்குற ஜனங்களை டார்கெட் பண்ணி இந்த 7 ரூபா சோப்பை அதே கம்பெனி அறிமுகம் பண்ணிச்சு.”

அனைவரும் தாம்சனை பார்த்தபடி இருந்தனர்.

“தரம் முக்கியம்னு நினைக்கிறவங்க 25 ரூபா சோப்பை வாங்கிட்டே இருந்தாங்க. விலை முக்கியம்னு நினைச்சு வேற சோப் வாங்க நினைச்சவங்க ஊர் பேர் தெரியாத சோப்பை வாங்குறதைவிட இந்த கம்பெனியோட 7 ரூபா சோப்பே பெட்டர்னு இதை வாங்க ஆரம்பிச்சாங்க. சோ பிசினஸ் அவங்களை விட்டு வெளியே போகவே இல்லை. அதைத்தான் நாம இப்பவும் பண்ணப் போறோம்!”

மனோஜ் புன்னகைத்தான்.

“நாம மார்ஸ் எலைட் தமிழ்ன்னு ஒரு புது சேனல் ஆரம்பிக்கப் போறோம். அதுல வேலை செய்யுறவங்கள்ல ஆரம்பிச்சு, ஆங்கர்ஸ் வரைக்கும் எல்லாமே புது டீம் எடுங்க. அந்த சேனல்ல வரக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் அப்படியே ஆரஞ்ச் டிவியில வர்ற நிகழ்ச்சிகள் மாதிரி இருக்கணும். அவங்க ஸ்கூல் ஸ்டோரி பண்ணா நீங்க காலேஜ் ஸ்டோரி பண்ணுங்க. அவங்க வக்கீல் ஸ்டோரி பண்ணா நீங்க டாக்டர்ஸ் பண்ணுங்க. நம்ம மெயின் சேனல்ல பண்ண முடியாத எல்லா எக்ஸ்பரிமென்ட்டும் நம்மளோட எலைட் சேனல்ல முயற்சி பண்ணிப்பாருங்க. அதோட நம்மகிட்ட இருக்கிற நல்ல ஃபிலிம்ஸ் எல்லாம் யூஸ் பண்ணுங்க”

அறையிலிருந்த அனைவர் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்தது.

“2 மாசத்துல இந்த சேனல் லான்ச் ஆகணும். அதுக்கப்புறம் ஆரஞ்ச் டிவி நம்பர் 2-வா இருக்காது. நம்பர் 3-யா இருக்கும். அவங்களோட போட்டி, நம்ம மெயின் சேனலோட இருக்காது. நம்மளோட புது சேனலோடதான் இருக்கும்.”

அறையிலிருந்த அனைவரும் கரவொலி எழுப்பினார்கள். தாம்சன் புன்னகைத்தார்.

“ஜனங்க 25 ரூபா சோப் வாங்கினாலும் 7 ரூபா சோப் வாங்குனாலும் நம்ம கிட்டதான் வாங்கணும். தட்ஸ் ஆல்” என்றார் தாம்சன்.

ஆரஞ்ச் டிவி தடுமாறப் போகிறது என்கிற ஆரூடத்தை அங்கிருந்த அனைவரின் கண்களும் சொல்லின.

– Stay Tuned…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.