பவன், ராணா, ஐஸ்வர்யா ராஜேஷ்… விறுவிறு ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்!

பவன் குமார், ராணா நடிப்பில் ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்திருக்கிறார்.

மலையாளப் படமான ‘அய்யப்பனும் கோஷியும்’, திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்த திரைப்படம். இந்தப் படத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டு, ரூ.52 கோடி வசூல் செய்தது ‘அய்யப்பனும் கோஷியும்’.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றப் பலரும் போட்டியிட்டனர். இறுதியாக தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருப்பவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து அவ்வப்போது தகவல் வந்த வண்ணம் இருக்கும். ஆனால், அதில் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால், தமிழில் ரீமேக் செய்யப்படுவது இன்னும் கால தாமதமாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தெலுங்கில் ரீமேக் வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. பிஜுமேனன், பிரித்விராஜ் கதாபாத்திரங்களில் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆம், பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண், ராணா இருவரும் பிஜுமேனன், பிரித்விராஜ் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். தயாரிப்பாளர் நாக வம்சி என்பவர் தயாரித்து வருகிறார்.

பவன் கல்யாண், ராணா இருவருக்கும் இணையர்களாக வரும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் பெரிய இழுபறியே நீடித்து வருகிறது. பவன் கல்யாண் ஜோடியாக சாய் பல்லவியிடம் பட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தேதிகள் இல்லாதததை சுட்டிக்காட்டி அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான் மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷை இறுதி செய்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ராணாவுடன் ஜோடி சேருவார். அவரது பெயரை தயாரிப்பாளர் நாக வம்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தயாரிப்பாளர்கள் இப்படத்தை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM