ஊரடங்கு காலத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக போராட்டக் குழுவினருடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவிய நிலையில், வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நான்கு நபர்கள் அடங்கிய குழுவையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. இதை ஏற்க முடியாது, போராட்டம் தொடரும் எனப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

நல்லா கவுண்டர்

இந்த சூழலில், டெல்லியில் போராடும் விவசாயிகளோடு போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டரிடம் பேசினோம்.

”மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவானது. விவசாயம் என்பது நம் கலாச்சாரம், வாழ்வாதாரம். ஆனால் அதை அக்ரி பிசினஸ் என்ற பெயரில் வியாபாரமாக்கும் செயலில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. தற்போது விவசாயத்திற்கும் வேளாண் வணிகத்திற்கும் இடையே நடக்கும் போர் தான் விவசாயிகளின் போராட்டம். தங்களின் உரிமைகளைக் காப்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 50 நாள்களுக்கும் மேலாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இந்திய பிரதமர் மட்டும் அதைப் பற்றி கவலையோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கிறார் பிரதமர் மோடி.

இது மக்களுக்கான ஆட்சியா அல்லது கார்ப்பரேட் அதிபர்களுக்கான ஆட்சியா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ‘இதிலென்ன சந்தேகம். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி தான்’ எனச் சொல்லாமல் சொல்கின்றன மத்திய அரசின் செயல்பாடுகள்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு. மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. இத்தனை முயற்சி எடுத்த மத்திய அரசு அதன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து வேளாண் சட்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கான அநீதிகளைப் பேச முன்வந்திருந்தால் பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி மூலமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. அத்துடன் வேளாண் சட்டத்தில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்காக ஒரு குழுவையும் அமைத்துள்ளது. அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களது பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மோடி

வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அசோக் குலாட்டி மற்றும் அனில் கான்வாட், பிரமோத்குமார் ஜோஷி மற்றும் விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஹர்சிம்ராட் மான் ஆகிய நான்கு பேரும் வேளாண் சட்டத்துக்கு ஆதரவானவர்கள். இதில் அசோக் குலாட்டி, ‘விவசாயிகள் வேளாண் சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் போராடுகிறார்கள். அவர்களுக்குப் புரியும் வகையில் இந்த சட்டத்தை எடுத்துச் சொல்லி ஆதரிக்கச் செய்யவேண்டும்’ என்று கூறி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசி வருபவர்.

இவர் வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணைய தலைவராக இருந்தபோது நான், பாரதிய கிஷான் யூனியன் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய டெல்லி போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களில் ஒருவருமான யுத்வீர் சிங் உள்ளிட்ட விவசாய அமைப்பினர் சந்தித்தோம். ‘நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தோம். ‘தற்போது கொடுக்கும் விலை கட்டுப்படியாகாத விலைதான்.

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்: `மத்திய அரசு வாபஸ் வாங்கினால்தான் முழு வெற்றி!’ – வழக்கறிஞர் ஈசன்

அதற்காகக் கூடுதல் விலை கொடுக்க முடியாது. நெல்லுக்குக் கொடுத்தால் கரும்பு விவசாயிகள் அனைவரும் நெல்லுக்கு மாறிவிடுவார்கள். கரும்புக்குக் கொடுத்தால் நெல் விவசாயிகள் கரும்புக்கு மாறிவிடுவார்கள். சாகுபடி செலவு கணக்கை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆண்டுக்கு ஒவ்வொரு பயிருக்கும் நூறோ இருநூறோ கொடுப்போம் அவ்வளவுதான். அப்போது தான் எந்த விளைபொருள் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடியும்’ என்று சொன்னார். இதிலிருந்தே அரசுமீது இவர் காட்டும் விசுவாசத்தைப் புரிந்துகொள்ளலாம். தற்போதைய பிரச்னைக்குரிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு இயற்றியதில் முக்கியப் பங்காற்றியவர். இவர் குழுவில் இருக்கும்போது, வேளாண் சட்டங்களில் விவசாயிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. ‘சட்டங்கள் சரியாகத்தான் இருக்கிறது’ என்று தான் குழு சொல்ல வாய்ப்பிருக்கிறது. ‘சட்டத்தை உருவாக்கியவரே சரியில்லை என்று எப்படிச் சொல்வார் என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. இது நியாயம் தானே?

இவரைத் தவிர மற்ற மூன்று நபர்களும் வேளாண் சட்டத்தை ஆதரித்து ஏற்கெனவே அரசுக்குக் கடிதம் கொடுத்தவர்கள்

அசோக் குலாட்டி

நீதிமன்றம் இடைக்காலத் தடையோடு நிறுத்தியிருந்தால் கூட ஓரளவு யோசித்திருப்பார்கள் விவசாயிகள். கூடுதலாக இந்த குழுவை அமைத்ததையும் குழுவை மத்திய அரசு ஆதரித்ததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடைக்காலத் தடையைக் காரணமாகக் காட்டி போராட்டக் குழுவைக் கலைக்க நினைக்கிறார்கள். சிறிது காலம் போனபிறகு தடையை நீக்கி, சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வழியிலும் போராட்டத்தை அடக்க முடியாத மத்திய அரசு, நீதிமன்றம் மூலமாகப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைப்பதாகப் போராட்டக்குழுவினர் நம்புகிறார்கள்.

ரஃபேல் விமான பேர வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, அயோத்தி பாபர் மசூதி – ராம ஜென்மபூமி வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுகள்தான் தீர்ப்புகள் வழங்கின. அவர் அளித்த தீர்ப்புகள் மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசுக்குச் சாதகமாக அமைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அந்நிலையில், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணி ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய், நான்கே மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ரஞ்சன் கோகோய்

தற்போது வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார். ஏற்கெனவே தலைமை நீதிபதியாக இருந்தவர் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுள்ள நிலையில், தற்போதைய தீர்ப்பை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதன் பின்புலத்தில் மத்திய அரசு இருக்கலாம் என்ற சந்தேகத்தைப் போராட்டத்தில் உள்ள விவசாயிகள் எழுப்புகிறார்கள். எனவே போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது போராட்டக்குழு.

‘மற்ற மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் தான் அங்கெல்லாம் போராட்டங்கள் இல்லை. டெல்லியில் போராடும் விவசாயிகள் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்கிறது மத்திய அரசு. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் போராட்டம் நடந்திருக்கிறது.

விவசாயிகள்

பொங்கலுக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து விவசாயிகள் டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆணையை மதிக்கும் அரசு, விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளிக்க மறுப்பது சரியான நடவடிக்கை இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது தொடுக்கும் போர். மத்திய அரசு, உடனடியாக வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கவேண்டும். அதுவரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. அதையும் மீறி அதிகாரத்தை வைத்து, போராட்டக் குழுவைக் கலைத்தால் அதற்கான விலையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொடுத்தே ஆகவேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.