டெல்லியில் உள்ள மிகப்பிரபலமான அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.

எந்த ஒரு மருத்துவமனையாக இருந்தாலும் அதில் பணிபுரியும் செவிலியர்களில் ஒருவராவது நிச்சயம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார்கள். மேற்கத்திய நாடுகள் தொடங்கி ஈராக், லெபனான் வரை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர்களின் பணி நிச்சயம் தவிர்க்க முடியாதது.

அதேபோல தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர்கள் பணி புரிகின்றனர். அப்படி ஒரு மருத்துவமனையான தில்லி அரசின் கீழ் இயங்கும் ஜிபி பந்த் அரசு மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் யாரும் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது என்றும் நோயாளிகள் மற்றும் சக பணியாளர்களில் பெரும்பாலானோருக்கு மலையாள மொழியை புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் இருப்பதாகவும் எனவே இனி மருத்துவமனையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அதை மீறி மலையாள மொழியில் பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

image

இந்த விவகாரம் தான் தற்பொழுது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இத்தகைய மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய தமிழ் தெலுங்கு உள்ளிட்ட வேற்று மொழியை சேர்ந்தவர்கள் தங்கள் மொழி தெரிந்தவர்களுடன் அந்தந்த மொழிகளிலேயே பேசுவார்கள் அந்த மொழி தெரியாத நபர்களிடம் ஹிந்தி மொழியில் பேசுவார்கள். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி பெரும்பாலானவற்றில் நிலைமை இப்படித்தான் உள்ளது. அவ்வாறு தங்களுடைய மலையாளம் அறிந்த சக பணியாளர்களுடன் தங்கள் மொழியில் பேசுவதாகவும் ஆனால் அதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சில செவிலியர்கள் கூறுகின்றனர்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய 50 சதவீதத்திற்கும் அதிகமான செவிலியர்கள் மலையாள மொழி பேசக்கூடியவர்கள் என்பதுதான். இந்த விவகாரம் வெளிவந்தவுடன் தனது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, மற்ற  மொழிகளைப் போலவே மலையாளமும் இந்திய மொழிதான். மொழி பாகுபாட்டினை உடனடியாக நிறுத்துங்கள் என கூறியுள்ளார். ராகுல் காந்தி தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தாய் மொழியில் ஒருவர் பேசக்கூடாது என ஒரு அரசு நிறுவனம் கூறுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் கடுமையாக சாடியுள்ளார். மற்றொரு மூத்த தலைவரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த கேசி வேணுகோபால் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகைய கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வடமாநிலங்களில் மொழி ரீதியிலான பாகுபாடு பெரிய அளவில் காட்டப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், அரசு மருத்துவமனையிலேயே இவ்வளவு வெளிப்படையாக சர்ச்சை வந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

-நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.