கொரோனா என்ற கொடிய நோய்க்கு நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தினம் தினம் இறக்கின்றனர். மற்றொரு புறம், ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை , மாநில அரசாங்கங்களின் தலையில் சுமத்தியது, அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக, கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலைக்கு உயிரிழப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ஆம்புலன்சில் உடல்கள்

இறந்தவர்களின் உடல்களை எரிக்கக்கூட, வரிசையில் காத்திருக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மகாரஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில், அம்பஜோகாய் என்ற இடத்தில் உள்ள சுவாமி ரமானந்த் அரசு மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை ஒரே ஆம்புலன்சில் அள்ளிப்போட்டு எரிப்பதற்கு எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பிளாஸ்டிக் பேக்குகளில் 22 உடல்களை பேக் செய்து, அப்படியே சரக்குகளை லாரியில் ஏற்றுவது போல் உடல்களை தூக்கிப்போட்டு எடுத்து சென்ற காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதில் 14 பேர் ஒரே நாளில் கொரோனாவால் இறந்தவர்கள்.

இது குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் சிவாஜி கூறுகையில், “ மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லை. கொரோனா முதல் அலையின் போது 5 ஆம்புலன்ஸ்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது வெறும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருக்கின்றன.

அதில்தான் கொரோனா நோயாளிகளை அழைத்து வரவேண்டும். இறந்தவர்கள் உடல்களையும் எடுத்துச் செல்லவேண்டும். சில நேரங்களில் இறந்தவர்களின் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில், அதிக நேரம் பிடிக்கிறது. அதோடு அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இறப்பவர்களின் உடல்களும் இங்குதான் கொண்டு வரப்படுகிறது. அனைத்து உடல்களையும் வைக்க போதிய அளவு குளிர்சாதன வசதி இல்லை.

கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறோம். உடல்களை காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எரிக்கும்படி அம்பஜோகாய் நகராட்சியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது” என்றார். நகராட்சி நிர்வாகம் ஒரு ஆம்புலன்ஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் அரசே இறுதிச்சடங்குகளை செய்துவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.