மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடும் குளிரிலும் நடந்து வரும், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும், என்று விவசாயிகளும் உறுதியாக உள்ளனர். போராட்ட களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. மத்திய அரசின் இந்த சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) ஷரத் அரவிந்த் பாப்டே (Sharad Arvind Bobde) தலைமையில் ஏ.எஸ்.போபண்ணா (A S Bopanna) மற்றும் வி. ராமசுப்பிரமணியன் (V Ramasubramanian) அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிராக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் ஆர்.ஜே.டி.யின் மனோஜ் கே ஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு உட்பட பல்வேறு மனுக்களை விசாரித்தது.

அப்போது, வேளாண் சட்டங்களை நிறுத்துவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்படி செய்யவில்லை என்றால், நீதிமன்றம் நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து வேளாண் சட்டங்கள் குறித்து தீர்வு காண வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளது.

Also Read: `வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா… நாங்கள் நிறுத்தவா?’ – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை நீதிபதி பாப்டே, “பிரச்னையில் இணக்கமான தீர்வை எங்களால் கொண்டு வர முடியுமா என்பதைப் பார்ப்பதே நோக்கம். நீங்கள் (மத்திய அரசு) ஏன் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க கூடாது? உங்களுக்கு பொறுப்புணர்வு இருந்தால், ‘நாங்கள் எங்கள் சட்டங்களை செயல்படுத்த மாட்டோம்’ என்று நீங்கள் கூறலாம். இல்லையென்றால் நாங்கள் அதிகாரிகளின் குழுவை நியமிக்கிறோம். அந்த குழுவின் விவாதம் முடிந்து தீர்வு எட்டும் வரை சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் வழக்கு விசாரணையின் போது, “விவசாயிகள் போராட்டத்தின் நிலைமை மோசமாக உள்ளது. இதை அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தற்கொலை செய்துள்ளனர். முதியவர்கள், பெண்களும், போராட்ட களத்தில் உள்ளனர். வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை” என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

மேலும், “சட்டத்தை அமல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இறுதியாக, “போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. போராட்ட களத்தில் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு விரும்பாவிட்டால், நாங்கள், சட்டத்தை நிறுத்தி வைப்போம்” என்று தலைமை நீதிபதி பாப்டே காட்டமாக தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல், “உச்ச நீதிமன்றம் தேவை என்றால் குழு அமைக்கலாம். ஆனால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க கூடாது. இந்த சட்டங்கள் ஜூன் 2020 -ல் உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்தன. அதன்பிறகு, 2,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்டியில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதிமன்றம் இந்த சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தினால், அவர்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள்” என்றார். மேலும் கடந்த கால வழக்குகள் சிலவற்றையும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.