விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, கேரள திரையுலகுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது, மம்மூட்டியின் ‘தி பிரிஸ்ட்’. கொரோனா பேரிடர் காலத்தில் திரையரங்கத்தினரை மீட்பதில் நடிகர் விஜய் போலவே மம்மூட்டி உறுதுணைபுரிந்துள்ளார்.

கொரோனா பேரிடர்… கேரளாவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகைக்கு பின் உச்சம் தொட்ட கொரோனா இன்னும் அங்கு விட்டபாடில்லை. இத்தனைக்கும் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்த பின்பும் கொரோனா பாதிப்பு தினமும் 5,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக அங்கு சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. சினிமா தொழிலாளர்கள், தியேட்டர் ஊழியர்கள் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு 50 சதவீத இருக்கைகள் உடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்று சில மாதங்களுக்கு முன் கேரள அரசு அறிவித்தது.

அரசின் அறிவிப்பை மலையாள திரையுலகம் வெகுவாக வரவேற்றாலும், புதுப் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய அவர்களுக்கு அச்சம் இருந்தது. காரணம், கொரோனா பாதிப்பின் உச்சத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா என்கிற அச்ச உணர்வு படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதில் இருந்து மாற்றி யோசிக்க வைத்தது. இதனால் சில மலையாள படங்கள் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன. இப்படியான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியானது.

அரசின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ‘மாஸ்டர்’ வெளியானாலும், படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வசூல் மலையாள திரையுலகினருக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. கொரோனா, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையில், கேரள இளைஞர்கள், மக்கள் விஜய்யின் மாஸ்டரை வெகுவாக ஆதரித்தனர். இதனால் படத்தின் வசூல் அங்கு கோடிகளை அள்ளியது. ‘மாஸ்டர்’ கொடுத்த நம்பிக்கையில் சில சிறிய மலையாள படங்கள் தியேட்டரில் களம் கண்டன. ஆனாலும், எதிர்பார்த்தபடி பெரிய நடிகர்கள், முக்கியமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்கள் வெளியாகவில்லை.

அதிலும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’, ‘லவ்’, ‘சாஜன் பேக்கரி’ போன்ற படங்களும் ஓடிடி தளத்தையே நாடின. இந்தப் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதிலும், தியேட்டரில் ரிலீஸ் செய்யாதது அம்மாநில தியேட்டர் அதிபர்கள் – சினிமா தயாரிப்பாளர்கள் இடையே விவாதங்களை மோதல் போக்கை ஏற்படுத்தியது. பெரிய நடிகர்களே இப்படி தியேட்டர்களை தவிர்த்தால் மக்கள் எப்படி வருவார்கள் என தியேட்டர் அதிபர்கள் நேரடியாகவே கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில்தான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது திரைப்படமான ‘தி பிரிஸ்ட்’ தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்றார். கொரோனா கட்டுப்பாடுகள் ஓரளவு தொடர்ந்து கேரளாவில் நடைமுறையில் இருப்பதால் முதலில் இந்தப் படத்தையும் அதன் தயாரிப்பாளர் ஓ.டி.டியில் வெளியிட தீர்மானித்திருந்தார். ஆனால், அதற்கு மம்மூட்டி அனுமதிக்கவில்லை என்றும், தியேட்டர் ஆடியன்ஸ் மற்றும் ஊழியர்களை கருத்தில் கொண்டு திரையரங்களில் வெளியிட அறிவுறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
அதன்படியே கடந்த வாரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மம்மூட்டி திரைப்படம் வெளியாவதாலும், படத்தின் நேர்மறையான விமர்சனம் போன்ற காரணங்களால் ‘தி பிரிஸ்ட்’ தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாஸ்டருக்கு இணையான வசூலை மம்மூட்டி படம் ஒவ்வொரு மண்டலங்களில் வசூலித்து வருகிறது. சில இடங்களில் அதிக வசூலை குவித்து வருகிறது. இன்னும் சில தினங்கள் இருப்பதால் பாக்ஸ் ஆபீஸில் அந்தப் படம் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

இந்த இரண்டு படங்கள் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக மற்ற பெரிய படங்களும் தற்போது தியேட்டர் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. மோகன்லாலின் ‘மரக்கையர் அரபிகடலிண்டே சிம்ஹாம்’, ஃபஹத் ஃபாசிலின் ‘மாலிக்’ மற்றும் நிவின் பாலியின் ‘துரமுகம்’, பிஜு மேனன் – பார்வதி நடித்த ‘ஆர்க்கரியாம்’, டோவினோவின் ‘கலா’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வரவுள்ளன. இந்தப் படங்களின் வரவு ரசிகர்களை தாண்டி தியேட்டர் ஊழியர்கள், சினிமா தொழிலாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளோடு மலையாள திரையுலகமும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புவதை காண முடிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.