சிங்கத்தை அதன் குகையிலேயே சிதைத்துவிட்டு வருவது எத்தனை மிடுக்கானதாக கம்பீரமானதாக இருக்குமோ, அப்படியொரு சரித்திரத்தைத்தான், 2012-ல் கம்பீரின் கேகேஆர், சென்னையில் சிங்கமுக சிஎஸ்கேயையே சரியச்செய்து எழுதியது.

இரண்டு சீசன்களாய் வீழ்த்தவே முடியாத விருட்சமாக விஸ்வரூபம் எடுத்து நின்ற சிஎஸ்கேயின், சாம்பியன் கனவை, பகல் கனவாக்கிய பிஸ்லா, கேகேஆருக்கு முதல் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

ஹாட்ரிக் கோப்பை வேட்டைக்குத் தயாரான சிஎஸ்கே ஒருபுறம், மெய்டன் கோப்பைக்காகக் கண்களில் கனவுகளைத் தேக்கிய கம்பீரின் கேகேஆர் ஒருபுறமெனத் தொடங்கியது, 2012 ஐபிஎல் இறுதிப்போட்டி.

விளையாடிய முதல் நான்கு சீசன்களில், மூன்றுமுறை ஃபைனலுக்கு முன்னேறியிருந்தாலும், இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கான கடவுச்சீட்டு, சிஎஸ்கேவுக்கு அவ்வளவு எளிமையானதாக இல்லை. அந்தவருடம், புனே வாரியர்ஸின் வருகையால், ஒவ்வொரு அணியும், 16 லீக் போட்டிகளில் விளையாடின. சிஎஸ்கே, விளையாடிய முதல் பத்து லீக் போட்டிகளில், நான்கில் மட்டுமே வென்றிருந்தது.

IPL 2012 | CSK v KKR

ஆர்சிபியுடனான போட்டி, மழையால் கைவிடப்பட்டு, அதன்மூலம் ஒரு புள்ளியைப் பெற்று, ஒன்பது புள்ளிகளை வைத்திருந்தது, சிஎஸ்கே. ஆனால், கடைசி ஆறில் நான்கில் வென்றதால், 17 புள்ளிகளைப் பெற்று, கடைசிநேரத்தில் நான்காவது கிளாஸில் பயணித்து பிளேஆஃபில் நுழைந்தது. எனினும், எலிமினேட்டர், க்வாலிஃபையரில், முறையே மும்பையையும், டெல்லியையும் தோற்கடித்து, கோப்பைக்கான கடைசிப்பரிட்சையில், வந்து நின்றது சிஎஸ்கே.

கேகேஆரோ, முதல் மூன்று சீசன்களிலும், டேபிளின் அடிவாரத்தில் தேங்கியது. 2011-ல் கேப்டன்சிப் கங்குலியிடமிருந்து, கம்பீரின் கைக்குமாற, வீரர்களையும், அணியின் கட்டமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கி, 2011 சீசனிலேயே அணியை மூன்றாவது இடத்திற்கு எடுத்துச்சென்றார், கம்பீர். அந்த வருடம் இறுதிப்போட்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், 2012-ல் ஆரம்பம் முதலே, அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கேகேஆர். துருப்புச்சீட்டாக நரைனை கம்பீர் களமிறக்க, மிக எளிதாக லீக் சுற்றுக்களைத் தாண்டி, ஒரு போட்டி எஞ்சியிருந்த நிலையிலேயே, பிளேஆஃபிற்கு முன்னேறியது கேகேஆர்.

அங்கேயும் முதல் குவாலிஃபையரிலேயே, டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தி, முதல் கோப்பையை முட்டித்தூக்கும் முனைப்போடு, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதிலும், அந்தவருடம் ஹோம் கிரவுண்டல்லாத மைதானங்களில், 9 போட்டிகளில் 8-ல் வென்று மிரளவைக்கும் ரெக்கார்டை வைத்திருந்தது கேகேஆர். எனவே, சென்னையில் நடைபெற்ற ஃபைனல் அவர்களது நம்பிக்கையை ஒருசில கிலோமீட்டர்கள் முன்னே எடுத்துச் சென்றிருந்தது. சிஎஸ்கேயோ, சென்னையில் அந்தாண்டு நடைபெற்ற பத்தில் ஏழில் வென்று, சற்று செருக்கோடே சேப்பாக்கத்தில் காலெடுத்து வைத்தது.

டாஸை வென்ற சிஎஸ்கே, பேட்டிங்கைத் தேர்வு செய்ய, ஹசியும், முரளிவிஜய்யும் ஓப்பனிங் இறங்கினர். டில்லிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில், தனது சதத்தால் வெற்றிக்குவித்திட்ட முரளிவிஜய், அதே நம்பிக்கையோடே களமிறங்கினார். பாலாஜியின் காயத்தால், அவருக்குப் பதிலாக இறங்கியிருந்த, பிரட் லீயோடு, கம்பீர் பௌலிங் அட்டாக்கைத் துவக்கினார். சென்னை என்பதால், பவர்பிளே ஓவர்களிலேயே, ஷாகீப் மற்றும் நரைனின் சுழல்வித்தையைப் பயன்படுத்த கம்பீர் முடிவுசெய்து விட்டார்.

IPL 2012 | CSK v KKR

மறுபக்கம், முதல் இரண்டு ஓவர்களில் அமைதிப்படையாய் இருந்த சிஎஸ்கே ஓப்பனர்கள், அதன்பிறகு அதிரடிப்படை வீரர்களாய் உருமாற்றம் அடைந்தனர். போட்டியின் மூன்றாவது ஓவரில், பிரட் லீயின் பந்தில் ஆளுக்கொரு பவுண்டரியென பங்குவைத்து ஆரம்பித்ததோடு, ஷாகிப் வீசவந்த முதல் பந்தினையே ஓவர் த ஃபைன் லெக்கில், சிக்ஸருக்குத் தூக்கி, அதிரடியாய் ஆரம்பித்தனர். பவர்பிளே ஓவர்களிலேயே, 54 ரன்களோடு மிரட்டலாகத் தொடங்கியது சிஎஸ்கே. கேகேஆரோ, ஒரு விக்கெட்டுக்காக பௌலர்களை மாற்றிமாற்றி, `ஜக்லிங்’ ஆடிக்கொண்டிருந்தது. பத்தாவது ஓவர்வரை, விக்கெட் இழப்பின்றி, 86 ரன்களை எடுத்து மிக வலிமையான நிலையிலிருந்தது சிஎஸ்கே. ஒருவழியாக, கேகேஆரின் விக்கெட் தாகத்தை பாட்டியா தணித்து, 42 ரன்களை 131 ஸ்ட்ரைக்ரேட்டோடு குவித்திருந்த முரளிவிஜய்யை அனுப்ப, அந்த சீசனில் தன்னுடைய `தி பெஸ்ட்’ இன்னிங்ஸை ஆட, ரெய்னா உள்ளே வந்தார்.

சிஎஸ்கேவுக்கு நம்பிக்கையளிப்பதாக மாறத்தொடங்கியது, இக்கூட்டணி. பந்துகளை வீணாக்காமல், ‘ரன்னிங் பிட்வின் த விக்கெட்’ என்னும் அஸ்திரத்தோடு, தங்கள் பார்ட்னர்ஷிப்புக்கான அஸ்திவாரத்தை வலுவாக இட்டனர். ஓவருக்கு மூன்றுமுறை இரண்டு ரன்கள் என ரெய்னா மூச்சுமுட்ட ஓடியும் எடுத்தார்; அதே சமயம் யூசுஃப் பதானின் ஓவரில், மூன்றே பந்துகளில் 14 ரன்களைக் குவித்து பந்தை பவுண்டரி லைனை பார்க்கவும் அனுப்பி வைத்தார். 38 பந்துகளில் அரைசதமடித்தார் ஹசி. 73 ரன்களை, 10-க்கும் அதிகமான ரன்ரேட்டில் குவித்த இக்கூட்டணியை, காலீஸ் முறிக்க, கடைசி மூன்று ஓவர்களைச் சிறப்பிக்க, ஃபினிஷிங்கின் பிராண்ட் அம்பாசடர் தோனி வருகை தந்தார். இறுதி மூன்று ஓவர்களில், 30 ரன்களை அதிரடியாகச் சேர்த்தனர், இந்த இரட்டையர். கடைசிப் பந்தில், ஷாகிப்பின் பந்தை, பிரட்லீயிடம் கேட்சாகக்கொடுத்து ஆட்டமிழப்பினும், 73 ரன்களோடு, எடுத்த காரியத்தை முடித்துவிட்டார் மிஸ்டர் ஐபிஎல்.

190 ரன்கள் சிறந்த இலக்காய்த் தோன்றினாலும், இதே மைதானத்தில், முன்னதாக, இதே சீசனில், ஆர்சிபி வைத்த, 205 ரன்கள் டார்கெட்டையே, சிஎஸ்கே சேஸ் செய்திருந்தது நினைவுக்குவந்து, இந்த இலக்கு இறுதிப்போட்டிக்குப் போதுமானதாய் இருக்குமா என்ற தோற்றத்தை உருவாக்கியது. அது சின்ன எச்சரிக்கை மணியை, சிஎஸ்கே ரசிகர்களின் மூளைக்குள் அப்போதே ஒலிக்கச் செய்தது.

IPL 2012 | CSK v KKR | பிஸ்லா

பாலாஜியின் காயம் காரணமாக, அணியின் சமநிலையைச் சீராக்க, பிரட் லீயைக் கொண்டுவந்ததோடு, மெக்கல்லமுக்கு பதிலாக பிஸ்லாவையும், காயத்திலிருந்து மீண்டிருந்த மனோஜ் திவாரியையும் கொண்டு வந்திருந்தது கேகேஆர். அன்றைய தினம், அவர்கள் எடுத்த மிகச்சிறந்த முடிவு அது‌! ஒரு கோப்பையையே அவர்களுக்காய் வாங்கித்தந்த ஒற்றை முடிவு அது.

ஓப்பனர்களாக பிஸ்லாவும் கம்பீரும் களமிறங்க, முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே, கம்பீரின் விக்கெட்டை வீழ்த்தி, கம்பீரமாகத் தொடங்கியது சிஎஸ்கே. அடுத்ததாக, காலீஸ் உள்ளே வந்தார். கோப்பைக்கான ஓட்டத்தைத் தொடங்கியது, இக்கூட்டணி. மார்கல் வீசிய ஓவரில், பிஸ்லா அடித்த ஹாட்ரிக் பவுண்டரி சொன்னது, அன்றைய நாளை தனது பெயருக்கு பிஸ்லா பட்டா போடப்போகிறார் என்று. சுழலுக்காவது கட்டுப்படுவார்கள் என தோனி, அஷ்வினைக் கொண்டுவர, இரண்டு சிக்ஸர்களை கருணையேயில்லாமல், அவரது ஓவரில் அடித்தனர். பவர்பிளேயின் முடிவில் 56 ரன்களை எட்டிவிட்டது கேகேஆர்.

வென்றேயாக வேண்டுமென்ற வேட்கையோடு, ரன்ரேட்டை, முடிந்தவரை, பத்தைவிட்டு இறங்காமலே இவர்கள் பார்த்துக்கொண்டனர். 10 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய இவர்கள், பாதிக்கிணறை ஒரே மூச்சில் தாண்டி, தேவையானதில் சரிபாதிக்கும் அதிகமான ரன்களைக் கொண்டுவந்து விட்டனர். 14 ஓவர்கள்வரை வேகத்தடையின்றி, ஓடிக்கொண்டிருந்த கேகேஆரின் ஓட்டம் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்க, கதிகலங்கியது சிஎஸ்கே.

இறுதியாக, மார்கல் தனது கடைசி ஓவரில், 48 பந்துகளில், 89 ரன்களைக் குவித்திருந்த, பிஸ்லாவை ஆட்டமிழக்கச் செய்து, ஒரு சின்ன நம்பிக்கைக்கீற்றை கண்ணில் காட்டினார். சுக்லா உள்ளே வந்தார். வெறிபிடித்ததுபோல் ரன்சேர்த்த தனது பார்ட்னர் வெளியேற, அதிரடி அவதாரமெடுத்த காலீஸ், ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். பேட்டிங்கில் வாய்ப்புக்கிடைக்காத பிராவோவை, தோனி பந்துவீசத் திரும்பக் கொண்டுவர, லக்ஷ்மி சுக்லாவின் விக்கெட்டை வீழ்த்தினார் பிராவோ. அதற்குத் தண்டனையாய், அதே ஓவரில், பேக் டு பேக் பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாசினார் காலீஸ்.

IPL 2012 | CSK v KKR | ஷாகிப்

3 ஓவர்களில் 27 ரன்கள் தேவையென இலக்குக்கு மிக அருகில், காலீஸ் அணியை எடுத்துச்செல்ல, 18-வது ஓவரில், அஷ்வினின் பந்தில், யூசுஃப் வெளியேற, நம்பமுடியாத வகையில், போட்டியைத் தன்பக்கம் திருப்பத்தொடங்கியது, சிஎஸ்கே. இரண்டு ஓவர்களில், இருபது ரன்கள் தேவை என இலக்கு கேகேஆருக்கு கடினமானதாக மாற, 19-வது ஓவரில், 11 ரன்களை எடுத்துவிட்டாலும், 69 ரன்களைக் குவித்திருந்த காலீஸின் விக்கெட்டை கேகேஆர் பறிகொடுக்க, பிரஷர் பில்டப் ஆக ஆரம்பித்திருந்தது.

6 பந்துகளில், 9 ரன்கள் தேவையெனும் நிலையில், ஷாகிப்பும் மனோஜ் திவாரியும் உள்ளே நிற்க, கடைசி ஓவரை வீச, பிராவோ உள்ளே வந்தார். முதல் இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் மட்டுமே வந்திருக்க, சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள். ஆனால், அதிர்ஷ்ட தேவதை அன்றையதினம் கேகேஆரின் பேரை கோப்பையில் எழுதிக்கொண்டிருந்தாள். அதனை இன்னமும் அழுத்தமாக எழுதவைத்தார் மனோஜ் திவாரி. அடுத்த இரண்டு பந்துகளில் அடித்த அடுத்தடுத்து பவுண்டரிகளைப் பறக்க செய்தார். இரண்டு பந்துகள் மிச்சமிருந்த நிலையிலேயே, வெற்றிச்சிகரத்தைத் தொட்டது, கேகேஆர்.

கடைசி ஆறு ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சிஎஸ்கே, அதை முதல் பாதியில் செய்யத் தவறியதால், கோப்பையைக் கோட்டை விட்டது. கம்பீருக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க, சிலபஸுக்கு வெளியிலிருந்து சீறிவந்த பிஸ்லாவுக்கு, சிஎஸ்கேயிடம் பதிலில்லாமல் போனதற்கு விலையானது ஒரு கோப்பை.

பிஸ்லா, நரைன், காலீஸ் என மொத்தக்கோப்பையிலும் பலருடைய பங்குமிருந்தாலும், கம்பீரின் கேப்டன்சிப்தான், அணிக்குள் புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொண்டுவந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த வெற்றியை அவர் பாலாஜிக்குச் சமர்ப்பித்தார். காயமடைந்து அந்தப் போட்டியில் ஆடாத ஒரு வீரருக்காக, அதனை கம்பீர் செய்தது பெரிதாகப் பேசப்பட்டது. பாலாஜி சீசனின் முன்பகுதியில் செய்த சாதனைகளை அங்கீகரிப்பதற்காக கம்பீர் அப்படிச் சொன்னதே, அவர் எத்தகைய ஒரு தலைவர் என்பதற்கும் சான்றானது.

IPL 2012 | CSK v KKR

யூசுஃப் பதான், போட்டிக்குப்பின் பேசியபோது, கம்பீரின் கேப்டன்ஷிப்பை ஷேன் வார்னேயோடு ஒப்பிட்டிருந்தார். இது சற்றும் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இல்லை. அணியை, கம்பீர் இரண்டு ஆண்டுகளாய் வார்த்தெடுத்ததன் பலனாகத்தான், அணி அந்த வருடம் சாம்பியனாக மிளிர்ந்தது‌. அதுவும் இரண்டுமுறை சாம்பியன்ஷிப்பை வாங்கியிருந்த, சிஎஸ்கேவை சென்னையில் வைத்தே வீழ்த்தி அதைச் செய்திருக்கிறது.

மிக உணர்ச்சிப்பூர்வமான விநாடிகளைக் கடந்து கோப்பையை, கம்பீர் தூக்க, ஒட்டுமொத்த கொல்கத்தாவே அந்த நெகிழ்வான தருணத்தைக் கொண்டாடித் தீர்த்தது. மிகுந்த வலியினை அளிக்கும் வகையில், ஆறாத ரணத்தினை பரிசாகப் பெற்றிருப்பினும், பல வெற்றித்தடங்களைப் பதித்து, தங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அணியை இத்தகைய தோல்வியின்போது தாங்குவதுதானே நல்ல ரசிகர்களுக்கு அழகு. அதைத்தான் அந்தாண்டு செய்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.