இந்த நினைவுகள்தான் எவ்வளவு ஆச்சர்யமானவை. சந்தோஷத்தையும், துக்கத்தையும் நொடிப்பொழுதில் மாற்றி மாற்றி கொடுக்கும் வித்தை தெரிந்த உலகின் ஆகச்சிறந்த விந்தை அவை. காலத்தைக் கடந்து பயணிக்க டைம் மெஷினோ, எய்ன்ஸ்டீனின் குவான்டம் ஃபிசிக்ஸ் கோட்பாடுகளோ தேவையில்லை. ஒரு நினைவுக்கீற்று போதும்!

கீழே இருக்கும் இரண்டு வரிகளைப் படித்துவிட்டு, நீங்கள் இருப்பது 2021-ம் ஆண்டா இல்லை 2011-ம் ஆண்டா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்…

“Dhoni finishes off in style. A magnificent strike into the crowd! India lift the World Cup after 28 years!”

யாரும் 2021-ல் இருக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஒரு புகைப்படத்தால், சில வரிகளால், ஒரு கானொளியால் நம்மைக் காலம் கடந்து பயணிக்கவைக்க முடியும். ஆனால், இந்தப் பயணங்கள் டைம் டிராவல் படங்களில் காட்டப்படுவதுபோல் சாகசங்கள் நிறைந்தவையாக இருக்காது. அவை, உணர்வெனும் ஊற்றின் நடுவே மேற்கொள்ளப்படும் பாய்மரப் பயணம். சிலருக்குத் தாலாட்டாய் அமையும். சிலரை சுழலுக்குள் தள்ளிவிடும். மேலிருக்கும் அந்த இரண்டு வரிகளும் நம் உணர்வுகளைக் கிளர்த்தெடுக்கும் ஒரு தருணம்தான்.

இப்போது அந்த வார்த்தைகள் ரவி சாஸ்திரியின் குரலில் உங்கள் செவிகளில் ஒலிக்கிறதா?! 2011 ஏப்ரல் 2, இரவு நேரத்தில் இருக்கிறீர்கள். தேர்தல் பிரசாரத்தின் எந்த ஓசையும் கேட்கப்போவதில்லை. எந்தக் கட்சியின் வாக்குறுதிகளும் உங்கள் செவிகளை எட்டவில்லை. தூரத்தில் வேட்டுச் சத்தம் கேட்கிறதா! இப்போது பக்கத்திலேயே 1000 வாலா பட்டாசுகள் சிதறும் ஓசை கேட்கிறதா!

உண்மையைச் சொல்லவேண்டுமானால், நினைவுகளின் வழியே காலம் கடந்து பயணிக்கும்போது அத்தனை புலன்களும் செயலிழந்து விடும். மனம் என்ற மாய உறுப்பே அத்தனை வேலைகளையும் செய்யத் தொடங்கும். இதுவரை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்த ஓசை, அந்த மனதின் வழியாகவே உங்களை எட்டிக்கொண்டிருக்கும். அடுத்து, கண்களின் வேலையையும் அதுவேதான் செய்யும்.

That moment… The moment..!

இந்தப் புகைப்படம் உங்களை இன்னும் சில நொடிகள் முன்னோக்கி நகர்த்தியிருக்கிறதா? அந்த 2 டைமன்ஷன் புகைப்படம், உயிர்பெற்று 3 டைமன்ஷனல் திரைப்படமாக உங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறதா! ரவி சாஸ்திரியின் குரல் அதற்குப் பின்னணி இசைத்துக்கொண்டிருக்கிறதா?!

குதிக்கவோ, கத்தவோ எத்தணிக்காதீர்கள். எந்த உணர்வையும் இப்போது மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். “தோனி, தோனி” என்ற கோஷத்தையும் உங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளுங்கள். ஏனெனில், 2011-ல் நீங்கள் செய்யும் விஷயம், 2021-ல் இருக்கும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். Work from home நபர் எனில் பிரச்னை இல்லை!

இப்போது, அதுவரை செயலிழந்து கிடந்த புலன்கள் செயல்படத் தொடங்கும். ஒரு பெருமூச்சு விட்டு, மூச்சைக் கட்டுப்படுத்தத் தடுமாறும் நாசிகளுக்கு ஓய்வளியுங்கள். கண்ணீரைக் கசிந்துகொண்டிருக்கும் கண்களை ஆசுவாசப்படுத்துங்கள். சிலிர்த்து நிற்கும் ரோமங்கள் சீராக அவகாசம் கொடுங்கள்.

நாம் நேசித்த, காதலித்த விஷயங்களும் மனிதர்களும்தான் தருணங்களும்தான் நினைவுகளாய் மூளையின் மடிப்பில் படிந்துகிடக்கின்றன. அந்த போட்டோ நெகடிவ்களுக்கு அடிக்கடி வண்ணம் தீட்டி நம் புலன்களுக்கு அனுப்பிவைத்து கண்ணீர் சிந்தவோ, குறுநகை உதிர்க்கவோ வைக்கிறது நம் மனம். இந்த 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியும், தோனியின் அந்த ஷாட்டும் நூறு கோடிப் பேரின் மூளையில் படிந்த நினைவு.

*****

இதில் என்ன வேடிக்கையெனில், அந்த ஷாட், அந்தத் தருணம் நம்மை, நம் பயணத்தை 2011-ம் ஆண்டோடு நிறுத்துவிடாது. பலரை இன்னும் முன்னோக்கித் தள்ளும், தள்ளிக்கொண்டே இருக்கும்.

Sachin

2011-ல் இருக்கும் நீங்கள் இப்போது கண்ணீர் சிந்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்! தோனியின் சிக்ஸர், யுவியின் செலிபிரேஷன், இந்திய வீரர்களின் அணிவகுப்பு, சச்சினின் கொண்டாட்டம்… அழுகை ஓய்ந்திருக்கிறா! வாய்ப்பில்லை. எப்படி ஓயும்! அதுதான் நம்மை பல ஆண்டுகள் கடந்த காலத்துக்குள் கடத்திச் சென்றிருக்குமே!

உங்கள் கண்களில் இருந்து கொட்டியது ஆனந்தக் கண்ணீர்தானா! சந்தோஷத்தால் உதிர்ந்த துளிகள் மட்டும்தானா அவை! நிச்சயம் இல்லை.

கோப்பையோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் சச்சினையும் ஷேவாக்கையும் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் விரக்தியில் உரைந்துபோய் அமர்ந்திருக்கும் அந்தப் புகைப்படத்தை உங்கள் மனம் நினைவுகள் வழி பாய்ச்சியிருக்கும். நீங்கள் 4 ஆண்டுகள் பின்னால் பயணித்திருப்பீர்கள்.

2007 world cup

2007, மார்ச் 23… 2011-ல் எந்த இலங்கையை வீழ்த்தியதோ அதே இலங்கையிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கும் இந்தியா. இன்னும் சில நாள்கள் முன்னால் சென்று வங்கதேச அணியுடன் தோற்ற போட்டியை அசைபோடுகிறீர்களா?! சச்சினை மிடில் ஆர்டரில் இறக்கிய கிரெக் சேப்பலைத் திட்டுகிறீர்களா… கண்கள் அழுதுகொண்டிருக்கின்றனவா… இந்தக் கண்ணீரின் மிச்சம்தான் 2011-ல் உங்கள் கண்களிலிருந்து கசிவது!

சிலரை இன்னும் 4 ஆண்டுகள் பின்னால் தள்ளியிருக்கும் அவர்தம் நினைவுகள். 2011-ல் சச்சினின் கண்களில் ஓர் ஆசுவாசத்தைப் பார்த்ததும், மூளையில் தேங்கிக் கிடக்கும் ஒரு புகைப்படத்தை நியூரன்களின் வழி பாய்ச்சும் நம் மனம். பொங்கி வரும் கண்ணீரை தேக்கி வைத்த கண்களோடு தொடர் நாயகன் விருது வாங்கும் சச்சினின் படம். இப்போது தேதி 23-03-2003. ஸ்பிரிங்(!!!) பேட் வைத்து ஆடிய பான்டிங்கையும், சச்சினின் கேட்சைப் பிடித்த மெக்ராத்தையும், டாஸ் வென்று பௌலிங் எடுத்த கங்குலியையும் திட்டிக்கொண்டிருக்கிறீர்களா… உலகக் கோப்பை என்ற உங்கள் ஆசை உடைந்ததைத் தாங்க முடியாமல் வெதும்பிக்கொண்டிருக்கிறீர்களா… உடைந்து போன கனவு கண்ணீராக உதிர்ந்ததுபோக மிச்சம் இருந்திருக்குமே அந்த சொச்ச துளிகள்… அதுதான் 2011-ல் கசிந்துகொண்டிருக்கிறது!

sachin

இப்படிப் பலரும் பல தருணங்கள் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருந்திருப்பார்கள். பலர் மனம் காம்ப்ளியின் கண்ணீரையும் நினைவுபடுத்திச் சென்றிருக்கும். இப்படி ஒவ்வொரு முறையும் நீங்கள் மிச்சம் சிந்திய கண்ணீரையும், அந்தத் தருணங்களையும் தோனியின் ஷாட்டும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும் நினைவுபடுத்திச் சென்றிருக்கும். அபோதெல்லாம் மிச்சம் வைத்திருந்த துளிகள்தான் இப்போது பெருக்கெடுத்து, சந்தோஷம் கலந்து வெளியேறிக்கொண்டிருக்கும்.

அந்த நாளில் உங்களிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் நிகழ்காலத்தின் காரணமாக வந்ததாக மட்டும் இருக்காது. ஒவ்வொன்றும் கடந்த காலத்தின் எதிர்விணை. உங்கள் குழந்தைப் பருவத்தில், உங்கள் பள்ளிக் காலத்தில், இளம் பருவத்தில், கல்லூரிக் காலத்தில், இலங்கையால், ஆஸ்திரேலியாவால், வங்கதேசத்தால், பான்ட்டிங்கால், ஜெயசூரியாவால் ஏற்பட்ட குமுறல்களின் தொடர்ச்சி அது. அந்த வெற்றி கடந்த கால வலிகளுக்கான மருந்தெனில், அந்த உணர்வுகள் நினைவுகள் மூலம் வெளியேறிக்கொண்டிருக்கும் கடந்த காலத்தின் மிச்சம்.

*****

சரத் பவார் கையிலிருந்து கோப்பையை தோனி வாங்கும்போது மீண்டும் ரவி சாஸ்திரியின் குரல் ஒலிக்கத் தொடங்கும்.

India lift the World Cup after 28 years…

World Cup after 28 years…

After 28 years…

லார்ட்ஸ் பால்கனியில் கபில்தேவ் உலகக் கோப்பையை வாங்கிய பிம்பம் வந்து சென்றதா. உங்கள் தந்தை சொன்ன கதைகள் நினைவுக்கு வருகிறதா. அந்தக் கதைகள் கேட்டபோது எழுந்த ஆசை உருவம்பெற்றதைப் பார்த்து நிம்மதியடைகிறீர்களா. உள்ளுக்குள் புன்னகைத்துக்கொள்கிறீர்களா. அந்தக் கண்ணீருக்கும் சரி, இந்தப் புன்னகைக்கும் சரி காரணம் நம் நினைவுகள்தான்.

வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் நினைவுகளே நமக்கு எல்லாமுமாக மாறிப்போகும். கால்கள் நடக்க மறுக்க, முதுகுத்தண்டு வளைந்து கிடைக்க, ஈசி சேரிலோ சக்கர நாற்கலியிலோ இரவும் பகலும் கடந்துபோகும் காலகட்டத்தில், நினைவுகளே மனிதனின் ஆக்சிஜன் ஆகிப்போகும். அதுவே வாழ்க்கையாகிப்போகும். அதனால்தானோ என்னவோ ஒவ்வொருவரும் நல்ல நினைவுகளைச் சேகரிக்கச் சொல்கிறார்கள். அந்த ஷாட், அந்த வெற்றி, அந்த உலகக் கோப்பை… ஒவ்வொரு இந்தியருக்குமான ஆகச்சிறந்த நினைவு!

ஆனால், இந்த வெற்றியின் சிறப்பு என்னவெனில், இது நம்மை எதிர்காலம் நோக்கியும் பயணிக்க வைத்திருக்கும்.

நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிகழ்வுமே எதிர்காலத்துக்கான நினைவுதான். இதோ, அந்த தோனியின் சிக்ஸரும், ரவி சாஸ்திரியின் குரலும், இந்திய அணியின் கொண்டாட்டமும், கம்பீரின் ஜெர்சியில் இருக்கும் கரையும், சச்சினைத் தூக்கிச் சுமந்த கோலியின் வார்த்தைகளும் நம்மை எதிர்காலத்துக்கும் பயணிக்க வைத்திருக்கும். நம் மகன்களுக்கு, மகள்களுக்கு இந்தக் கதையை, காட்சியைச் சொல்வதாய் கற்பணை செய்திருப்போம். அந்தக் காட்சிகளை விவரித்துக்கொண்டிருப்போம். ரவி சாஸ்திரியின் குரலில் அந்த வார்த்தைகளைச் சொல்ல முயற்சி செய்திருப்போம். அடுத்த தலைமுறைக்கான நினைவுகளை ஏற்படுத்தியிருப்போம்.

ஆம், அந்த தினம், அந்தத் தருணம், ஒரு நாளில் முடியும் கொண்டாட்டமல்ல. ஒரு தலைமுறையின் கனவு. பல தலைமுறைகளுக்கான நினைவு.

“என் வாழ்வின் கடைசி நிமிடங்களில், யாரிடமாவது அந்த ஷாட்டைப் போடச்சொல்லி பார்த்துக்கொண்டே இந்த உலகத்துக்கு குட்பை சொல்வேன். என் முகத்தில் புன்னகையோடு விடைபெறுவேன்” என்று தோனியின் அந்த ஷாட் பற்றிக் கூறினார் கவாஸ்கர். எதற்காக இன்னொருவர் வந்து போட்டுக்காட்டவேண்டும். அதுதான் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்குமே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.