மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிபூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்தப் போராட்டம் 46-வது நாளாக நீடித்து வருகிறது.

விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அடுத்த 15-ம் தேதி அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் முடிவெடுத்துள்ளனர். டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களிலும் பனி அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கஷ்டங்களுக்கு இடையே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை இணைத்து இந்த விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு மத்திய அரசைக் கேள்விகளால் துளைத்தது.

உச்சநீதிமன்றம்

இதுபற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தரப்பில், ”விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடன் பேச நாங்கள் குழு அமைக்கிறோம். வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை.

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? மத்திய அரசு நிறுத்தி வைக்கவில்லை என்றால் நீதிமன்றமே நிறுத்தி வைக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஈசன்

இதுபற்றித் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈசன் பேசும்போது, “நாட்டில் எந்த சட்டத்துக்கும் தடை கொடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. மத்திய அரசும் இதை நிறுத்தி வைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இப்போது நடக்கும் வழக்கில் வேளாண் சட்டங்கள் நன்மை தரும் என மத்திய அரசு எங்கேயும் குறிப்பிடவில்லை” என்றார்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவிருக்கிறது. இந்த வழக்கில் ஒரு பகுதி உத்தரவு இன்றும் மறு பகுதி உத்தரவு நாளையும் பிறப்பிக்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.