இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த ஒரு தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வெளியானது. கேரள கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கின் தீர்ப்பு அது . 1992-ல் மர்மமான முறையில் இறந்துபோன அபயா தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்று வழக்கு தொடர்ந்த அபாயவின் பெற்றோர்கள் நீதிக்காக காத்திருந்தனர். 28 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையில் இருவர் கொலையாளிகள் என தீர்ப்பு வெளியான தினம் நீதிக்காக காத்திருந்த அபாயாவின் பெற்றோர் தாமஸ், லீலாமா இருவரும் உயிருடன் இல்லை. சிபிஐ விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்ட அந்த வழக்கு விசாரணையை, 16 வருடங்கள் கழித்து கையிலெடுத்து துரிதப்படுத்தியதில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பெரும் பங்கு உள்ளது. அவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த கந்தசாமி ஐ.பி.எஸ்.

அபயா

ஒரு மாநிலம் சிறந்த மாநிலமாகத் திகழ முதல்வர், அமைச்சர்களைப் போலவே சிறந்த அதிகாரிகளும் காரணமாகின்றனர். அரசினுடைய அதிகாரமிக்க பொறுப்புகளில் பணிசெய்யும் ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள் மக்களுக்கான திட்டங்கள் வகுப்பதிலும் செயற்படுத்துவதிலும் தலையாய பங்கு வகிக்கின்றனர். தமிழக அரசியலில் மக்களுக்கென வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் எப்படி ஒரு கட்சியின், தலைவரின் பங்கு உள்ளதோ பின்னணியில் ஒரு அதிகாரியின் பங்கும் இருக்கும். அப்படி பொதுவெளியில் தங்கள் பெயர் வராமல் மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரிகள் உள்ளனர். சமீபத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் தலைமை செயலர், அட்வகேட் ஜெனரல், உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது வழக்கமாக நடக்கும் அரசியல் செயல்பாடுதான். நேற்றைய தினம் 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் கவனம் பெற்றவர் கந்தசாமி ஐ.பி.எஸ். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி-யாக பணியமர்த்தப்பட்ட கந்தசாமி ஐ.பி.ஸ் இதற்கு முன் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பலரையும் விசரணைக்கு அழைத்தவர். பல வருடங்களாக முடிக்கப்படாமல் இருந்த வழக்கு விசாரணையை முடித்துக் காட்டியவர்.

அமித் ஷா

குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கு:

2005 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள சங்லி பகுதியில் ஒரு என்கவுண்டர் நடந்தது . லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும், சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ என்கவுன்டர் செய்யப்பட்டனர். சொராபுதீன் கூட்டாளி துல்சிராம் பிரஜாபதியும் குஜராத் காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அந்த என்கவுன்டர் போலியானது எனக்கூறி வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணையில் பல அரசியல் புள்ளிகள், உயர் அதிகாரிகள் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரணை மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் அந்த வழக்கை கையில் எடுக்கிறார் கந்தசாமி ஐ.பி.எஸ் . நீதிமன்றத்தின் உதவியுடன் பலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார். குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் அமித் ஷா . அவர் மீதும் இந்த வழக்கில் பல குற்றச்சாட்டுகள் இருக்கவே வாரண்ட் பெற்று அவரை கைது செய்கிறார் கந்தசாமி ஐ.பி.எஸ்.

கந்தசாமி ஐ.பி.எஸ்

அப்போது சிபிஐ-க்கு பல பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சிபிஐ அலுவலகத்தின் மீது கற்கள் எறியப்பட்டன. மாநிலத்தை ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரை கைது செய்து வழக்கில் சம்மந்தப்பட்ட பலரையும் திக்குமுக்காட வைத்தார் கந்தசாமி ஐ.பி.எஸ். அதன் பின் அமித் ஷா ஜாமீன் பெற்றார். அந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே வேறு மாநிலத்துக்கு பணி மாறுதல் ஆனார் கந்தசாமி ஐ.பி.எஸ். 2018-ல் தீர்ப்பு வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என பல காவல் துறை அதிகாரிகள் உட்பட 22 பேர் சதித் திட்டம் தீட்டுதல், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

2008 – ஆம் ஆண்டு கோவாவில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஸ்கேர்லெட் கீலிங் வழக்கிலும் விசாரணையில் இறங்கியவர் கந்தசாமி ஐ.பி.எஸ். அந்த வழக்கில் 10 வருடங்கள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதேபோல கந்தசாமி ஐபிஎஸ் விசாரணையில் இறங்கிய மற்றுமொரு வழக்கு லாவ்லின் ஊழல் வழக்கு. அந்த வழக்கில் இப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயனும் சம்மந்தப்பட்டிருந்தார். அவர் அப்போது கேரள மின்சாரத் துறை அமைச்சர். 1998-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில், 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பினராயி விஜயன்

அதில் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், லாவ்லின் ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு தருவதாகக் கூறிய ரூ. 92.3 கோடியை தரவில்லை எனவும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்து, ஆதரங்களைத் திரட்டியது. அப்போது அந்த விசாரணையைச் செய்தவர் கந்தசாமி ஐபிஎஸ். 2012-ல் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின் அந்த வழக்கில் பினராயி விஜயன் உள்ளிட்ட ஐந்து பேர் போதிய ஆதாரமில்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இப்படி பல வழக்குகளில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் பதவிகளில், அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் தயங்காமல் விசாரணைக்கு அழைத்து துணிச்சலானவராக பெயர் பெற்றவர் கந்தசாமி ஐ.பி.எஸ். 1989 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான கந்தசாமி ஐ.பி.எஸ் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி -ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசின் அடக்குமுறைகளுக்கு துணை நின்று மக்களுக்கு எதிராக செயல்பட்ட பல அதிகாரிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவது நாடெங்கிலும் நடந்துள்ளது. ஆளும் அரசின் கட்டுப்பாடுகளை அழுத்தங்களை மீறி மக்கள் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் சிலரை காலம் நம் கண்முன் காட்டியிருக்கிறது. அதிகார மையம் அரசியல்வாதிகள் என்றாலும் அதிகாரிகளின் கைகளில் மக்களுக்கு நன்மை பயக்கும் பலவும் உண்டு . மக்களின் எதிர்பார்ப்பு அமைச்சர்களின் பதிவியேற்பைப் போலவே அதிகாரிகளின் பணி நியமனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.