சன் டிவியில் தினமும் இரவு 8 மணிக்கு ‘பூவே உனக்காக’ தொடரில் நாளை (7/6/21) முதல் ஹீரோவாக களம் இறங்குகிறார் அஸீம். அஸீம் எண்ட்ரியாகும் காட்சிகள் கடந்த இரு தினங்களாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்து மேலும் விசாரித்த போது…

’’சன் மியூசிக் ஆங்கராகக் கரியரைத் தொடங்கியவர்தான் அஸீம். பிறகு சன் டிவியில் விகடன் தயாரித்த ஹிட் சீரியலான ‘பிரியமானவள்’ தொடரில் நடித்தார். தொடர்ந்து விஜய் டிவிக்கு வந்தவர் அங்கு ‘தெய்வம் தந்த வீடு’, ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்களில் இவருக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.

மேலும் ஷிவானியுடன் ‘ஜோடி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள, இந்த ஜோடிக்கிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இந்த ஜோடிக்காகவே சமூக வலைதளங்களில் ஃபேன் பேஜ்கள் முளைத்தன.

அஸீம்

அந்தப் பேச்சை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த பிக்பாஸ் சீசனில் இவரையும் ஷிவானியையும் ஷோவுக்குள் அனுப்பத் திட்டமிட்டது விஜய் டிவி. பிக் பாஸ் சீசன் 4 தொடங்கிய முதல் நாளே ஷிவானி மட்டும் நிகழ்ச்சிக்குள் சென்றுவிட சில தனிப்பட்ட காரணங்களால் அஸீம் செல்லவில்லை.

இந்தாண்டு பிக் பாஸ் சீசன் 5-ல் நிச்சயம் அஸீம் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் தற்போது, மீண்டும் தன் தாய் வீடான சன் டிவிக்குத் திரும்பியிருக்கிறார்’’ என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

’பூவே உனக்காக’ தொடரில் அஸீமுக்கு ஜோடி ராதிகா. நாளை இரவு அஸீம் என்ட்ரியாகும் காட்சி ஒளிபரப்பாக உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.