இங்கிலாந்தில் இருந்து வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, சென்னையை நிர்மாணிக்க, வந்தவாசியை ஆட்சி செய்த வெங்கடப்ப நாயக்கரிடம் நிலம் வாங்கிய நாளைத் தான் சென்னையின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

377 ஆண்டுகளில் சென்னை, பழைய தொன்மங்களை தின்று செரித்து, பிரமாண்டமாக வளர்ந்து, மிகப்பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி விட்டது. புதர்க்காடுகளாகவும், நீரோடைகளாகவும் இருந்த பகுதிகள் இன்று, கண்ணாடி மாளிகைகளாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. இந்த அசுர மாற்றங்களைக் கடந்து, இன்றளவும் சில பழைய அடையாளங்கள் சென்னைக்குள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை, பிராட்வே மஸ்கான்சாவடியில் உள்ள புறாச்சந்தை, பல்லாவரத்தில் நடக்கும் வாரச்சந்தை. 

மஸ்கான்சாவடி புறா சந்தை

பிரிட்டிஷ் காலத்தில், ஆங்கிலேயர்கள் தங்களுக்குத் தேவையான கோழி இறைச்சிக்காக உருவாக்கிய சந்தை இது. பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் கோழிகளை கொண்டு வந்து இந்த சந்தையில் விற்றுச் செல்வார்களாம். கோழிச்சந்தையாக தொடங்கி பிற்காலத்தில் பறவைகளுக்கான தீனிச்சந்தையாக மாறி பிறகு புறா சந்தையாக மருவி இப்போது வளர்ப்புப் பிராணிகள் சந்தையாக வளர்ந்து நிற்கிறது. 

பிராட்வேயின் மையத்தில் இருக்கும் அம்மன் கோவில் தெருவில் இரண்டு பிரதான தெருக்களை இணைக்கும் ஒற்றைச் சாலை தான் மஸ்கான் சாவடி. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை 4 மணி தொடங்கி 12 மணிக்குள்ளாக பல ஆயிரம் பேர் இந்த தெருவில் கூடுகிறார்கள். கைகளிலும், பைகளிலும் புறாக்களை சுமந்து கொண்டு சுற்றுகிறார்கள். பந்தயக்களுக்கென்றே பழக்கப்பட்ட ஓமர், சாதா, சப்ஷா, கிறிசில், ஆடல் புறாக்கள். வகை வகையான வளர்ப்புப் பறவைகள், வண்ண வண்ண மீன்கள், விதவிதமான கோழிகள், முயல்கள், கூண்டுகள், தீனிகள் என எல்லாம் இங்கே கிடைக்கும். 12 வயது சிறுவன் தொடங்கி 80 வயது முதியவர் வரை அத்தனை பேரின் கண்களிலும் தேடல்… ஆர்வம்…! 

சென்னையில் பணியாற்றிய சில ஆங்கிலேயே அதிகாரிகள், புறா வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இந்த பகுதிக்கு வந்து, புறாக்களை பறக்க விட்டு பந்தயம் நடத்தியிருக்கிறார்கள். அதைக்கண்டு அப்பகுதியில் வசித்த மக்களும் புறாவுக்கு ரசிகர்கள் ஆகி விட்டார்கள். இன்று, வட சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது புறா வளர்ப்பும், பந்தயமும். சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தெல்லாம் புறா வாங்கவும் விற்கவும் ஏராளம் பேர் இந்த சந்தைக்கு வருகிறார்கள். புறாக்களைப் பறக்க விட்டு, விழிகளை பிதுக்கிப் பார்த்து, இறகுகளை விரித்துப் பார்த்து வாங்கும் விதமே ஈர்க்கிறது.  

சாலையின் முகப்பில் கூண்டுகள் விற்பனை… வளர்ப்புப் பறவைகள், புறாக்கள், முயல்களுக்கான கூண்டுகள். 300 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் வரை வகைவகையாக கிடைக்கிறது. அதையொட்டி நாய்கள்… நாய்க்குட்டிகள்… அதன் தொடர்ச்சியாக வளர்ப்புப் பறவைகள். வண்ணம், வண்ணமாக வைத்திருக்கிறார்கள். லவ் பேர்ட்ஸ். காட்டில், ஆப்பிரிக்கன் பேர்ட்ஸ், பேங்கில் என என்னென்னவோ பெயர் சொல்கிறார்கள். இவற்றைச் சுற்றிலும் ஒரு இளவட்டக் கூட்டம் மொய்க்கிறது. இதைக் கடந்து நடந்தால்… புறா. வகைவகையாக, தோளிலும், கையிலும் பொத்திவைத்துக் கொண்டு விற்கிறார்கள். பெரும்பாலும் எல்லாருமே பறவை வளர்ப்பவர்கள். இனப்பெருக்கம் செய்ய தகுந்த இணை தேடத்தான் பெரும்பாலானோர் வருகிறார்கள்.  

சந்தையின் மையத்தில் சண்டைக்கோழிகள். கம்பீரமாக தலை நிமிர்த்துப் பார்த்து கொக்கரிக்கின்றன. அதையொட்டி, கோழி இறைச்சிக் கடைகள். வாத்துகள், மகராஜா கோழிகள், கருங்கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் என விதவிதமாக, வண்ண வண்ணமாக வைத்து விற்கிறார்கள். இந்தப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு சந்துக்குள் தீவனக் கடைகள். பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, சோளம், ராஹி என மூட்டை மூட்டையாக குவித்து வைத்து விற்கிறார்கள்.

புறா பந்தயம் நடத்துபவர்கள், புறா வளர்ப்பில் சாம்பியன்கள், சண்டைக்கோழி குருமார்கள், பறவை வைத்தியர்கள் என எல்லோரும் கூடிக்கலையும் இடமாகவும் இந்த சந்தை இருக்கிறது. பிற நாட்களில், அரவமில்லாமல் கிடக்கும் இந்த மஸ்கான் சாவடி ஞாயிற்றுக்கிழமைகளில் பறவைகளின் கீச்சொலிகளாலும், மனிதர்களின் பேரங்களாலும் களைகட்டி விடுகிறது. 

பல்லாவரம் சந்தை:

ஆங்கிலேயர்களின் பாதம் படும் முன்பு, சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வேளாண் நிலங்களாகவே இருந்தன. வீட்டுக்கு வீடு மாடுகள் நிரம்பியிருந்தன. 1815ல் ஆங்கிலேயர்களின் மாட்டு இறைச்சித் தேவைக்காக, மாட்டுச் சந்தையாக தொடங்கப்பட்டது தான் பல்லாவரம் சந்தை. இன்று இங்கு விற்காத பொருட்களே இல்லை. எதையும் வாங்கலாம். எதையும் விற்கலாம். வாராவாரம் வெள்ளிக்கிழமை, பல்லாவரம் பேருந்து நிலையத்தை ஒட்டி, கண்டோண்மெண்ட் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் நடக்கிறது இந்த சந்தை.

வியாழக்கிழமை இரவே பரபரப்பு தொடங்கி விடுகிறது. அதிகாலை 3 மணிக்கெல்லாம் சந்தை விழித்துக் கொள்கிறது. இந்த சந்தையின் சிறப்பம்சமே ‘உள்ளது உள்ளபடி’ விற்பனை தான். கம்ப்யூட்டர் மானிட்டர்கள், பிரிண்டர்கள், சி.பி.யூ.க்கள், ஸ்பீக்கர்கள், ஜெராக்ஸ் மிஷின்கள், டிவிக்கள் என நாம் எதிர்பாராத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை எல்லாம் குவியல் குவியலாக போட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலும் பழைய பொருட்களுக்கான விலை தான். இயங்கினால் லாபம். இயங்காவிட்டால் உதிரி பாகள்களுக்கு ஆகும். அதிகாலையில் லாரிகளைக் கொண்டு வந்து இந்த கம்யூட்டர் பொருட்களை எல்லாம் வாங்கி அள்ளிச் சென்று விடுகிறார்கள். 

காய்கறிகள், விதவிதமான செடிகள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், விதைகள், மசாலா பொருட்கள், வற்றல் வடகம் வகையறாக்கள் ஒரு பக்கம் விற்பனையாகும். இன்னொரு பக்கம், ஆடு, நாய்க்குட்டிகள், முயல்கள், பூனைகள், நாட்டுக்கோழி, காடை, கௌதாரி ஐட்டங்கள்…

கொஞ்சம் தள்ளி நடந்தால் வகைவகையான சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்கள். பழங்கால ஆண்டிக் பொருட்கள் சேகரிப்பாளர்களுக்கு இது விருப்பத்திற்குரிய இடம். ஆதிகால நாணயங்கள், பழைய இசைத் தட்டுகள், கிராம போன்கள்,  வழக்கொழிந்து போன புழங்கு பொருட்கள் எல்லாம் இங்கே வாங்கலாம். பேரம் பேசும் திறமை இருந்தால் அடிமாட்டு விலைக்கே வாங்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும். இங்கு விற்பனைக்கு வரும் விதவிதமான கருவாடுகளுக்கு ஏக ரசிகர்கள் உண்டு. வாலை, நெத்திலி, சென்னாங்குண்ணி கருவாடுகள் இந்த சந்தையின் ஸ்பெஷல் ஐட்டங்கள். சைக்கிள், கார், பைக் எல்லாம் கூட விற்பனைக்கு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

பொதுவாக சந்தை என்பது வியாபாரிகளுக்கான தலமாகத்தான் இருக்கும். அதேபோல, புதிய பொருட்கள், தயாரிப்புகள், உற்பத்திகளைத் தான் சந்தைகளில் விற்பனை செய்வார்கள். பல்லாவரம் சந்தையின் ஸ்பெஷலே, இங்கே யார் வேண்டுமானாலும் விற்கலாம். எதை வேண்டுமானாலும் விற்கலாம். வீட்டில் கிடந்து துருவேறிய தையல் மிஷின் பழைய கிரைண்டர் எல்லாம் கூட கொண்டு வந்து விற்கிறார்கள். 

கார்பரேட் மனிதர்கள் முதல் எளிய மனிதர்கள் வரை எல்லோருக்குமான சந்தையாக இது இருக்கிறது. சந்தையின் ஒரு பகுதியில், பழைய உடைகளை புதுப்பித்து விற்கிறார்கள். 20 ரூபாய்க்கு சேலை வாங்கலாம். 50 ரூபாய்க்கு ஜூன்ஸ் வாங்கலாம். இன்று விவசாயமே பொய்த்துப் போய் உழவு மாடுகளுக்கான தேவை அற்றுப்போய் விட்டாலும் பழைய மாட்டுச்சந்தையின் தொன்மம் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருக்கிறது. சந்தையின் ஒரு பகுதியில், மாட்டுக்கான கயிறுகள், வேளாண் கருவிகள் விற்கப்படுகின்றன. மாட்டுக்கு லாடம் அடிக்கும் தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார்கள். 

                                                                                                               – வெ.நீலகண்டன்
படங்கள்:குமரகுருபரன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.