“தங்கள் கூட்டணி மாயாஜாலம் நிகழ்த்தும்” என்று ஷங்கர் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ளது குறித்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஷங்கர் இன்று வெளியிட்ட அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ரசிகர்களுக்கு அமைந்தது. நீண்ட நாள்களாக ஷங்கர் பாலிவுட் செல்வார் என்று ஆருடம் கணித்தவர்களின் நம்பிக்கை இன்றைய அறிவிப்பின் மூலம் பலித்தது. ஆம், ஷங்கர் தனது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தியன்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார்.

இந்த ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார். 2022 மத்திய பகுதியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பாக பேசுவதற்காக இரண்டு நாள்கள் முன்பே ரன்வீர் சிங் சென்னை வந்திருந்தார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது தொடர்பாக ரன்வீர் சிங் அளித்த பேட்டி ஒன்றில்,”இயக்குநர் ஷங்கரின் அற்புதமான சினிமா உலகில் நான் இணைய இருப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக உணர்கிறேன். திரையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை உணர்த்தியவர் ஷங்கர். அவருடன் இணைந்து பணியாற்ற நிறைய முறை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருந்துள்ளேன். எங்கள் கூட்டணி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

‘அந்நியன்’ மாதிரியான கதைக்களம் கொண்ட ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்பது எந்த நடிகருக்கும் ஒரு கனவாக இருக்கும். நான் மிகவும் மதிக்கும் நடிகர் விக்ரம். நாட்டில் உள்ள மிகச் சிறந்த திறமையாளர்களில் அவரும் ஒருவர். அவர் ‘அந்நியன்’ படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விக்ரமை போலவே என்னுடைய நடிப்பும் அதே வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என நினைக்கிறேன். ஷங்கர் போன்ற ஜீனியஸ் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை” என்று பேசியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.