வல்லரசு என்று தன்னை மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் ஜனநாயகம் சமீபத்தில் கேலிக்கூத்தானது உலகம் முழுக்கப் பேசுபொருளாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழை அளிக்கும் விழா சில தினங்களுக்கு முன்பு ‘கேபிடோல் ஹில்’ என்கிற அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்தது.

அப்போது அங்கு வந்த டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் பிரிதிநிதிகள் சபையின் சபாநாயகரான நான்சி பெலோசி இச்சம்பவம் குறித்து தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.

Trump Supporters

”அதிபர் டிரம்பின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. எனவே அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். இது தொடர்பான சரியான கருத்தை துணை அதிபரிடமிருந்து எதிர்நோக்குகிறோம். இது நடக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று நான்சி எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஆண்கள் கோலோச்சும் அமெரிக்க அரசியலில் ஒரு பெண்ணிடமிருந்து வந்திருக்கும் இந்த நெருப்பு வார்த்தைகள், யார் இந்த நான்சி என்று உலகத்தையே அவர் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றன.

நான்சிக்கு தற்போது வயது 80. ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான நான்சி தனது 47வது வயதில்தான் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் என்றாலும் அரசியல் குறித்த இவரது ஆறாவது அறிவு அபாரம். கட்சிக்கான நிதியைச் சேகரிப்பதில் தொடங்கி, கட்சிக்கான தன்னார்வலர்களை ஒன்றிணைப்பது, மக்கள் மத்தியில் தங்கள் கட்சியைக் கொண்டு செல்வது போன்ற அனைத்தையுமே மிகத் திறமையாகச் செய்து ஒரு குயின் மேக்கராக வலம் வந்தவர் இவர்.

தற்போது அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் 52வது சபாநாயகராகப் பணியில் இருக்கிறார் நான்சி. அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதல் பெண் சபாநாயகரும் இவர்தான். ஏற்கெனவே இரண்டு முறை இந்தச் சபாநாயகர் பொறுப்பில் இருந்த இவர் கடந்த வருடம் மூன்றாவது முறையாக சபாநாயகர் பதவியை மீண்டும் தனதாக்கிக்கொண்டிருக்கிறார்.

Nancy Pelosi,
Speaker of the United States House of Representatives

மருத்துவக் கட்டணங்களைக் குறைப்பது, வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைப்பது, ஊழல்கள் மற்றும் சுரண்டல்கள் இல்லாத தேசத்தை உருவாக்குவது போன்ற பல இலக்குகளுடன் இவர் தனது பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் 2009-ம் ஆண்டு இணைந்து இவர் பணியாற்றியபோது ‘அமெரிக்க மீட்பு மற்றும் மறு முதலீட்டுச் சட்டத்திற்கு’ புத்துயிர் கொடுத்து எண்ணற்ற அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புக்களுக்கு வழிவகை செய்தார். இவரது இந்தச் செயல் காரணமாக வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் பணியில் இருந்த அமெரிக்கர்களில் பெரும்பான்மையோருக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கிடைக்கவும் இவர் வழிவகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.