சராசரி மனித வாழ்வில் அதிகபட்ச ஆசையே தனது இருப்பை ஏதேனும் ஒரு வழியில் தக்கவைத்துக் கொள்வது தானே…? ஒரு சொல்லாகவேணும் மிஞ்சிவிடவேண்டும் என்று எண்ணுகிற மனிதர்கள் எத்தனையோ பேர். நம்மை நமது இறப்பிற்கு பிறகு அடையாளப்படுத்தப் போவது எது.? நம்மை நமது காலத்திற்குப் பிறகு நம்மோடு வாழ்ந்தவர்கள் என்னவாக எதைக் கொண்டு நினைவில் நிறுத்துவார்கள்…? நமது நற்குணங்களைக் கொண்டா…? நமது தீய குணங்களைக் கொண்டா…? இரண்டும் இல்லை இவை அனைத்துமே நீர்த்துப் போகிறவை தான். ஆனால் நம்மை நமது காலத்திற்கு பிறகு சிறிது காலமேனும் பிறர் நினைவில் வைத்திருக்க நம்முடைய புகைப்படங்கள் மட்டுமே உதவுகின்றன. அப்படியோரு புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு சுவாரஸ்யமாக திரையில் எழுதப்பட்ட பக்குவமான சித்திரம் தான் போட்டோ ப்ரேம் (2021).

image

நீனா குல்கர்னி, அமித கோப்கர், விகாஷ் கண்டே உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த மராட்டிய படத்தை இயக்கி இருக்கிறார்கள் ஆதித்யா ரதி மற்றும் காயத்ரி படேல். மாயி எனும் வயதான பெண் தன் கணவருடன் புனேவில் வசித்து வருகிறார். ஒரு நாள் தன் கணவருடன் பணி புரிகிறவர் வீட்டில் ஒரு இறப்பு நிகழவே மரியாதை செலுத்த கணவனும் மனைவியுமாக சென்று வருகிறார்கள். அதுநாள் வரை மரணம் குறித்து பெரிதாக சிந்திக்காத மாயிக்கு அதன் பிறகு பலப்பல எண்ணங்கள் வந்து போகின்றன. துர் கனவுகளும் கூட வந்து போகின்றன. முதுமை வயதை அடைந்து விட்டதால் தன்னுடைய இறப்பு குறித்த சிந்தனையும் அவருக்கு வந்து போகிறது. மாயி ‘தன்னுடைய மரணத்திற்கு பிறகு நம்முடைய குடும்பம் நம்மை நினைவில் வைத்துக் கொள்ள ப்ரேம் போட்டு சுவற்றில் மாட்ட நல்ல போட்டோ தன்னிடம் இருக்கிறதா எனத் தேடுகிறாளர்.’ அப்படி ஒன்று அவரிடம் இல்லை. மாயிக்கு எப்போதும் கேமரா முன் நிற்பதென்பது கூச்ச உணர்வைத் தருவதால் அவளிடம் நல்ல போட்டோ என ஒன்று இல்லவே இல்லை. தனது மகள் திருமணத்தின் போது கூட மாயி தோன்றும் போட்டோ எதுவுமே பார்க்க திருப்தியாக இல்லை. அவள் க்ளைமேக்ஸில் தான் இறப்பதற்கு முன்நல்ல போட்டோவை எடுத்துக் கொள்கிறார்தான் ஆனால் அதற்காக அவள் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது என்பது தான் 93 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தின் திரைக்கதை.

image

மாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நீனா குல்கர்னி இந்திய முதியவர்களின் அசல் முகம். சராசரியாக முதுமை காலத்தில் மனித மனங்களில் தோன்றும் வாழ்க்கை குறித்த சித்திரத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். ஒரு சிறிய ஒன்லைனை வைத்துக் கொண்டு அதனை சுவாரஸ்யமான, நகைச்சுவையான, கலகலப்பான, உணர்வுப் பூர்வமான சினிமாவாக இயக்கி இருக்கும் ஆதித்யா ரதி மற்றும் காயத்ரி படேல் இருவருக்கும் பாராட்டுகள். ஒளிப்பதிவு சுமார் தான் என்றாலும் அழுத்தமான கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அது அத்தனை அவசியப்படவில்லை.

மாயி வீட்டில் வேலைக்காரப் பெண்ணாக வருகிறவர், மாயியின் பேத்தி, கணவர் என அனைவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல பல காட்சிகள் உண்டு. ஆனால் மாயி தினமும் காலையில் தினசரி செய்தித்தாள்களில் பிரசுரமாகும் கண்ணீர் அஞ்சலி பகுதியை தவறாமல் கவனிக்கிறார். அதிலிருக்கும் ஒவ்வொருவர் போட்டோவும் எப்படி இருக்கிறது என்று கவனிக்கிறார். இக்காட்சி அழகு. குறைந்த பொருட்செலவில் நிறைவாக உருவாகி இருக்கும் இப்படம் தற்போது அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

image

தமிழில் வெளியான முண்டாசு பட்டியை சில இடங்களில் இப்படம் நினைவுபடுத்துகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதனாலென்ன முண்டாசு பட்டியாக இருந்தாலும் புனேவாக இருந்தாலும் எல்லா ஊர்களிலும் மாயிக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தன் இறுதி பக்கத்தை எழுதப் போகும் ஒரு நன்நாளுக்காக தன் புகைப்படத்தை கையில் இறுக பிடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

– சத்யா சுப்ரமணி

> முந்தைய ஓடிடி திரைப் பார்வை: புலம் பெயர்தலின் வலியை உணர்ச்சி ததும்ப சொல்லும் ‘மினாரி’

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.