ஏப்ரல் 2, 2011… இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பையை வென்று தோனி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்த தினம் இன்று. பெரும்பாலான ரசிகர்களுக்கு உலகக்கோப்பை என்றவுடன் தோனி அடித்த அந்த வின்னிங் ஷாட்டும், ரவிசாஸ்திரியின் ‘India lift the worldcup after 28 years…’ என்கிற அந்த கமென்ட்ரியுமே ஞாபகம் வரும். ஆனால், இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி அடித்த அந்த ஒரு சிக்சர் மட்டுமே காரணமில்லை!

28 வருட உலகக்கோப்பை கனவை நிஜமாக்க பல வீரர்களும் உயிரைக் கொடுத்து ஆடியிருந்தனர். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற தினத்தைக் கொண்டாடும்போது அந்த அத்தனை வீரர்களின் பங்களிப்பையும் சேர்த்துக் கொண்டாடுவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

இறுதிப்போட்டியில் ஆடிய வீரர்களின் வரிசைப்படி, 2011 உலகக்கோப்பையில் ஒவ்வொரு இந்திய வீரரின் பங்களிப்பு!

வீரேந்திர ஷேவாக்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஒரு வெறித்தனமான இன்னிங்ஸை ஆடி மிரட்டியிருந்தார் ஷேவாக். 140 பந்துகளில் 175 ரன்களை அடித்து இந்திய அணி முதல் போட்டியையே வெற்றிகரமாக தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்த பெரிய சதத்திற்கு பிறகு ஷேவாக்கிடமிருந்து இன்னொரு சதம் வரவில்லையென்றாலும், கணிசமான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 73 ரன்களையெடுத்து சச்சினுடன் பெரிய பார்ட்னர்ஷிப்பும் போட்டிருந்தார். இந்திய அணியும் சரி ரசிகர்களும் சரி ஷேவாக்கிடம் ஒரு அதிரடியான தொடக்கத்தைதான் எதிர்பார்ப்பர். அந்த எதிர்பார்ப்பை ஷேவாக் பெரும்பாலான போட்டிகளில் பூர்த்தி செய்தார். பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் வேகமாக 30+ ஸ்கோரை முக்கால்வாசி போட்டியில் எடுத்துக் கொடுத்தார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்து பாகிஸ்தானை பதறவைத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராகவும் இப்படி வேகமாக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்திருப்பார். ஷேவாக்கின் இப்படியான அட்டாக்கிங் இன்னிங்ஸ்கள், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கம்பீர் மீதான ரன்ரேட் அழுத்தங்களை வெகுவாகக் குறைத்தது. அவர்கள் நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸ் ஆட ஷேவாக்கின் அதிரடியே பேருதவியாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

உலகக்கோப்பை என்றாலே சச்சின் ஃபுல் ஃபார்மோடுதான் வருவார். இது அவரின் கடைசி உலகக்கோப்பை என்பதால், கூடுதல் பொறுப்போடும் நேர்த்தியோடும் ஆடியிருந்தார். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய இரண்டாவது லீக் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார் சச்சின். 115 பந்துகளில் சச்சின் அடித்த அந்த 120 ரன்கள் இந்திய அணி 330+ ஸ்கோரை கடப்பதற்கு உதவியாக இருந்தது. அதேமாதிரி, தென்னாப்பிரிக்கவுக்கு எதிராகவும் 101 பந்துகளில் 111 ரன்களை அடித்திருந்தார் சச்சின். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டை ஆக தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. லீக் போட்டிகள் இப்படி சோகமாக முடிந்தாலும், நாக் அவுட் போட்டிகளில் சச்சின் ஆடிய இன்னிங்ஸ்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 260 ரன்னை சேஸ் செய்த போது 53 ரன்களை எடுத்திருப்பார் சச்சின். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் சொதப்ப, சச்சின் மட்டுமே நின்று 115 பந்துகளை சந்தித்து 85 ரன்களை சேர்த்திருப்பார். சச்சினின் இந்த 85 ரன்கள்தான் இந்திய அணி 260 என்ற கௌரவமான டார்கெட்டை செட் செய்ய காரணமாக இருந்தது. சச்சின் தனது கரியரில் ஆடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் இதுவும் ஒன்று.

கௌதம் கம்பீர்

உலகக்கோப்பை என்றவுடன் தோனியை எவ்வளவு கொண்டாடுகிறமோ அவ்வளவு கம்பீரையும் கொண்டாட வேண்டும். உண்மையில் 2011 உலகக்கோப்பையில் கம்பீரின் பங்கு மிக முக்கியமானதாகவே இருந்தது. சச்சினுடன் டாப் ஆர்டரில் விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார். லீக் போட்டிகளில் வலுவான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். அதேபோல, காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவியிருந்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில், ஓப்பனர்கள் இருவரும் சொதப்ப கோலி, தோனி ஆகியோரோடு பார்ட்னர்ஷிப் போட்டு 97 ரன்களை அடித்து உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்தார். தோனி அடித்த 91 மட்டுமில்லை கம்பீர் அடித்த இந்த 97 ரன்களும் கொண்டாடப்பட வேண்டியதே.

விராட் கோலி

இளம் வீரராக இந்திய அணிக்குள் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே கோலிக்கு உலகக்கோப்பை அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. கோலியும் இதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து அடுத்தடுத்த போட்டிகளுக்கு ப்ளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டார். ஆனால், அடுத்தடுத்த லீக் போட்டிகளில் கோலி பேட்டிங் ஆர்டரில் தொடர்ந்து சரிவைக் கண்டார். நம்பர் 4-ல் ஆடிய கோலியை, தோனி நம்பர் 6,7-ல் எல்லாம் ஆட வைத்தார். அப்படி கோலி ஆடிய போட்டிகள் எல்லாமே சொதப்பல்தான். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மீண்டும் நம்பர் 4-ல் கோலிக்கு இடம் கிடைத்தது. அந்தப் போட்டியில் அரைசதம் அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார் கோலி. இறுதிப்போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் நம்பர் 4-ல் இறங்கி, கம்பீருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் போட்டிருப்பார். இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வர இந்த பார்ட்னர்ஷிப் மிக முக்கிய காரணமாக இருந்தது.

மகேந்திர சிங் தோனி

உலகக்கோப்பைக்கு முன்பாக நடந்த பயிற்சிப் போட்டியிலேயே நியூஸிலாந்துக்கு எதிராக தோனி ஒரு மிரட்டலான சதம் அடித்து அசத்தியிருப்பார். அந்த இன்னிங்ஸ் கொடுத்த பாசிட்டிவிட்டியோடுதான் உலகக்கோப்பைக்குள் அடியெடுத்து வைத்தார் தோனி. ஆனால், லீக் போட்டிகள், நாக் அவுட் என எதிலுமே தோனிக்கு பெரிய இன்னிங்ஸ் கைகூடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் நன்கு செட்டிலாகி அட்டாக் செய்வதற்கு தயாரான நேரத்தில் அவுட் ஆகி ஏமாற்றியிருப்பார். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு 30+ ஸ்கோர்கள் என்பதைத் தவிர குறிப்பிட்டு சொல்லும்படியான இன்னிங்ஸ்களை தோனி ஆடவில்லை. இதனால் இறுதிப்போட்டியிலுமே தோனியை யாரும் அவ்வளவு பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஆனால், சர்ப்ரைஸாக நம்பர் 5-ல் யுவராஜ்க்கு பதிலாக தோனி முன்னே இறங்கி அன்றைக்கு செய்ததெல்லாம் வரலாறு. தோனி ஆடிய ஒவ்வொரு பந்தும் அவர் அடித்த அந்த வின்னிங் ஷாட்டும் இன்னமும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. ஒரு கேப்டனாகவும் சீனியர் வீரர்களை பக்குவமாக கையாண்டிருப்பார்.

யுவராஜ் சிங் – தோனி

யுவராஜ் சிங்

சந்தேகமே இல்லாமல் 2011 உலகக்கோப்பையின் ஹீரோ யுவராஜ் சிங்தான். ஒட்டுமொத்தமாக 4 அரைசதங்கள், ஒரு சதம், 15 விக்கெட்டுகள். 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்றார். தொடர் நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக அரைசதமும் அடித்து 5 விக்கெட் ஹாலும் எடுத்து சாதனைப் படைத்திருப்பார் யுவராஜ். அதேமாதிரி, சென்னை வெயிலில் சுருண்டு விழுகிற நிலையிலும் நின்று சதமடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் நின்று ஆடி அரைசதம் அடித்து வெற்றி பெற செய்திருப்பார். அந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார். நாக் அவுட் போட்டிகளில் மட்டுமே 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்படி ஒரு ஆல்ரவுண்டர் இப்போது இல்லாததுதான் இந்திய அணிக்கு உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.

சுரேஷ் ரெய்னா

மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய ரெய்னா 74 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். வெறும் புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் பார்த்தால் ரெய்னா இந்த உலகக்கோப்பையில் ஒன்றுமே செய்யாதது போலத்தான் தெரியும். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் ரெய்னா அடித்த இரண்டு 30+ ஸ்கோர்கள் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. கடைசி லீக் போட்டி வரை ரெய்னாவை தோனி பதுக்கியே வைத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில்தான் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், ஆஸிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அசத்தியிருப்பார். விக்கெடையும் விடக்கூடாது, ரன்ரேட்டும் கைமீறி விடக்கூடாது என்கிற நிலையில் யுவராஜ் தவித்துக்கொண்டு நிற்க உள்ளே இறங்கி அதகளம் செய்திருப்பார் ரெய்னா. அதேமாதிரிதான், அரையிறுதிப் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 36 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்திருப்பார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களுமே நம்பராக பார்க்கும் போது சிறியதாக தோன்றும். ஆனால், அவை ஏற்படுத்திய தாக்கம் பெரிது.

உலக்கோப்பை

ஹர்பஜன் சிங்

உலகக்கோப்பை அணியில் நல்ல அனுபவமிக்க ஸ்பின்னராக இருந்த ஓரே வீரர் ஹர்பஜன் சிங் மட்டும்தான். கேப்டன் தோனியும் பயிற்சியாளர் குழுவும் அவரிடம் என்ன எதிர்பார்த்ததோ அதை குறைவில்லாமல் செய்துக் கொடுத்தார் ஹர்பஜன். அத்தனை போட்டிகளிலும் ஹர்பஜன் சிங் ஆடினார். எல்லா போட்டியிலும் அவருடைய எக்கானமி ரேட் 6-க்கு கீழ்தான் இருந்தது. மிடில் ஓவர்களில் எதிரணியின் ரன்விகிதத்தை குறைப்பதற்கு இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அம்லா, டிவில்லியர்ஸ், டுப்ளெஸ்சி என முக்கியமான வீரர்களை வீழ்த்தி அந்தப் போட்டி கடைசி ஓவர் வரை செல்ல மிகமுக்கிய காரணமாக இருந்தார். அரையிறுதியில் உமர் அக்மல், அஃப்ரிடி இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானை தோற்கடிக்க முக்கியக் காரணமாக இருந்தார். அதேமாதிரி, இறுதிப்போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த தில்ஷனின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கையை தடுமாறச் செய்தார்.

ஜாகீர் கான்

இந்திய அணியின் அட்டாக்கிங் பௌலராக பல மிரட்டலான ஸ்பெல்களை வீசியிருந்தார் ஜாகீர் கான். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி உறுதி என இருந்த போட்டியில் ஒரே ஸ்பெல்லில் ஆட்டத்தை மாற்றிக் காட்டியிருப்பார். இயான் பெல்லும் ஸ்ட்ராஸும் பெரிய பார்ட்னர்ஷிப் போட்டிருந்தனர். ஸ்ட்ராஸ் 150+ ஸ்கோரை அடித்திருப்பார். இவர்கள் இருவரையுமே அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி போட்டியை மொத்தமாக மாற்றியிருப்பார் ஜாகீர் கான். காலிறுதியில் மைக் ஹஸ்ஸி, கேமரூன் ஒயிட் இருவரையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 260 ரன்னுக்குள் கட்டுப்படுத்த உதவியிருப்பார். அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கம்ரன் அக்மலையும், மிஸ்பா-உல்-ஹக்கையும் வீழ்த்தி இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றிருப்பார். இறுதிப்போட்டியிலும் நல்ல ஃபார்மில் இருந்த தரங்காவையும் கபுகேத்ராவையும் வீழ்த்தியிருப்பார். எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக ஜாகீர்கான் வீசிய அந்த ஒரு ஸ்பெல் அவருடைய கரியரிலேயே மிகச்சிறப்பான ஒன்று!

முனாஃப் பட்டேல்

ஒரு மிதவேகப் பந்துவீச்சாளராக மிடில் ஓவர்களில் எதிரணியின் வேகத்தை கட்டுப்படுத்தவும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திக்கொடுக்கவும் முனாஃப் பட்டேல் பயன்படுத்தப்பட்டார். ஸ்லோயர் ஒன்கள், கட்டர்கள் மூலம் முனாஃபும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி இந்த மூன்று போட்டிகளிலுமே மிகவும் எக்கனாமிக்கலாக வீசியிருப்பார். இந்தப் போட்டிகளை இந்தியா வென்றதற்கு இவர் வீசிய மிடில் ஓவர்களும் மிக முக்கியக் காரணமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் இவர் வீழ்த்திய ஹஃபீஸின் விக்கெட் திருப்புமுனையாக அமைந்தது. இறுதிப்போட்டியில் விக்கெட் வீழ்த்தாவிடிலும் 41 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

உலகக்கோப்பை

ஸ்ரீசாந்த்

இந்த உலகக்கோப்பையில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யாத வீரர் ஸ்ரீசாந்த்தான். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் செமத்தியாக அடிவாங்கியிருப்பார். அதன்பிறகு, எந்தப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரையிறுதியில் நெஹ்ரா காயமடைந்துவிட, அவருக்கு பதிலாக இறுதிப்போட்டியில் ஸ்ரீசாந்த்துக்கு வாய்ப்புக் கிடைத்தது. இறுதிப்போட்டியிலும் அடிவாங்கவே செய்தார்.

நெஹ்ரா, பியூஷ் சாவ்லா, அஷ்வின் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்திருந்தனர். இவர்கள் அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டாடுவதே இந்திய அணிக்கு செய்யும் முறையான மரியாதையாக இருக்கும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.