பேராவூரணி அருகே உள்ள கிராமம் ஒன்றில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களின் பெயர்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் மூலம் இவற்றை குறுங்காடுகளாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியதைடுத்து அதன் தொற்றுக்கு ஆளாகி பலர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் எனப் பலர் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் அனைவருக்கும் அருகிலேயே நடந்தது மனதிற்குள் நீங்கா வடுவை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் பேராவூரணியில் `கைஃபா’ என்ற பெயரில் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

மரக்கன்று

ஏரிகளைத் தூர் வாரி செயல்பாட்டுக்குக் கொண்டு வாருதல், பொது இடத்தில் குறுங்காடுகள் அமைத்தல், விவசாயிகள் விளைவித்த பொருளை நேரடியாக நல்ல விலைக்கு விற்பணை செய்து தருதல் போன்ற செயல்களை `கைஃபா’ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களது பெயர்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக வாட்ஸ் அப் நம்பர் ஒன்றையும் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். அதில் கொரோனாவால் இறந்தவர்களின் பெயர்களைப் பெற்று, அவர்களின் நினைவாக மரக்கன்று நட்டு அந்த கன்றுக்கு அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் தங்கள் குடும்பத்தில் இறந்தவரின் பெயர்களைத் தெரிவித்திருந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளையார் திடல் பகுதியில் சுமார் 42 ஏக்கர் அரசு நிலத்தில் கருவேல மரங்கள் மண்டி கிடந்தன. இதையடுத்து, `கைஃபா’வின் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உரிய அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களாக கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

அந்த இடத்தில் `கைஃபா’ விவசாயிகள் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முதற்கட்டமாக 18 ஏக்கரில் மரக்கன்றுகளை நடுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுக்கள் நட்டு இதைத் தொடங்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், கடற்கரை ஓரங்களில் எந்தெந்தப் பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட முடியும் என்பது குறித்து ஆராய்ந்து மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினர் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இதில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மக்களைக் காக்க முன்களப்பணியாளராக இருந்து உயிரை இழந்தவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவர்களின் பெயர்களில், மரக்கன்றுகளை நட்டு அடர்வனமாக உருவாக்க உள்ளனர். இது போன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் தொடரும். உலகை விட்டு மறைந்தவர்களின் நினைவுகள் மரங்களின் மூலமாக பூமியில் வாழ்கின்ற வகையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் பெயர்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகளாக அமைக்கப்பட உள்ளதாக `கைஃபா’ நிர்வாகிகள் தெரிவித்தனர்” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.