ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய்வரை ஏமாற்றிவிட்டு தலைமறைவான நபரை கைது செய்து, அவரிடமிருந்து தாங்கள் கட்டிய சீட்டுப் பணத்தை பெற்றுத் தரவேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்துள்ளனர்.

மக்கள் அளித்த புகார் மனு

Also Read: கரூர்: ‘கடன் வசூல் தொகை ரூ. 10 லட்சம்; மாயமான இடைத்தரகர் பெண்!’ – கலங்கும் சுயஉதவிக் குழு பெண்கள்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே இருக்கிறது, கீழவெளியூர் கிராமம். இந்த கிராமத்தில், பிள்ளையார் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். அதோடு, அருகில் உள்ள மக்களை சேர்த்துக்கொண்டு, ஏலச்சீட்டையும் நடத்தி வந்திருக்கிறார். அந்த வகையில், கீழவெளியூர் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சரவணனிடம், 1 லட்ச ரூபாய் ஏலச் சீட்டு போட்டுள்ளனர். அதற்காக, அனைவரும் மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் கட்டி வந்துள்ளனர். மாதத்திற்கு 5 சீட்டுகள் என 100 பேர் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களிடம் சீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டும், ஏலம் எடுத்தவர்களுக்கு சீட்டுத் தொகையை கொடுக்காமலும், சரவணன் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மக்கள் பலமுறை அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது, அவர்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் சரவணன் ஈடுப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான மக்கள் அனைவரும், இதுதொடர்பாக தோகைமலை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். ஆனால், அவர்களின் புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில் தான், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனு போட்டுவிட்டுச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்த மக்கள், “எங்க ஊரே மிகவும் வறட்சியான ஊர். நாங்க எல்லோரும் கூலி வேலைக்கு போய், அதுல கிடைக்கிற சொற்ப வருமானத்தை வச்சு காலத்தை நகர்த்துபவர்கள். நாங்க வயித்தைக் கட்டி, வாயைக் கட்டி சேர்த்த பணத்தைக் கொண்டு, சரவணன் நடத்திய ஏலச்சீட்டில் கட்டினோம். மொத்தமாக எங்களுக்கு கிடைக்கும் தொகையை வைத்து, எங்கள் குடும்ப பிரச்னைகளை தீர்க்கலாம் என நினைத்தோம். அதற்காகதான், சரவணனை நம்மிடம், அவர் நடத்தும் ஏலச்சீட்டில் நாங்களும் பங்குதாரர்களாக இருந்தோம். ஆனால், எங்கள் பணம் ரூ. 50 லட்சத்தை பெற்று, ஏலச் சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து நாங்கள் செலுத்திய பணத்தை பெற்றுத் தரவேண்டும். இல்லையென்றால் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் எங்க குடும்பங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும்” என்றார்கள் கண்ணீருடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.