கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், பல முக்கிய சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கின்றனர்.

ரத்த தானம் செய்த கோவை இளைஞர்கள்

Also Read: `தடுப்பூசி போட்ட பிறகு ரத்த தானம் செய்யலாமா… கூடாதா?!’ – நிபுணரின் விளக்கம்

மேலும், இந்த அசாதாரண சூழலில் மருத்துவமனைகளுக்கு சென்று ரத்தம் வழங்குவதற்கு பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்திலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இருந்து நான்கு பேர், அவசரத் தேவைக்காக சென்னையைச் சேர்ந்த நோயாளிக்கு ரத்த தானம் செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு நோயாளி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மிகவும் அரிதான O-VE ரத்தம் நான்கு யூனிட்கள் தேவைப்பட்டுள்ளன. இந்தக் கொடிய கொரோனா காலத்தில் அவர்களுக்கு சென்னையில் இருந்துகூட எளிதில் ரத்தம் கிடைக்கவில்லை. இந்தத் தகவல் கோவை அன்னைக் கரங்கள் நலச்சங்கத்துக்கு கிடைத்துள்ளது.

உதிரம் கோபி

கடந்த சில ஆண்டுகளாகவே ரத்த தானத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும், இந்தக் குழுவைச் சேர்ந்த சல்மான், விஜய், தச்சன், சிவா ஆகிய நான்கு பேர் உடனடியாக சென்னை சென்று ரத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்தக் குழுவைச் சேர்ந்த உதிரம் கோபி, “ரத்த தானம் செய்வதுதான் எங்கள் குழுவின் முதன்மை பணி. எங்களிடம் ரத்த தானம் செய்ய 8,000 தன்னார்வலர்கள் உள்ளனர். நாங்கள் முகாம் எல்லாம் அமைத்து ரத்த தானம் செய்ய மாட்டோம். அவசரத் தேவைகளுக்கு உடனடியாக சென்று ரத்தம் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ரத்த தானத்தை வலியுறுத்தி தொடர்ந்து, விழிப்புணர்வும் செய்து வருகிறோம். எங்களது காரிலேயே நான்கு பேரும் சென்றோம்.

ரத்த தானம் செய்த கோவை இளைஞர்கள்

டீசலுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட நோயாளியின் அட்டண்டர் பணம் கொடுத்தனர். கொரோனா காலமாக இருந்தாலும், ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எங்கள் குடும்பத்தினர் புரிந்துள்ளனர். அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார்.

சென்னை சென்று ரத்த தானம் செய்த சல்மான், “நான் டி.ஜே வாக இருக்கிறேன். திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கொரோனா தடுப்பூசி போட்டால் ரத்த தானம் உடனே செய்ய முடியாது. எனக்கு ரத்த தானம் செய்ய நேரமும் நெருங்கிவிட்டது. அதனால், ரத்தம் கொடுத்துவிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று காத்திருந்தேன்.

சல்மான்

அதற்கு தகுந்தது போல தேவையும் இருந்தது. முந்தைய நாள் இரவு சென்னை கிளம்பினோம். அடுத்த நாள் காலை சென்னை சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். அதன்பிறகு மருத்துவமனை சென்று ரத்தம் கொடுத்தோம்.

எங்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளியின் அட்டண்டரும் உறுதுணையாக இருந்தார். மருத்துவமனையில் அமர்ந்து சாப்பிட கூட இடமில்லை. நாங்கள் சாப்பிடும் வரை அட்டண்டர் தனது கையில் சாம்பார், சட்னி கவர்களை பிடித்து நின்று கொண்டார். நாங்கள் வீடு வந்து சேரும்வரை விசாரித்துக் கொண்டேயிருந்தார். சின்ன சின்ன அன்பில்தானே வாழ்வில் ஜீவன் இருக்கிறது” என்றார்.

ரத்த தானம் செய்ய கோவை – சென்னை பயணம்

அதே நோயாளிக்கு அடுத்த வாரத்துக்கு தேவையான ரத்தத்தைக் கொடுக்கவும் வேறு சிலரை தயார் செய்துவிட்டது இந்த இளைஞர் படை!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.