அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கதையை ‘முடித்துவைத்த’, இந்திய வம்சாவளி பெண்ணான விஜயா கட்டேவுக்கு பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், அவரது வெற்றியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் கூடியது. அப்போது, வாஷிங்டனில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ‛கேப்பிடோல்’ எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுக்கப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

A sign hangs at Twitter headquarters in San Francisco.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட தன் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய வீடியோக்களை டிரம்ப் தன் ட்விட்டர் அக்கவுன்ட்டில் பதிவேற்றினார். அவை வேகமாகப் பரவின. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளதாகக் கூறி, அந்த வீடியோவை தங்களது பக்கத்திலிருந்து ட்விட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. விதிகளை மீறியதற்காக டிரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்து வெளியீடு உள்ளிட்ட காரணங்களை அடுத்து, ட்விட்டர் நிறுவனம் ஜனாதிபதி டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கும் முடிவை எடுத்ததாக அறிவித்தது. டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர்தான், இந்த விஜயா கட்டே. இவர் ஓர் இந்திய வம்சவாளிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிறந்த விஜயா கட்டே தனது 3-வது வயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். இவரின் தந்தை, மெக்ஸிக்கோ வளைகுடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயனப் பொறியாளராக இருந்தவர்.

விஜயா, அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்தார். ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் பிரிவின் தலைமை வழக்கறிஞராக, தற்போது பொறுப்பு வகித்துவருகிறார்.

Image shows the suspended Twitter account of President Donald Trump.

ட்விட்டர் விதிகள் மற்றும் பாலிசி பிரச்னைகளை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவராக உள்ளார் விஜயா. ட்விட்டரில் உள்ள அனைத்து பதிவுகளையும் கண்காணிக்கும் தகுதி, இந்தக் குழுவினரிடம் மட்டுமே உள்ளது. இந்தக் குழுவினரால் மட்டுமே பதிவுகள் குறித்து வரையறைகளை அறிவிக்கவும் மற்றும் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சர்ச்சை பதிவுகளை, விஜயா தலைமையிலான குழுதான் ஆய்வு செய்து, டிரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

– ஆனந்தி ஜெயராமன்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.