`கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனை வர்ணிப்பார் கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார். அடச்சே… இந்த எடப்பாடி பழனிசாமி பற்றி எழுதத் துணிந்தாலே நமக்கும்கூட வார்த்தைத் தடுமாறுகிறது. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்பர்தான். ஆனால், இந்தக் கடன்கார வரிகளை எழுதியது அவரில்லை என்பது தனிக்கதை! சரி, அவரே எழுதியதாக வைத்துக் கொள்வோம். அப்படி எழுதியவர், இந்த எடப்பாடியைப் பார்த்திருந்தால்… `கம்பன் ஏமாந்தான்’ என்று தன்னைத்தானே நொந்து கவி பாடியிருப்பார். பின்னே… கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி வரைக்கும் தமிழக மக்களின் தலையில் கடனைச் சுமத்திய பிறகும் கலங்காமல் ஆணி அடித்ததுபோல நிற்கிறார்… அது இலவசம், இது இலவசம் என்று இந்தத் தேர்தலை மனதில் வைத்து அடுத்தடுத்து அறிவிப்புகளாக அள்ளியும் விடுகிறாரே எடப்பாடி… அப்பாடி!

Karthik

`கடன் வாங்காமல், குடும்பம்கூட நடத்த முடியாது’ என்று நம்புபவர்கள்தாம் இங்கே அதிகம். அதேபோல, கடன் வாங்குவதை ஊக்கப்படுத்தும் பொருளாதார பூதங்களும் இங்கே அதிகமே! உண்மையில், கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துவதுதான் நியாயமான ஒன்று. விரலுக்கேத்த வீக்கம் என்கிற வகையில்தான் இருக்க வேண்டும். அதைத்தான் அனைவருமே பின்பற்ற வேண்டும்… ஊக்கப்படுத்த வேண்டும். வீட்டுக்கு மட்டுமல்ல… நாட்டுக்கும் இதுவேதான். ஆம், இருக்கின்ற வருமானத்தை வைத்துக்கொண்டே நிச்சயமாகக் கடனற்ற… மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆட்சியை நடத்துவது ஒன்றும் சவாலான விஷயமே அல்ல. ஆனால், ஆட்சியைப் பிடிக்க வேண்டும்; ஊரை அடித்து உலையில் போட வேண்டும்; மொத்தத்தையும் சுருட்டி வாரிசுகளுக்கும், பேரன்-பேத்திகளுக்கும் தோழிக்கும் தோழியின் குடும்பத்துக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எண்ணங்களுடன் ஆட்சிக்கு வருபவர்களையே நாம் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும்போது, நம் தலையில் பூவா வந்துவிழும்… கடன்தான் விழும்!

`மக்களுக்காகவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும்தான் தொடர்ந்து கடன் வாங்கப்படுகிறது. அதற்காக கடன் வாங்குவதில் தவறில்லை’ என்பதுபோன்ற பிம்பத்தையே ஆட்சியாளர்கள் தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். ஆளுங்கட்சி வரிசையில் இருக்கும்போது இப்படிப் பேசுபவர்கள், எதிர்க்கட்சி வரிசைக்கு வந்துவிட்டால் `நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில்கூட 64,000 ரூபாய் கடன்’ என்று எதிர்ப்பரசியல் செய்கிறார்கள்.

உண்மையில் சொல்லப்போனால், மக்களுக்காகத்தான் இந்தக் கடன் வாங்கப்படுகிறது என்பதே சுத்த மோசடி. அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என்று பெரும் பெரும் பதவிகளில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் இந்த அரசாங்கம் செலவழிக்கும் தொகையைக் கணக்கிட்டுப் பாருங்கள்… உண்மை புரியும். உதாரணத்துக்கு ஓர் அமைச்சருக்கு வீடு, அலுவலகம், கார், பாதுகாப்பு போலீஸ் என்று அரசாங்கம் கொடுக்கிறது. இவை அடிப்படையாகக் கொடுக்க வேண்டியவைதான். மக்களுக்காக உழைக்கிறார்களோ… இல்லையோ… கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால், அடிப்படைத் தேவைக்கு மட்டுமா அவர்களுக்கு அரசாங்க பணம் அள்ளிவிடப்படுகிறது? விலை உயர்ந்த கார்கள், வீடுகள், கழிவறையில்கூட ஏசி, ஏழெட்டு பி.ஏ-க்கள், போலீஸ்காரர்கள், போகுமிடமெல்லாம் பாதுகாப்பு மற்றும் அல்லக்கைகள் புடை சூழ செல்வதற்கான செலவுகள் என்று ஒவ்வோர் அமைச்சருக்கும் சம்பளம். தவிர, மாதத்துக்கு கோடிகளில்தான் செலவுகள் நடக்கின்றன.

Umashankar

எம்.பி, எம்.எல்.ஏ, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள். ஆளுநர், ஆளுநர் மாளிகை… இதில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் கதையாக கவர்னர் எட்டியே பார்க்காத ஊட்டி கவர்னர் மாளிகையைப் பராமரிப்பதற்கான செலவுகள் என்று மேலோட்டமாகக் கணக்கெடுத்தாலே சில ஆயிரம் பேர் இந்த அமைச்சர்களுக்கு இணையான செலவுப் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார்கள். இவர்களுக்கான நியாயமான செலவுகளை மட்டும் கணக்கிட்டாலே… பல லட்சம் கோடிகள் வரும். அதோடு நிறுத்தாமல் அநியாய செலவுகளை ஊதாரித்தனமாக வேறு செய்கிறார்கள். அவற்றையும் அரசாங்க கணக்கில் கள்ளத்தனமாக ஏற்றிவிடுகிறார்கள்.

இதைத் தவிர, மக்கள் பயன்பாட்டுக்காக என்றபடி கமிஷன் ஒன்றையே கணக்கில் கொண்டு நடத்தப்படும் கொள்ளைகளின் கணக்கு… கண்களில் ரத்தத்தை வரவழைப்பவை.

உதாரணத்துக்கு… தர்மபுரியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சுமார் 15 நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் 2 டன் ஏசிக்கள் சுமார் 10 வீதம் பொருத்தியுள்ளனர். ஒரு ஏசி மெக்கானிக்கிடம் நீதிமன்றத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் குறிப்பிட்டு கேட்டபோது, இந்த அளவுக்கான அறைக்கு 2 டன் ஏசிக்கள் நான்கு இருந்தால் போதுமானது என்று சொன்னார். அதாவது, மொத்தமாக எட்டு டன் இருந்தால் போதுமானது. இவர்களோ 20 டன் அளவுக்குப் பொருத்தியுள்ளனர், கூடுதலாக 12 டன் ஏசிக்கள். மொத்தம் 15 நீதிமன்ற அறைகளையும் கணக்கிட்டால்..? அந்த ஏசிக்கள் இயக்கப்படுவதே இல்லை என்பதுதான் சூப்பர் க்ளைமாக்ஸ். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த ஏசிக்களுக்கு மட்டுமே செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? கமிஷன் எவ்வளவு?

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோர்ட்களின் உள்ளேயும், வராண்டாவிலும் கோர்ட்டுக்கு குறைந்தபட்சம் ஆறு வீதம் கம்ப்யூட்டர் மானிட்டரை மாட்டி வைத்துள்ளனர். அதன் மூலமாக அன்றைய தினம் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படவிருக்கின்றன என்கிற பட்டியலை பார்த்துக்கொள்ள முடியும். ஆனால், ஒருநாளும் அவற்றில் அந்தப் பட்டியல் இடம்பெறுவதே இல்லை. வழக்கம்போல நீதிமன்ற அறைக்கதவில் பிரின்ட் எடுத்து ஒட்டிவிடுகிறார்கள். அந்த கம்ப்யூட்டர் மானிட்டர்களில் வெறுமனே கூகுள் திரைதான் எப்போதுமே நின்றுகொண்டிருக்கிறது. இப்படி தமிழகம் முழுக்க உள்ள நீதிமன்றங்களுக்கு வாங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் எத்தனை, அவற்றுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்டர்நெட் இணைப்புக்கான தொகை எவ்வளவு, இதைப் பராமரிப்பதற்காக இருக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் எத்தனை பேர்? இதற்கான மின்சார செலவு எவ்வளவு? இந்தத் திட்டத்தின் மூலம் அடிக்கப்பட்ட கமிஷன் எவ்வளவு?

RTI

நீதிமன்ற விஷயங்களிலேயே இத்தனை தில்லுமுல்லு திருகுதாளங்கள் என்றால்…. மற்ற மற்ற இடங்களில் எத்தனை லட்சம் கோடிகளோ!

நீங்களே கணக்குப்போட்டு, தலைசுற்றி குறைந்தபட்சம் ஒரு தடவை கீழே விழுந்து எழுந்துகொள்ளுங்கள்.

இது ஒரு சாம்பிள்தான்… தேவையில்லாத இடங்களில் பாலங்கள், தமிழகத்தின் 12,000 கிராமங்களிலும் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமலே இருக்கும் கழிப்பறைகள், பல ஆயிரம் கிராமங்களில் மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடைகளுக்கான நீர்த்தொட்டிகள், பேருந்து நிழற்குடைகள், அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் பால் கொடுக்கும் அறைகள் இன்னும் இன்னும்… பட்டியல் போட்டால் செவ்வாய் கிரகம் வரைகூட நீளும் இந்த அரசாங்கங்களின் கொள்ளைத் திட்டங்கள். கான்ட்ராக்ட் மற்றும் கமிஷனை மட்டுமே மனதில்கொண்டு ஆட்சி நடத்துபவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

இப்படியே நீண்டு நீண்டுதான் இன்றைக்கு ரூபாய் 5 லட்சம் கோடி ரூபாயை நோக்கி கடன் தொகை எகிறிக்கொண்டிருக்கிறது. பிறந்த குழந்தையின் தலையில்கூட 64,000 ரூபாய் கடன் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

வரலாறு காணாத கடன் சூழ்ந்திருக்கும் நிலையிலும் தேர்தல் நெருக்கத்தில் வாக்கு வங்கியை மனதில் கொண்டு அவசர அவசரமாக மேற்கொண்டும் கஜானாவை காலி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கார், பங்களா வைத்திருப்பவர்களுக்குக்கூட பொங்கல் பரிசு ரூ.2,500; ஏழை-பணக்காரர் வேறுபாடில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.12,000 கோடி தள்ளுபடி; விவசாய நிலமே இல்லாமல் நகையை வைத்து கடன் வாங்கியிருந்தாலும் தள்ளுபடி, தேவையிருக்கிறதோ இல்லையோ அனைத்து மாணவர்களுக்கும் இலவச டேட்டா கார்டு… இப்படி இலவசத்துக்கு மேல இலவசங்களாக அள்ளிவிட்டு அநியாயத்துக்கு மேல் அநியாயங்களைச் செய்திருக்கிறார். உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள், தேவையுள்ளவர்கள் என்று அரசாங்கம் உதவிக்கரம் நீட்டுவதில் தவறில்லை. ஆனால், நாளைக்குக் கடன் தள்ளுபடி என்பதை முன்கூட்டியே அரசியல் கட்சியினருக்கு (ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி) சொல்லிவிட்டு, விருப்பம்போல கடன்களையும் வாங்க வைத்துவிட்டு… மறுநாள் தள்ளுபடி அறிவிப்பது எந்த ஊர் நியாயம். இப்படிப்பட்ட அநியாயக்காரர்களின் ஆட்சி தொடர்வதால்தான் கடந்த 8 ஆண்டுகளில் கடனுக்கு செலத்திய வட்டி மட்டுமே 1,17,000 கோடிகள்.

RTI

Also Read: விவசாய கடன் தள்ளுபடி: `முன்பே அறிந்த ஆளுங்கட்சியினர்; அதிக போலி கடன்கள்!’ – விவசாயிகள் சொல்வது என்ன?

தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே இருக்கும் சூழலில், இதுகுறித்து ஆர்.டி.ஐ மூலமாக அரசாங்கத்திடம் இருந்து சில மாதங்களுக்கு முன்பே விகடன் ஆர்.டி.ஐ குழு தகவல்களைத் திரட்டியது. அதன்படி 2011-12 முதல் 2018-19 வரையிலான 8 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனுக்காகத் திருப்பிச் செலுத்தப்பட்ட அசல் தொகை மட்டும் ரூ. 3.5 லட்சம் கோடி (ரூ.3,48,931 கோடி). வட்டித் தொகை மட்டும் ரூ. 1.17 லட்சம் கோடி (ரூ.1,17,048 கோடி). மார்ச் 21, 2021 நிலவரப்படி தமிழக அரசின் மொத்த கடன் 4,85,502 கோடி ரூபாய்.

இதுவே, 2021-22 நிதியாண்டின் இறுதியில் ரூ. 5,70,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமே சட்டசபையில் வாய் திறந்துவிட்டார். அதாவது, ஓராண்டுக்குள் சுமார் 85,000 கோடி வரை கடன் சுமை அதிகரித்துவிடும். ஒவ்வோர் ஆண்டும் இப்படி பல்லாயிரம் கோடிகள் கடன் வாங்கும் நிலையில்தான் தமிழகம் தாழ்ந்துகிடக்கிறது.

இதுதொடர்பாகப் பேசிய மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக், “கடந்த 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் வெறும் வட்டித் தொகை மட்டுமே செலுத்தியிருப்பது, அரசின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தனியார் கம்பெனிகளை ஊக்கப்படுத்துவது, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவது போன்றவைதான் முக்கிய காரணங்கள். வட்டியாகக் கட்டப்பட்ட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை வைத்தே பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, மேலும் வளர்ச்சிப்பாதையில் மாநிலத்தை நடைபோட வைத்திருக்க முடியும். மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட மத்திய அரசை எதிர்பார்க்காமல் கட்டிமுடித்திருக்க முடியும்.

சகாயம்

நம் வரிப்பணம் எப்படியெல்லாம் விரயமாக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு மக்கள் விழிப்பு உணர்வு பெற வேண்டியது மிகமிக முக்கியம். அப்போதுதான் ஓட்டு கேட்டு வருபவர்களிடம் தமிழகத்தின் சமூகப் பொருளாதார நிலை குறித்து கேள்விகளை எழுப்ப முடியும்” என்றார்.

போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை, மின்சாரத்துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல ஆயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் அதிகம் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு, அசல் கிடைத்திருந்தாலேகூட மேற்கொண்டும் கடன்களை வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. போக்குவரத்துத் துறை 2014-15 முதல் 2017 -18 வரையில் நான்கு ஆண்டுகளில் சுமார் 13,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது.

மின்சாரத்துறையில் 2010-11 முதல் 2016-17 வரையிலான 6 ஆண்டுகளில் 63,000 கோடிகளுக்கு மேல் நஷ்டம். இப்படி ஒவ்வொரு துறையிலும் ஆண்டுக்கு ஆண்டு நஷ்டக் கணக்குதான் எழுதப்படுகிறது. ஆனால், உண்மையில் நஷ்டம் என்பது அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டணி போட்டுக்கொண்டு கொள்ளையடிப்பதால் மட்டும்தான் நடக்கிறது என்பதே உண்மை.

சில மாதங்களுக்கு முன்புவரை ஆவின் நிர்வாகம் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தது. அந்தத் துறைக்கு வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே நஷ்டத்திலிருந்து நிமிரப்பார்த்தது. அதற்குள்ளாக அவரை பணியிட மாற்றம் செய்து பழையபடி ஊழலில் மூழ்கடித்துவிட்டனர். இதேபோலத்தான் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது டாமின் எனப்படும் தமிழக கனிமவளத்துறை பொறுப்பில் வள்ளலார் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாகப் படுபாதாளத்திலிருந்த வருமானம்… சில ஆண்டுகளிலேயே 650 சதவிகித லாபம் தரும் வகையில் உயர்ந்தது.

வள்ளலார் ஐ.ஏ.எஸ்

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்… பல்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர், கோஆப்டெக்ஸ் உயரதிகாரியாகப் பொறுப்பேற்றதும், அதன் வருவாயை உயர்த்தினார். ஆனால், கமிஷன் கட் ஆனதால் வெகுண்ட அரசியல்வாதிகள், அவரை தூக்கி வீசினர். இதே கோஆப்டெக்ஸுக்கு தலைவராக சகாயம் ஐ.ஏ.எஸ்ஸும் நியமிக்கப்பட்டார். தேசிய விருதுகளை வாங்கும் அளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்த்தார். ஆனால், கமிஷன் கட் ஆனதால், அரசியல்வாதிகள் தூக்கிவீசிவிட்டனர்.

ஆக, ஒரு துறை நஷ்டத்தில் தள்ளப்பட்டு புதையுண்டு போவதும்… அது தழைத்து வளர்வதும் நல்ல அதிகாரிகள் மற்றும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளின் கைகளில்தான் இருக்கிறது.

ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அத்தகைய நல்லவர்கள் மிகமிக அரிதாகவே தென்படுகிறார்கள். அதேசமயம், 5 லட்சம் கோடி கடன் என்பது… பத்து லட்சம், பதினைந்து லட்சம் என்று உயர்வதற்கான அறிகுறிகள் மட்டும் ஆங்காங்கே பளீரிடுகின்றன.

ஏ தாழ்ந்துகொண்டே இருக்கும் தமிழகமே!

– ஆர்.டி.ஐ ஆனந்தராஜ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.