கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் முழு லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று (மே 10) முதல் 24-ம் தேதி அதிகாலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு மற்ற அனைத்து இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா, டிவி சீரியல் ஷூட்டிங்கும் அடக்கம்.

‘’சினிமா ஷூட்டிங்கிற்குத் தடை விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரம் சீரியல் ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி தர வேண்டும். ஏனெனில் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பலவிதமான மன அழுத்தங்களுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மக்களை அந்த அழுத்தத்திலிருந்து சற்றேனும் விடுவிக்கும் ஒரேயொரு பொழுதுபோக்கு டிவி சீரியல்கள் மட்டுமே. அவை தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டுமெனில் ஷூட்டிங் நடைபெற வேண்டும். அதற்கு அரசு அனுமதி தர வேண்டும்’’ என சின்னத்திரை தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறார். ‘’ஒரு சீரியல் ஷூட்டிங் நடக்கிறதென்றால் அதை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. தினமும் எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன என்கிற விவரத்தைப் பார்த்தாலே, ஒரு ஷூட்டிங் நிறுத்தப்பட்டால் எவ்வளவு குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சீரியல்களில் பணிபுரிபவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட வாய்ப்பில்லாததால், இந்தப் பேரிடர் காலத்தில் இந்த ஷூட்டிங் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாகப்படுகிறது. அதனால், ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அப்படியே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி சீரியல்களின் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று ஆர்.கே.செல்வமணி முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

டிவி சீரியல் ஷூட்டிங்

தற்போதைய சூழலில் எல்லா சேனல்களிலும் இரு வாரங்களுக்கான எபிசோடுகள் கைவசம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஷூட்டிங் தொடர்ந்து நடந்தால்தான் அடுத்தடுத்த வாரங்களுக்கான எபிசோடுகளை எந்தத் தடங்கலும் இல்லாமல் வழங்க முடியும் என்கிறார்கள்.

இந்நிலையில் அரசிடமிருந்து சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என இயக்குநரும், ’பெப்சி’ தலைவருமான ஆர்.கே. செல்வமணியிடம் கேட்டேன். ‘’இன்று (11.5.2021) மாலை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இது தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மீட்டிங்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

கொரோனா காலத்தில் டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துவது தொடர்பாக சில நடிகர்/நடிகைகளிடம் பேசினோம். ‘’சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவதல் என எல்லா பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி ஷூட்டிங் நடத்தினாலும் ஸ்பாட்டில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவுகிறது. பல சீரியல்களில் நடிகர்களுக்கு கொரோனா பரவியதால் நடிகர்களை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை நிலை. மேலும் நடிகர்கள் மாஸ்க் போட்டு நடிக்கமுடியாது. நெருக்கமான காட்சிகள் இல்லாமலும் சீரியலை எடுக்கமுடியாது. ஒரு சிறிய வீட்டுக்குள் 50- 60 பேர் கூடி ஷூட்டிங் எடுக்கும்போது தொழில்நுட்பக் கலைஞர்கள் என்னதான் மாஸ்க் போட்டிருந்தாலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நடிகர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே ஷூட்டிங் செல்லவேண்டியிருக்கிறது’’ என்றார்கள்.

ஒரு பக்கம் டிவி சீரியலை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்கள், மறுபக்கம் கொரோனா பரவலால் அச்சத்தில் இருக்கும் நடிகர்கள் என அனைவரும் தமிழக அரசின் முடிவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.