கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகள் மூலமான ஆட்டோ டெபிட் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளால் ஓடிடி துறையினர் உள்பட பல்வேறு தரப்பும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு நிலவுகிறது.

ஒவ்வொரு மாதமும் எப்படியும் நமக்கு செலவு இருக்கும். உதாரணத்துக்கு புத்தகம், நாளிதழ் படிப்பது, ஓடிடி, டிஷ் டிவி, டெலிபோன் என மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்த சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால், ஆட்டோ டெபிட் மூலமாக தாமாக டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்ட் மூலமாக பணம் எடுப்பதற்கு நாம் அனுமதி கொடுத்திருப்போம்.

ஆனால், இனி ஆட்டோ டெபிட் முறையில் சிக்கல் ஏற்படகூடும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி ஆட்டோ டெபிட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, ஒரு சேவை முடிவடைப்போகிறது என்றால், அதற்கு ஐந்து நாள்கள் முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்ப வேண்டும். அது, இமெயில் அல்லது மெசஜ் என எதாவது ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும். அந்த நோட்டிபிகேஷனுக்கு அனுமதி வழங்கும்பட்சத்தில்தான் அந்த பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த வேண்டும். இவை அனுமதி ரூ.5,000-க்கு கீழான பரிவர்த்தனைக்குதான். ஒருவேளை ரூ.5000-க்கு மேல் பரிவர்த்தனை இருக்கும் பட்சத்தில், ஒன் டைம் பாஸ்வோர்டு மூலம் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில்தான் அந்தப் பரிவர்த்தனை முழுமையடைய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்தக் கூடுதல் ஒப்புதலுக்கு ஏற்ப சில வங்கிகள் தொழில்நுட்பத்தை உயர்த்தவில்லை. வங்கிகள் இந்த மாற்றத்தை செய்யாததால் கார்டு நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாது என துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் புதிய விதியால் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கபடுவர்கள் என அஞ்சப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.2,000 கோடிக்கு இதுபோல ஆட்டோ டெபிட் மூலம் பரிவர்த்தனை நடந்துவருகிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இருக்கிறது. ஆனால், இதனால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த ஆட்டோடெபிட் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் பாதிப்படையக் கூடும்.

ஒவ்வொரு மாதமும் தாமாக பணம் வந்துகொண்டிருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது வாடிக்கையாளர்கள் அனுமதி தேவை எனும்போது. அந்த சேவை மீது அதிருப்தியாக இருந்த வாடிக்கையாளர்கள் அதனை வேண்டாம் என்று சொல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சேவையை எப்படி நிறுத்துவது என நினைத்துக் கொண்டிருந்தேன் என்னும் மனநிலையில் இருப்பவர்கள் அனுமதி கொடுக்கமாட்டார்களோ என்னும் அச்சம் இதுபோன்ற சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் இருக்கும்.

சீராக வருமானம் வந்துகொண்டிருக்கும் சூழலில் ஒரு வாடிக்கையாளர்கள் விலகினால், ஏன் அந்த வாடிக்கையாளர் விலகினார் என்னும் காரணத்தை தேடி, அதனை சரி செய்ய வேண்டி இருக்கும். ஒருவேளை அவருக்கு பிடிக்கவில்லை நிச்சயம் வரமாட்டார் என தெரிந்துவிட்டார். அவருக்கு பதிலாக புதிதாக ஒரு வாடிக்கையாளர்களை தேட வேண்டும். ஆட்டோ டெபிட்டில் மாதம் குறைந்தபட்சம் இவ்வளவு வருமானம் நிச்சயம் என்னும் மனநிலையில் இருப்பார்கள். ஆனால், இனி நிரந்தர வருமானத்தை உருவாக்குதில் சிக்கல் ஏற்படும் என இதுபோன்ற சேவையை வழங்கும் நிறுவனங்கள் கருதுகின்றன. ஒடிடி சேவையை ஒரு மாதத்துக்கு பிறகு புதுப்பித்துகொள்கிறேன் என நினைத்தால்கூட ஒரு மாத வருமானம் அவர்களுக்கு குறையும்.

வங்கிகள், கார்டு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய உத்தரவு பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இந்தச் சிக்கல், கார்ட் மூலம் நடக்கும் பரிவர்த்தனைக்கு மட்டுமே. நெட் பேங்கிங் மூலம் நடக்கும் ஆட்டோ டெபிட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை . அதேபோல மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தவிர இந்த முறையை (Additional factor authentication) அமல்படுத்தாத வங்கிகளுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

தொழில்நுட்பத்தை மேம்படுத்தாததால், இந்தப் புதிய விதிமுறை தொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி , ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை தெரிவித்திருந்தன. “ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு ஆட்டோ டெபிட் சேவை தடைபடும். அதனால், நெட் பேங்கிங் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்” என வங்கிகள் தெரிவித்து வந்தன.

நெட் பேங்கிங் முறைக்கு உடனடியாக மாறலாம் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நேரடியாக பணம் செலுத்துவதுதான் இப்போதைகான தீர்வு என்று கருதப்பட்டது.

ஆறு மாத அவகாசம் வழங்கியது ரிசர்வ் வங்கி

ஆனால், இந்தப் புதிய விதிமுறையை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்த ரிசர்வ் வங்கி இப்போது செப்டம்பர் 30 தேதி வரை, அதாவது இன்னும் ஆறு மாத காலத்துக்கு அவகாசத்தை வழங்கி இருக்கிறது.

சில வங்கிகள் ஆட்டோ டெபிட் சேவையை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், வங்கிகள் ஆட்டோ டெபிட் சேவையை வழங்கவில்லை எனில், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கு வேறு வழியை கண்டறிய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த கால அவகாசத்துக்கு பிறகு, புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை உருவாக்கவில்லை எனும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய விதிமுறைகளால் ஓடிடி, டெலிகாம், மின்சார வினியோக நிறுவனங்கள் முதலான துறைகள் வெகுவாக பாதிக்கக் கூடும் என்று தெரிகிறது.

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.