உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று மாலை தனது கணவருடன், உறவினரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று நபர்கள், தம்பதியினரைத் தடுத்து நிறுத்தினர். அவர்களைத் தாக்கி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றிருக்கின்றனர்.

அங்கு கணவனின் கண்முன்னே, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களை விடுவிப்பதற்கு முன்னர், அவர்களிடம் இருந்த பணம், நகை அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். அதோடு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்ததாகவும், இந்த விஷயத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்த பெண் காவல் துறையிடம் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட தம்பதியினர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். ஒருவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள குற்றவாளிகளை தேடிவருகிறோம்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், “சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதோடு, மோப்ப நாய் கொண்டுவரப்பட்டுத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மீதமுள்ள குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆக்ராவின் காவல் ஆய்வாளர் நவீன் அரோரா கூறியுள்ளார்.
Also Read: கூட்டுப் பாலியல் வன்கொடுமை; போதைப்பொருள்! – உ.பி-யில் 22 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ` தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பெண்களை இழிவுபடுத்துகின்றது. பெண்களை அவமதிக்கும் தி.மு.க, ஆட்சிக்கு வரத் தகுதியற்றது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்குப் பாதுகாப்பு போன்றவைதான்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பெண்கள் மீது அக்கறை செலுத்தும் யோகி, தனது மாநிலத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதும் அவசியம்.