ஃபஹத் ஃபாசில் நடித்த ‘மாலிக்’ படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அந்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பை தயாரிப்பாளர் வெளியிட்டு இருக்கிறார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில், நடிகர் விஜய் சேதுபதியை போலவே மற்ற மொழி படங்களிலும் உறுதுணை கதாப்பாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், தென்னிந்தியா முழுக்க இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. சில ஆண்டுகள் முன்புவரை, மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் தற்போது மற்ற மொழி சினிமாக்களிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பில் மிரட்டியவர், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

image

தற்போது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்திலும் நடித்து வருபவர், மலையாளத்தில் மகேஷ்வரன் நாராயணன் இயக்கத்தில் ‘மாலிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். உண்மைக்கதை ஒன்றை மையமாக வைத்து அரசியல் திரில்லராக தயாராகியுள்ள இந்தப் படம் தியேட்டர் ரிலீசாக வெளியாக இருந்தது. ஏனென்றால், ஃபஹத் கடைசியாக மூன்று படங்கள் `சி யு சூன்’, `இருள்’. `ஜோஜி’ ஓடிடி தளத்திலேயே வெளியானது. இதனால் தியேட்டர் அதிபர்களும், ரசிகர்களும் அதிருப்தி அடைய கட்டாயமாக ‘மாலிக்’ தியேட்டரில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

image

ஆனால், அது தற்போது நடக்காது போலிருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பே திரைக்கு வர தயாராகிவிட்ட இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஃபஹத் பாசில் நடித்த மாலிக் மற்றும் பிருத்விராஜ் நடித்த கோல்ட் கேஸ் ஆகியவை ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இந்த பெரிய திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட நீண்ட காலமாக காத்திருப்பதாகவும், மே 13 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததால் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன. தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதற்கும், தற்போதுள்ள பொருளாதார தடைகளைத் தருவதற்கும் எந்த தெளிவும் இல்லை என்பதால், இந்த படங்களுக்கான ஓடிடி வெளியீட்டிற்கு முயற்சிக்கிறேன். ஏனென்றால், நான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளேன். எந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியிடப்படும் என்பது பின்பு அறிவிக்கப்படும்” என்றுள்ளார். இதன்மூலம் இந்த லாக்டவுனில், ஃபஹத் ஃபாசிலின் நான்காவது படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தில் 20 வயது, 57 வயது என இரு வேறு வயதுடைய ஆளாக ஃபஹத் நடித்துள்ளார். இரு வேறு காலகட்டமாக உருவாகும் இந்த திரைப்படத்துக்காக ஃபஹத் 10 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை குறைத்துள்ளார். மெலிந்து போய் அடையாளமே தெரியாத அளவுக்கு ஃபஹத் மாறியிருந்தார். சில ஆண்டுகள் முன் மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’ திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் ‘மாலிக்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.