அமைச்சராக வரும் அனந்த் மகாதேவன் காட்டுக்கு நடுவே நிலத்தை ஆக்கிரமித்து தன்னுடைய கனவுத்திட்டமான டவுன்ஷிப் ஒன்றை நிறுவ முயல்கிறார். காடே வீடு என்பதாய் ‘காடன்’ஆகத் திரியும் ராணா இதற்கு எதிரியாக வந்து நிற்கிறார். சட்டத்தை தன் போக்குக்கு ஏற்றவாறு வளைக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகார வர்க்கத்திடமிருந்து தங்களின் வாழ்விடத்தை இந்தக் காடனும் அவரின் நண்பர்களான யானைகளும் போராடி மீட்டார்களா என்பதே கதை.

* சீரியஸான சமூக அக்கறையுள்ள கதையாகத் தெரிந்தாலும், அதைச் சொன்ன விதத்தில் நிறையவே சொதப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். இத்தகைய படங்களுக்குத் தேவை ஆழமான ஆய்வுகளாலும் தரவுகளாலும் கட்டமைக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் மற்றும் அதை சீரியஸாக கையாளும் அணுகுமுறை. இரண்டிலுமே இங்கே சறுக்கல்தான். ‘யானை டாக்டர்’ சிறுகதை, இந்தியாவின் காட்டு மனிதர் ஜாதவ் பாயங்கின் வாழ்க்கை, தன்னுடைய ‘கும்கி’ படம் எனக் காடு தொடர்பாகப் படித்த அனைத்தையும் மொத்தமாகக் கொட்டி படமாக எடுத்திருப்பதால் ‘காடன்’ திரைக்கதை எட்டுத்திசைகளிலும் சிதறியோடுகிறது.

காடன்

* யானை தொடர்பான கிராஃபிக்ஸ் காட்சிகள் படத்தின் பலம். சுவர்களை முட்டி அழுவதும், உதவும் உள்ளங்களுக்கு நன்றி நவில்வதுமாக அவை கடத்தும் உணர்ச்சிகள் பார்ப்பவர்களைப் பாதிக்கின்றன. அதேபோல், காட்டைக் கவர்ந்து வரும் டிரோன் காட்சிகள், கண்ணுக்குத் தெரிந்தவரை விரியும் பச்சைப் பசேல் நிலப்பரப்புகள் கண்ணுக்கு விருந்தாகின்றன. இதைச் சாத்தியமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமாருக்குப் பாராட்டுகள்.

* ”சாமியார்கள்தான் இப்போ ஆடுறாங்க”, ”யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்” போன்ற சில இடங்களில் மட்டும் சமகால அரசியலைப் பகடி செய்திருக்கிறார்கள். அத்தகைய அப்ரோச் மட்டும் சற்று ஈர்க்கிறது.

* மேற்குத் தொடர்ச்சிமலை பெரிய மலைத்தொடர்தான். ஆனால் அதில் இந்த டவுன்ஷிப் சரியாக எங்கே வருகிறது? ஓரிடத்தில் கேரளத்து நெல்லியம்பதி என்கிறார்கள். இன்னொரு இடத்தில் தேனி பக்கம் கம்பம் என்கிறார்கள், இறுதியாக நீலகிரி மாவட்டம் என்கிறார்கள். இந்த இடக்குழப்பம் படத்தோடு ஒன்றிப்போவதைத் தடுக்கிறது. அதிலும், வரும் பாத்திரங்களில் பலர் படத்தின் இந்தி வெர்ஷனுக்காக வார்க்கப்பட்ட தோற்றத்திலேயே இருப்பது நம்மை இன்னும் அந்நியப்படுத்துகிறது. டப்பிங்கும் பல இடங்களில் சரியாக அமையவில்லை.

* காடு சார்ந்த படங்களில் பெரிய பலமாக இருக்கவேண்டிய பின்னணி இசை இதில் அநியாயத்திற்குச் சொதப்புகிறது. மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட படமென்பதால் பாடல்களிலும் ஏகத்துக்கும் அந்நியத்தன்மை.

காடன்

* ஒரு வனத்துறை அமைச்சரே எப்படி இவ்வளவு ஓப்பனாக காட்டுக்குள் டவுன்ஷிப் கொண்டுவரமுடியும். அதுவும் இத்தனை மீடியாக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது? அந்த ரிப்போர்ட்டர் ஏன் க்ளைமேக்ஸ்வரை எதுவுமே செய்யாமல் வெறும் படங்கள்/வீடியோ மட்டுமே எடுத்துக்கொண்டு இருக்கிறார்? ஒரு யானைப் பாகன் பேச்சைக் கேட்டு பலநூறு கோடி ரூபாய் ப்ராஜக்ட் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதெல்லாம் லாஜிக்கை இடறவைக்கிறது.

* சொற்ப காட்சிகளில் வருவதற்கு ஏன் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ற கேள்வி எழாமல் இல்லை. கிட்டத்தட்ட ‘கும்கி’யின் தொடர்ச்சியாக விரியும் அவரின் பாத்திரம் பிற்பாதியில் அப்படியே கழட்டி விடப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரில் அவர் தோன்றிய சில காட்சிகள்கூட படத்தில் ஏன் இல்லை என்ற குழப்பம் எழுகிறது. தம்பி ராமையாவின் இடத்தை நிரப்பத் தெலுங்கு நடிகர் ரகு பாபுவை இறக்கியிருக்கிறார்கள். ஆனால், அவரின் பாத்திரம் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

* அரசாங்கத்தால் தீவிரவாதிகளாகத் தவறாகச் சித்திரிக்கப்படும் போராளிகள் கூட்டத்தின் நோக்கம் என்ன, அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள், அவர்களில் பிரதான கதாபாத்திரமாகக் காட்டப்பட்ட அருவி என்ற பெண்ணின் பாத்திரமும் பிற்பாதியில் காணாமல் போயிருக்கிறது. நியாயமான காவல் அதிகாரியாகக் காட்டப்பட்ட போஸ் வெங்கட்டும் க்ளைமேக்ஸில் லீவ் எடுத்திருக்கிறார். இப்படி ஒரு சில கிளைக்கதைகளும் பாத்திரங்களும் முடிவுரையின்றி அந்தரத்தில் மிதப்பது ஏன் எனப் புரியவில்லை.

காடன்

* காட்டுமனிதனாக ராணா கானுயிர்களோடு பேசுகிறார் என்பதுவரை சரி. அவரையே ட்ரக்கை உரசி நிறுத்தும் அசாத்திய பலசாலியாகவும் நூறு அடி உயர மரத்தை கண்ணிமைக்குப்பொழுதில் ஏறிக் கிளைவிட்டுக் கிளை பறக்கும் சூப்பர்ஹீரோவாகவும் காட்டும்போது ‘காடன்’ பின்கதையின் யதார்த்தம் எங்கோ தொலைந்துபோய்விடுகிறது. அதேபோல் இப்படியான பாத்திரத்தின் உடல்மொழிக்கு இன்னமும் கொஞ்சம் உழைத்திருக்கலாமே ராணா?!

காடுகள் உருவாக்கத்தில் யானைகள் முக்கியமானவை என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய விலங்குகளுக்கு நியாயம் சேர்க்கும் படமாக இது இல்லை என்பதுதான் சோகமே! தெளிவான ஆய்வும், கதையைக் கையாண்ட விதத்தில் கொஞ்சம் யதார்த்தமும் நம்பகத்தன்மையும் இருந்திருந்தால் இந்த காடனை நிச்சயம் வரவேற்றிருக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.