மார்க்ஸ் தனது அறையில் இருப்பு கொள்ளாமல் அங்குமிங்கும் நடந்தபடியிருந்தான். திவ்யாவுக்கும் அவனுக்குமான உறவு இப்படி பங்குசந்தையாய் ஒருநாள் ஏற்றமும் மறுநாள் இறக்கமுமாய் இருக்கிறதே என்கிற யோசனை அவனுக்குள் ஓடியது. காதலாக முடிந்த இரவு இப்படிக் கலவரமாக விடியும் என அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவனது கோபத்தின் மேல் அவனுக்கே கோபம் வந்தது. திவ்யாவின் அப்பாவைப் பார்த்து “யாருடா நீ” எனக் கேட்க நேர்ந்ததற்காக தன்னைத்தானே நொந்து கொண்டவனாக அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

“அவனை முதல்ல வீட்ட விட்டு துரத்தும்மா” என்றார் திவ்யாவின் அப்பா மாதவன். அவர் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க அவரை சுற்றி நந்திதா திவ்யாவின் அம்மா ஆஷா, திவ்யா என மூவரும் அமர்ந்திருந்தனர்.

“அப்படி எல்லாம் அனுப்ப முடியாதுப்பா” என்றாள் திவ்யா.

“ஏன்… ஏன் முடியாது?”

“எங்களுக்காக அவன் இவ்வளவு நாள் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு இங்க வந்து செட்டிலாகியிருக்கான். உடனே போன்னா அவன் எப்படி போவான்?” என திவ்யா கேட்க மாதவன் முகம் மாறியது.

“உன் அப்பாவை ‘வாடா போடா’ன்னு மரியாதை இல்லாம பேசியிருக்கான்மா. அதுக்கு கோபப்படுவியா, அத விட்டுட்டு எங்க போவான்னு அவனைப் பத்தி கவலைப்படுறியேம்மா” என ஆதங்கமாகக் கேட்டார் மாதவன்.

“அப்படி இல்லப்பா… அவன் பிரச்னையான ஆளு. ஈஸியா எல்லாம் துரத்த முடியாது… கலாட்டா பண்ணுவான்!”

“அப்படி ஒருத்தனை ஏன்மா ஹவுஸ்மேட் ஆக்குன?”

“வேற வழி இல்லப்பா… அந்த மானஸ் லாஸ்ட் மினிட்ல எஸ்கேப் ஆயிட்டான். நந்துவோட ஃப்ரெண்ட் இவன். அவதான் இவனை சேர்த்துகிட்டா” என்றாள் திவ்யா.

நந்திதா “அடிப்பாவி” என்பது போல திவ்யாவைப் பார்க்க, திவ்யா அவளது பார்வையை தவிர்த்து அப்பாவைப் பார்த்தாள்.

“எக்ஸ்ட்ரா ரென்ட் நான் பார்த்துகிக்றேன். நானே போய் முதல்ல அவன வெளிய துரத்துறேன்” என மாதவன் எழுந்தார்.

“ஏங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க…” என்றார் திவ்யாவின் அம்மா.

“அவன் என்ன திட்டுனதை நீயும்தானே கேட்டுகிட்டு இருந்த… இப்ப என்ன அமைதியா இருன்ற”

“அதில்லைங்க…. வந்ததும் வராததுமா பிரச்னை வேண்டாம். பொறுமையா சொல்லி அவனை அனுப்பிக்கலாம். நீங்க முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க…”

அப்பா அனைவரையும் பார்க்க…

“ஆமாப்பா… அவனை நான் பார்த்துக்கிறேன் நீங்க குளிச்சிட்டு வாங்க” என்றாள் திவ்யா.

“இங்க பாரும்மா அவனைத் துரத்திட்டுதான் நான் ஊருக்கு போவேன்” என மாதவன் எழுந்து திவ்யாவின் அறைக்குள் சென்றார்.

திவ்யா எரிச்சலாக, “ஏய் நந்து கூப்புடுறி அவனை… மண்டையிலயே ரெண்டு கொட்டு கொட்டுனாதான் அவனுக்குப் புரியும்.”

“அவன் என்னடி தப்பு பண்ணான்?” என்றாள் திவ்யாவின் அம்மா.

“அம்மா” என ஆச்சர்யமாக திவ்யா பார்க்க…

“ஆமாடி… யாருடா நீன்னு எடுத்ததும் எகிறனது உங்கப்பா… அவன் பதிலுக்கு நீ யாருடான்னு கேட்டுட்டான்.”

நந்திதா சிரித்தாள்.

“இருந்தாலும் பெரியவங்களை இப்படித்தான் பேசுறதா?” என்றாள் திவ்யா.

“அவன் வீடு இது. இவரை அவன் முன்ன பின்ன பார்த்ததில்லை… கதவ தட்டி நீ யாருடான்னு கேட்டா கோபம் வராதா ஒருத்தனுக்கு… பொறுமையா தம்பி நான் திவ்யா அப்பான்னு சொல்லியிருந்தா அவன் மரியாதையா பேசியிருக்கப் போறான். அவன் பண்ணது ஒண்ணும் எனக்கு தப்பா தெரியல!”

“இப்ப என்ன அவன் பண்ணது தப்பே இல்லைன்றியா?!”

“நிச்சயமா இல்லை. உங்கப்பாவுக்கு நல்லா வேணும்… எல்லாரும் என்ன பொண்டாட்டியா அவரு அதட்டுனா பயப்படுறதுக்கு? கரெக்டா திருப்பி குடுத்தான் அவன். இனிமே யார்கிட்ட பேசுனாலும் யோசிச்சு பேசுவாரு!”

“அம்மா…. அப்பா ஃபுல் டென்ஷன்ல போயிருக்காங்களே… அதை எப்படி சமாளிக்கிறது?” என நந்திதா சிரிப்புடன் கேட்டாள்.

“அதை அப்புறமா பார்த்துக்கலாம் விடு” என சிரித்த அம்மா “ஆமா அந்த பையன் பேர் என்னடி?” எனக் கேட்டார்.

“மார்க்ஸ்” என நந்திதா சொல்ல அம்மாவின் முகத்தில் ஆச்சர்யம்.

“நீ சொன்னியே அந்த மார்க்ஸாடி இது… ரெண்டு பேரும் ஆப்போசிட் டீமாச்சே… எப்படி ஒரே வீட்ல?”

“அம்மா அது பெரிய கதை… பயங்கரமா அடிச்சுப்பாங்க… அதே மாதிரி ரொம்ப க்ளோசாவும் இருப்பாங்க… டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி…சண்டை போடாமலும் இருக்க முடியாது, தள்ளியும் இருக்க முடியாது” என நந்திதா சிரிக்க திவ்யா அவளை முறைத்தாள்.

அம்மா புன்னகையுடன், “எனக்கு அந்த புள்ளைய பிடிச்சிருக்குடி” என்றாள்.

“ரெண்டு நிமிஷம் கூட பார்க்கல… அதுக்குள்ள எப்படி அவனை பிடிக்கும் உனக்கு?”

“அவனோட கட்ஸ் பிடிச்சிருக்குடி… யாருடா நீன்னு உங்கப்பா அதட்டுனதும் பயந்து நடுங்காம நீ யாருடான்னு கேட்டான் பாரு… இந்த மாதிரி ஆள் எல்லாம் கொஞ்சம் அதிசயம்தான். அவன்கிட்ட என்னமோ இருக்குடி”, அம்மா சொல்லியடியே “சரி நானும் போய் குளிக்கிறேன்” என்றார்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“என் ரூம் யூஸ் பண்ணிக்குங்க அம்மா” என்றாள் நந்து.

நந்து புன்னகையுடன் திவ்யாவைப் பார்க்க…

“என்னடி சிரிப்பு?”

“அத்தைக்கும் மருமகனைப் பிடிச்சிருக்காம்” என நந்திதா சொல்ல திவ்யாவாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

“போடி…”

“நான் போறேன்… நீ போய் மார்க்ஸ் கிட்ட பிரச்னை ஒண்ணும் இல்லைன்னு சொல்லு… பாவம் ரொம்ப அப்செட்டா இருப்பான்.”

“அவன் அப்செட்டா இருக்கானா? எங்கப்பா கொலைவெறியில இருக்காரு… அவனை துரத்தாம விட மாட்டாரு” என்றாள் திவ்யா.

“பார்க்கலாம்” எனச் சொல்லிவிட்டு நந்திதா நகர்ந்தாள்.

திவ்யா மார்க்ஸின் அறைக்கதவை தட்டினாள். மார்க்ஸ் தயக்கமாகக் கதவை திறந்தான். திவ்யா ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன், “சாரி திவ்யா தப்பு பண்ணிட்டேன்… நிஜமாவே பெரிய தப்புதான். அவர்கிட்ட நான் அப்படி பேசியிருக்க கூடாது. பேசுனதுக்கு அப்புறம் எனக்கே ரொம்ப மனசு சங்கடமா போயிடுச்சு. நான் அவர்கிட்ட சாரி சொல்லிடுறேன்” என நிஜமான வருத்தத்துடன் மார்க்ஸ் சொன்னான்.

திவ்யா மார்க்ஸிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை. அவள் அவனை உற்றுப் பார்த்தாள். மன்னிப்பு கேட்கிற போது ஆண்கள் மிக அழகாகிவிடுகிறார்கள் எனத் தோன்றியது அவளுக்கு.

“திவ்யா சாரி நான்…”

“நீ ஒண்ணும் டென்ஷனாகாத… அப்புறமா அப்பா கிட்ட பேசிக்கலாம்” என்றாள் திவ்யா. அவளது வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலைத் தந்தன.

“ரொம்ப கோபமா இருக்காரா?”

‘ஆம்’ எனத் தலையாட்டினாள் திவ்யா.

“அம்மா?”

“அம்மாவுக்கு உன்னை பிடிச்சிருக்காம்” எனப் புன்னகைத்தாள்.

ஆச்சர்யமாக மார்க்ஸ், “என்ன சொல்ற?”

“உடனே திரும்பவும் மரத்தில ஏறிடாத… ரொம்ப ஃபீல் பண்ண போறியேன்னுதான் சொன்னேன்.”

“அப்பாகிட்ட மன்னிப்பு…” என மார்க்ஸ் இழுக்க…

“அது உங்க பிரச்னை… அதுல என்ன இழுக்காதே” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள் திவ்யா. மார்க்ஸ் பதற்றம் குறைந்தது போல உணர்ந்தான்.

………………………………………………………………………

தாட்சா தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவளது ஞாயிற்றுக்கிழமை வாடிக்கை அது. என்னதான் வேலைக்கு ஆள் இருந்தாலும் வாரத்துக்கு ஒரு முறை, தானே அனைத்தையும் சுத்தம் செய்தாள்தான் திருப்தி அவளுக்கு.

பழைய இந்திப்பாடல் புளூடூத் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. தலைக்கு எண்ணெய் வைத்து அதை தூக்கி சுருட்டி சொருகியிருந்தாள். முகத்திலும் எண்ணெய் பூசியிருந்தாள். காதில் கழுத்தில் அணிகலன்கள் எதுவும் இல்லை. சாயம் போன பழைய டி- ஷர்ட்டும், பலாசோ பேன்ட்டும் அணிந்தபடி கையில் இருக்கும் மாப்பால் தரையை சுத்தம் செய்தபடி இருந்தாள்.

வாயில் மணி ஒலித்தது. வீட்டில் வேலை செய்கிற பெண்ணாக இருக்கும் என்கிற யோசனையுடன் கதவை திறந்த தாட்சாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புன்னகையுடன் மேனன் நின்று கொண்டிருந்தார். அவரது கையில் பெரிய பழக்கூடை…

மேனனை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகத்தில் தெரிந்தது. சந்தோஷமாக தன்னை எதிர்கொள்வாள் என நினைத்த மேனனை தாட்சாவின் தர்ம சங்கடமான பாவனை துணுக்குற செய்தது.

“என்ன மேனன் இது?”

“ஃப்ரூட்ஸ்” என அவர் தடுமாறி ஏதோ சொல்ல…

“அது தெரியுது… வர்றேன்னு ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல…இப்படி திடீர்ன்னு வந்து நிக்குறீங்களே!”

“சாரி… நான் நான் வேணா போயிட்டு அப்புறமா வர்றேன்.”

“அந்த அர்த்தத்துல சொல்லல… போன் பண்ணியிருந்தா நான் குளிச்சி ரெடியாகியிருப்பேன்ல… உங்க முன்னாடி எப்படி நின்னுகிட்டு இருக்கேன் பாருங்க” என தாட்சா தயக்கமும் கூச்சமுமாகச் சொன்னாள்.

தாட்சாவின் பிரச்னை என்ன என்பது மேனனுக்குப் புரிந்தது. இதனால்தான் கோபமும் எரிச்சலும் என்பதை உணர்ந்த அவர் புன்னகையுடன், “ஒண்ணும் குழப்பம் இல்ல” என்றார்.

“உங்களுக்கு இல்ல… எனக்கு இருக்கு” என்றாள் அவள்.

“வேணும்னா போயிட்டு அப்புறம் வரவா?” என்றார்.

“ஒண்ணும் தேவையில்ல… வாங்க உள்ள… அதான் பார்த்தாச்சே அப்புறம் என்ன?”

மேனன் தயக்கமாக உள்ளே நுழைந்தவர் கையில் இருக்கும் பழக்கூடையை மேஜையில் வைத்தார்.

“என்ன திடீர்னு?” கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே இருந்த சின்ன தடுப்பு சுவரில் தன்னை முடிந்தவரை மறைத்து கொண்டு தாட்சா கேட்டாள்.

“யாரோ ஒரு ப்ரொடியூஸர் என் அட்ரஸைத் தெரிஞ்சிக்கிட்டு கூடை நிறைய பழத்தை அனுப்பிவிட்டுட்டாரு… திருப்பி அனுப்புனா மரியாதையா இருக்காது. இவ்வளவும் வெச்சுகிட்டு என்ன பண்றதுன்னு தெரியல அதான்!”

“அதனால கூடைய தூக்கிட்டு வந்திட்டீங்க” எனப் புன்னகையுடன் தாட்சா கேட்டாள்.

“இங்க எனக்கு இருக்கிற ஒரே ஃப்ரெண்ட் நீங்கதான்” என மேனனும் புன்னகைத்தார். தாட்சாவுக்குத் திரும்பவும் தனது கோலம் நினைவுக்கு வர,

“என் இமேஜே போச்சு… இனி என்ன எப்ப பார்த்தாலும் இந்த லுக்தான் உங்க நினைவுக்கு வரும்” என்றாள்.

மேனன் சிரித்தபடி “நயன்தாரா கொஞ்சம் டல்லா மேக்கப் போட்டு ஒரு ஃபிலிம் பண்ணாங்களே… அது என்ன பேரு?” எனக் கேட்டார்.

“ஐரா”

“ஆங்… அந்த படத்தில நயன்தாராவை யாருக்காவது பிடிக்காம போச்சா சொல்லுங்க?”

“அது எப்படி பிடிக்காம போகும். ஒரிஜினல் நயன்தாராவோட இமேஜ் நம்ம மனசுல இருக்குல்ல… என்ன கெட்டப் போட்டாலும் நம்ம அவங்களை நயன்தாராவாதான பார்ப்போம்”

“எக்ஸாக்ட்லி… என் மனசுல தாட்சாவோட இமேஜ் ஒண்ணு இருக்கு… அது எப்பவும் மாறாது” என்றார்.

“மேனன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” என தாட்சா சிரித்தாள்.

மேனன் சிரித்தபடி, ”அதைவிட சிம்ப்பிளான ஆன்சர் ஒண்ணு இருக்கு. மனசுக்கு பிடிச்சவங்க எப்படி இருந்தாலும் நமக்கு அழகாதான் தெரிவாங்க!”

தாட்சா புன்னகையுடன் “எது இது அழகா?”

ஆம் எனத் தலையாட்டியவர் “பேரழகு” எனச் சொல்ல தாட்சா சிரித்தாள்.

“அம்மா வீட்ல இல்லையா?”

“கோயிலுக்குப் போயிருக்காங்க!”

“ஓ”

“எனக்கு ஒரு 10 நிமிஷம் குடுங்க… குளிச்சி ரெடியாயிட்டு வந்துடுறேன்”

“ஒண்ணும் அவசரம் இல்ல… நீங்க ரெடியாகுங்க… நான் போய் ஒரு ஸ்மோக் பண்ணிட்டு வரேன்” என்றார் மேனன்.

இடியட் பாக்ஸ் | மேனன்

“இப்படியே பால்கனியில ஸ்மோக் பண்ணுங்க…”

“அய்யோ வீட்ல வேணாம்!”

“இட்ஸ் ஒகே மேனன்…”

“இல்ல என்கிட்ட சிகரெட்டும் இல்ல… கடையிலதான் வாங்கணும்!”

தாட்சா அவரைப் புன்னகையுடன் பார்த்தபடி நடந்து வந்தவள் டைனிங் டேபிளில் இருக்கும் அவளது ஹேண்ட் பேக்கைத் திறந்து அதிலிருந்து மேனன் எப்போதும் புகைக்கிற பிராண்ட் சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்து அவரிடம் நீட்டினாள். அவர் ஆச்சரியமாக தாட்சாவைப் பார்க்க…

“என்ன பார்க்குறீங்க… உங்களுக்காக தான் வாங்கி வெச்சேன். என்னைக்காவது ஒரு நாள் நீங்க சிகரெட் இல்லாம தவிக்கும்போது ஸ்டைலா எடுத்து நீட்டணும்னு நினைச்சேன். அது இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கல!” என அவள் சொல்ல மேனன் சின்ன தடுமாற்றத்துடன் அதை வாங்கினார்.

“யாராவது உங்க ஹேண்ட் பேக்ல இதைப் பார்த்தா என்ன நினைப்பாங்க?” எனக் கேட்டார்

“என்ன வேணா நினைச்சுட்டு போட்டும். நீங்க ஸ்மோக் பண்ணுங்க நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்” என தாட்சா நகர, மேனன் “தாட்சா” என அழைத்தார்.

தாட்சா திரும்பி பார்க்க, “இந்த சிகரெட் பாக்கெட்டை என்னைக்கு வாங்குனீங்க?”

“சரியா ஞாபகம் இல்ல. ஒரு 40 நாள் இருக்கும்னு நினைக்கிறேன்… ஏன் கேக்குறீங்க”

“கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க… அது ரொம்ப ஸ்பெஷலான நாள்… எனக்கு!”

தாட்சா சின்ன புன்னகையும் வெட்கமுமாகத் தலையாட்டிவிட்டு நகர்ந்தாள். காதலுக்கென்று ஒரு வயது இருக்கிறது. எந்த வயசுக்காரனாக இருந்தாலும் காதல் வந்ததும் அந்தக் காதல் வயதுக்கு வந்து விடுகிறார்கள். காதல் மனதில் இருக்கும் வரை அவர்கள் அந்த வயதிலேயே இருக்கிறார்கள். காதல் அவர்களை முதுமையடைய விடுவதில்லை என்பதுதான் உண்மை.

மேனன் பால்கனிக்கு வந்தார். சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தார். பற்ற வைத்தால் ஒரு சிகரெட்டை இழந்து விடுவோமே என அவருக்குக் கவலையாக இருந்தது. அதைப் பற்றவைக்காமல் வாயில் வைத்தபடி புகைக்கிற பாணியில் வெறுமனே இழுத்தார். அது அவருக்கு இதமாக இருந்தது.

மார்க்ஸ் காலையில் அலுவலகத்திற்குள் நுழைய ஆனந்தி அவனை எதிர்கொண்டாள். “மார்க்ஸ் வியாழக்கிழமை நாம பண்ற மூணு சீரியலோட முதல் எபிசோடை காட்டணுமாம். மெயில் வந்திருக்கு!”

“யாருக்குக் காட்டணுமாம்?”

“பாம்பேலர்ந்து மார்கெட்டிங் ஹெட், ஃபைனான்ஸ் ஹெட், நேஷனல் ஹெட் எல்லோரும் வர்றாங்களாம்”

“டீமுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா ஆனந்தி?”

“பண்ணிட்டேன். ரெண்டு ப்ராஜெக்ட் ரெடியாயிடும்… நம்ம ஸ்கூல் கதைதான்…”

“அதுக்கென்ன… அதான் ஒரு வாரமா ஷூட்டிங் போகுதே!”

“அதுலதான் ஏதோ பிரச்னைன்னு பாண்டியன் சொன்னாரு!”

“என்கிட்ட பாண்டியன் எதுவும் சொல்லலையே.. அவனுக்கு ஒரு போனைப் போடுங்க” என மார்க்ஸ் சொல்ல ஆனந்தி டயல் செய்தாள்.

“ஃபுல் ரிங் ஆகுது. அவன் எடுக்கல… திரும்பவும் ட்ரை பண்றேன்” என ஆனந்தி மீண்டும் முயற்சி செய்யப் போக மார்க்ஸ் குறுக்கிட்டு, “வேணாம் ஆனந்தி. நானே லொக்கேஷனுக்கு போயிடுறேன்… இன்னைக்கு எங்க ஷூட்டிங்?”

“சைல்ட் ஜீஸஸ் ஸ்கூல்… பல்லாவரம்”

“பாண்டியன் போன் பண்ணா நான் அங்கதான் வந்துட்டு இருக்கேன்னு சொல்லுங்க” என்றபடி மார்க்ஸ் கிளம்பினான்.

மார்க்ஸின் புல்லட் சைல்ட் ஜீசஸ் ஸ்கூலுக்குள் நுழைந்தது. ஷூட்டிங் நடப்பதற்கு அடையாளமாக ஜெனரட்டேர் வாகனம், பெட்போர்ட் வேன் மற்றும் சில கார்கள் நின்று கொண்டிருந்தன. மார்க்ஸ் பைக்கிலிருந்து இறங்கி பள்ளிக்குள் நுழைந்தான். முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளி யூனிஃபார்ம் அணிந்த துணை நடிகர்கள் பள்ளி வராண்டாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் 15-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அவர்களது பெற்றோர்களுடன் அமர்ந்திருந்தனர். மேக்கப் மேன், காஸ்ட்யூமர் என டெக்னீஷியன்கள் மார்க்ஸைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து நிற்க… தொலைவில் இருந்து அவனைப் பார்த்த பாண்டியனும் நெல்லையப்பனும் அவசரமாக மார்க்ஸ் அருகே வந்தனர்.

“என்ன பாண்டியா ஷூட்டிங் நடக்குதா இல்லையா?”

“நடக்குதுப்பா” எனக் கிண்டலும் எரிச்சலுமாக சொன்னார் நெல்லையப்பன்.

“மொத்த பேரும் இங்க இருக்காங்க… யார வச்சு ஷூட்டிங் நடக்குது?”

“யப்பா அந்த டைரக்டர் சரியான லூசா இருக்காம்பா… 7 மணிக்கு மொத்த பேரையும் அசெம்பிள் பண்ணியாச்சுப்பா… அந்த பய நாலு மணி நேரமா கதவு மூடுற க்ளோஸ் அப், சாக்பீஸ் டஸ்டருன்னு எடுத்துகிட்டு இருக்கான்பா!”

மார்க்ஸுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன பாண்டியா இது?”

“அவன் ஷார்ட் ஃபிலிமுக்கு ஓகே தலை… சீரியலுக்கு வேலைக்காக மாட்டான்.”

“அத ஏண்டா ஷூட்டிங் ஆரம்பிச்சு 10 நாள் கழிச்சு சொல்ற!”

“இல்ல தலை நல்லா எடுக்கிறான். நாலஞ்சு நாள் போனா சரியாயிடுவான்னு நினைச்சேன். அவனுக்கு இந்த ஃபார்மேட் செட்டாகல…” எனத் தயக்கமாக சொன்னான் பாண்டியன்.

இடியட் பாக்ஸ்

“சீரியல் ஷூட் பண்ணுவது என்பது திரைப்படம் குறும்படம் பண்ணுவது போல் அல்ல. இது மொத்தமாக வேறு. தரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அதை எவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கிறோம் என்பதும் முக்கியம்.

Good, Fast, Cheap… இந்த மூன்றும் ஒன்றாக வராது எனச் சொல்வார்கள். வேகமாகவும் சீப்பாகவும் நடப்பது தரமாக இருக்காது. சீப்பாகவும் தரமாகவும் இருக்கிற விஷயம் வேகமாக நடக்காது. அதேபோல் வேகமாகவும் தரமாகவும் இருக்கிற விஷயம் சீப்பாக கிடைக்காது.

ஆனால் சீரியல்களை பொறுத்தவரை இந்த மூன்றையும் ஒன்றாக சாதிப்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லை என்றால் தரமான சீரியலை எடுத்து இயக்குநர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார். தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தயாரிப்பாளர் பெரும் லாபம் சம்பாதிப்பார். ஆனால் சீரியல் பார்க்க சகிக்காது. தரத்தையும் பட்ஜெட்டையும் பேலன்ஸ் செய்வதுதான் சீரியல் தயாரிப்பில் இருக்கும் சவாலே.

மெலிதான பயம் மார்க்ஸுக்குள் படர்ந்தது.

“எத்தனை நாளா ஷீட்டிங் நடக்குது?”

“பத்து நாள்”

”இதுவரைக்கும் என்ன செலவாயிருக்கும்?”

”ப்ரீ ப்ரொடக்‌ஷன் எல்லாம் சேர்த்து 25 லட்சம் ஆயிருக்கும். ”

“எத்தனை எப்பிசோட் ஷீட் பண்ணியிருப்பான்?”

“இரண்டு எபிசோட் தலை… அதுவும் ஆர்டரா ஷூட் பண்ணல…”

மார்க்ஸ் அதிர்ந்தான். ஒரு எபிசோடுக்கு சேனல் தரும் தொகை 2 லட்சம். இவன் இரண்டு எபிசோடுக்கு செலவு செய்தது 25 லட்சம். ஆக பத்துநாளில் நஷ்டம் மட்டும் 21 லட்சம். சொன்ன தேதியில் முதல் எபிசோடை காட்ட முடியாது. சேனலில் வேலை இழந்து தன்னை நம்பி தயாரிக்க வந்த நண்பர்களுக்கு ஆரம்பத்திலேயே 21 லட்சம் ரூபாய் நஷ்டம். தன் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் மேனன் தன்னால் அனைவருக்கும் முன்னால் தலை குனிய நேரிடும்.

மார்க்ஸுக்குத் தலை சுற்றியது!

– Stay Tuned…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.