‘பேரிடர் கால மீட்பர்’ என்று பெயரெடுத்த ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். கன்தீப் சிங் பேடியை புதிய ஆணையராக நியமித்த தமிழக அரசை பலரும் பாராட்டியுள்ளார்கள். காரணம், அரசு முதன்மைச் செயலாளரான இவர், பதவிக்கேற்றார்போல் பேரிடர் கால செயல்களிலும் முதன்மையானவர்.  

தலைநகரத்தையே தலைப்பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடரிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றப் போகிறார்? புதிய திட்டங்கள் என்னென்ன வைத்திருக்கிறார் என்று ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்ஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். கொரோனா களப்பணியில் சுழன்றபடியே நம்மிடம் பேசினார்…

 சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றதும் மக்களுக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளதே? எப்படி பார்க்கிறீர்கள்?

” கொடுத்திருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து கடின உழைப்பை செலுத்தினால் கண்டிப்பாக கொரோனா பேரிடரிலிருந்து மீண்டு வெற்றிக் கிடைக்கும். அந்த வெற்றி, தனியாக செயல்படுவதால் கிடைக்காது. மாநகராட்சியின் துணை ஆணையர், அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் என  அனைவரின் கூட்டு முயற்சியால்தான்  கிடைக்கும். எங்கள் டீம் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. விரைவில் இதற்கான பலன் கிடைக்கும்.

மக்களின் நம்பிக்கையும் பாராட்டுகளும் அனைவருக்கும் உரியதானது. இந்தப் பாராட்டுகளையே இன்னும் கடினமாக உழைப்பதற்கான ஊக்கமாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். எங்கள் முழு உழைப்பையும் செயல்திட்டங்களையும் வகுத்து நிச்சயமாக கொரோனாவை கட்டுப்படுததுவோம். தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் கொரோனா குறையத் துவங்கியுள்ளது. அதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். எந்த பிரச்சனைக்குமே ஒரு தீர்வு உண்டு. இது மிகக் கடினமான காலக்கட்டம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தக் கடினமான சூழலில் இருந்து வெளியில் வருவோம். அதனால், நம்பிக்கைத் தளராமல் இருக்கவேண்டும்”.

image

உங்களை ”பேரிடர் கால ஸ்பெஷலிஸ்ட்” என்று பார்க்கப்படுவது எப்படி இருக்கிறது?

”ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்வதையெல்லாம்  எப்போதும் என் மனதில் ஏற்றிக்கொள்ளமாட்டேன். ஆனால், அப்படி பார்க்கும்போது நம்மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதால் நாம் இன்னும் முறையான செயல்திறனோடு  கடின உழைப்பை மக்கள் பணியில் செலுத்த வேண்டும் என்று பேரிடர் கால நிலைமையை சரிசெய்ய இன்னும் வழிமுறைகளைத் தேடிக்கொண்டே இருப்பேன். அது, சம்மந்தமாக தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பேன்”.

தொடர்ந்து பேரிடர் கால சூழலிலேயே பணியாற்ற அமர்த்தப்படுகிறீர்களே?  எப்போதாவது அலுப்பு ஏற்பட்டிருக்கிறதா?

“அலுப்பு… வருத்தம் என எதுவுமே கிடையவே கிடையாது. நான் இந்திய ஆட்சிப் பணிக்கு வந்ததே மக்கள் சேவை செய்யத்தான். அதனால்தான்,  பொறியியல் படிப்பு படித்திருந்தாலும் மக்கள் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்  இந்திய ஆட்சிப்பணித் துறையை  தேர்வு செய்தேன். மிகுந்த சந்தோஷமாகவும் பெருமையாகவும்தான் மக்கள் பணி செய்கிறேன். குறிப்பாக, பேரிடர் காலங்களில் மக்கள் பணி ஆற்றுவதை கடவுள் எனக்கு கொடுத்த ஒரு வாய்ப்பாக கருதுகின்றேன்”.

சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதும் உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

”தமிழக அரசு சவாலான பணியைக் கொடுத்திருக்கிறது. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களை கையாண்டதுபோல் கொரோனா சூழலையும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பணி அதிகம் இல்லாத இடத்தில் இருந்தால் வேலை செய்ய ஆர்வம் வராது. ஆனால், சவாலான சூழலில் பணிபுரிந்து மக்களை அந்த கஷ்டத்திலிருந்து வெளியில் கொண்டுவருவது ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அது வாழ்க்கையின் நல்ல அனுபவமும்கூட”.

image

உங்கள் பணியில் மறக்க முடியாத சவாலான விஷயங்கள்?

”சுனாமி மீட்புப் பணிகளும் புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிலிருந்து மீட்டதையும் எப்போதும் மறக்கவே முடியாது”.

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துவிட்டதே? கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

      “முதலில் கொரோனா பேராபத்துக் குறித்து இன்னும் பெரிய அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அடுத்ததாக, கொரோனா பாதித்தவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மற்றவர்களுக்கு பரவ விடாமல் அவர்களைத் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் உரிய மருத்துவ உதவிகளை ஏற்படுத்தவேண்டும். மூன்றாவதாக கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை வசதிகள் போன்றவற்றை சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்து கிடைக்க வழிவகை செய்து கொடுக்கவேண்டும். இப்படி, இன்னும் பல திட்டங்கள் வைத்துள்ளோம்”.

கொரோனா தொடர்பாக மக்கள் எந்தெந்த பிரச்சனைக்கு மாநகராட்சியை அணுகலாம்?

”அனைத்துப் பிரச்சனைகளுக்குமே அணுகலாம். மாநகராட்சியின் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டல அலுவலர்கள், நோடல் அலுவலர்கள் என அனைவரிடம் கொரோனா தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சொல்லலாம்.  எங்கள் குழு முழு வீச்சில் அதற்காக பணிபுரிந்து வருகிறது”.

வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.