கொரோனா ஊரடங்கு காரணமாக போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் (6.6.2021) சேத்துப்பட்டு சிக்னலில் போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அவ்வழியாக காரை போலீஸார் சோதனை செய்தனர். காரை ஓட்டிவந்த பெண்ணிடம் எங்குச் செல்கிறீர்கள் என்று போலீஸார் கேட்டனர். அதற்கு அந்த இளம் பெண் மீன்வாங்கச் செல்வதாக கூறியிருக்கிறார். இதையடுத்து போலீஸார், இ-பதிவு இருக்கிறதா என்று அந்த இளம் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள். இபதிவும் அவரிடம் இல்லை.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் ஓட்டுநர் உரிம்மத்தை பெற்ற போலீஸார், அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இந்தச் சூழலில் கார் ஓட்டி வந்த இளம்பெண், போனில் தன்னுடை அம்மாவுக்கு விவரத்தைக் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண்ணின் அம்மா சம்பவ இடத்துக்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அதை போலீஸார் தங்களின் கேமராவில் பதிவு செய்திருக்கின்றனர். இந்தச் சூழலில் போலீஸாருடன் வாக்குவாதம் செய்த பெண், அபராத ரசீதை கிழித்து எரிந்து விட்டு தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டார்.

இதுகுறித்து போலீஸார் உயரதிகாரிகளுக்கு வீடியோ ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தனர். போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்பேரில் வாக்குவாதம் செய்த பெண் மீது காவலர் ரஜித்குமார்,சேத்துப்பட்டுகாவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில்,“ நான் மேற்கண்ட முகவரியில் பணிபுரிந்து வருகிறேன். இன்று நான், தலைமை காவலர்கள் பிரபாகரன், ஆனந்தன், காவலர் விமல்ராஜ் என 4 பேர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக காரை ஓட்டி வந்த பிரீத்தி என்பவர் மீன்வாங்க கடற்கரைக்குச் செல்வதாகக் கூறினார். அப்போது நாங்கள் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினோம். அவரிடம் இபதிவும் இல்லை.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்

பின்னர் பிரீத்தி போனில் தகவலைத் தெரிவித்தார். அப்போது இன்னொரு காரில் வந்த பெண், என் மகளின் காரை மறித்து அபராதம் போட்டது யாரென்று தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் ரசீதை கிழித்துவிட்டு என்னைப்பார்த்து உன்னுடைய யூனிபார்மை கழட்டி விடுவேண்டா என பேசினார். நான் ஒரு வழக்கறிஞர், உன்னை சாகடிச்சுடுவேண்டா என மிரட்டினார். அதற்கு நாங்கள் முககவசம் அணியுங்கள் மேடம் என்று கூறினோம். அதற்கு போடா எனக்கு தெரியும் என ஒருமையில் பேசி விட்டு காரில் சென்றுவிட்டார். எனவே சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் போலீஸார் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), ஐபிசி 270 (நோய் பரப்பும் நோக்கில் செயல்படுவது), 188 (தடையை மீறி செயல்படுவதல்), ஐபிசி 294b (ஆபாசமாக பேசுதல்), ஐபிசி 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), ஐபிசி 506 (கொலை மிரட்டல்) என 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸாருடன் பெண் வழக்கறிஞர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.