தமிழ் சைவப் பேரவைத் தலைவர் கலையரசி நடராஜனுக்கும், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் டிவி நெறியாளர் மதன் ரவிச்சந்திரனுக்குமான மோதல்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

சில தினங்களுக்கு முன் கலையரசியை நேர்காணல் செய்திருந்த மதன் தன்னுடைய யூ-டியூப் சேனலில் அந்தப் பேட்டியை வெளியிட்டிருந்தார். பேட்டி வெளியான மறுநாள் முதல் வேறு சில யூ-டியூப் சேனல்களில் அந்தப் பேட்டி எடுக்கப்பட்ட விதம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்த கலையரசி நடராஜன் தன்னுடைய வீட்டில் சாமி சிலைக்குப் போடப்பட்டிருந்த இரண்டு சவரன் தங்க நகை, மதன் டீம் வீட்டுக்கு வந்து சென்ற பிறகு காணாமல் போனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் என்னதான் நடந்தது? கலையரசி நடராஜனிடம் முதலில் பேசினோம்.

கலையரசி நடராஜன்

‘”வளர்மதின்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு ஒரு பொண்ணு வந்து என்னைப் பார்த்துச்சு. ‘லயோலா காலேஜ்ல படிச்சவங்க நாங்க. சமூக நீதிங்கிற பேர்ல யூ-டியூப் சேனல் தொடங்கியிருக்கோம். உங்க பேட்டி எங்க யூ-டியூப் சேனல்ல வெளியானா நல்லாயிருக்கும்’னு சொல்லுச்சு. இப்ப விசாரிச்சா அந்தப் பொண்ணு பேர் வெண்பா கீதாயன்ங்கிறாங்க. அந்தப் பொண்ணுதான் பேட்டி எடுக்கப் போகுதுனு நினைச்சேன். கேமரா எல்லாம் செட் பண்ணிட்டப்பிறகு பேட்டி தொடங்குற கடைசி நிமிஷத்துல இந்தப் பையன் வந்தான்.

அந்த டீம் வந்துட்டுப்போன பிறகு என் வீட்டுல சிவன் சிலையில போட்டிருந்த ரெண்டு சவரன் நகையைக் காணலை. வளர்மதினு சொன்னாளே, அந்தப் பொண்ணு ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்னு அந்தப் பக்கமாப் போயிட்டு வந்தா. வீட்டுல கேமரா பொருத்தப்படாததால ஆதாரம் இல்லைன்னு புகார் தராம இருக்கேன். ஆனாலும் சம்பவம் நடந்தது பத்தி போலீஸுக்கு சொல்லிடறது நல்லதுனு என்னுடைய நலம் விரும்பிகள் சிலர் சொன்னதால இப்ப போலீஸ்ல புகார் தரலாம்னு முடிவெடுத்திருக்கேன்” என்றார் கலையரசி.

மதன் ரவிச்சந்திரனிடம் பேசினேன்.

‘’அந்த அம்மா 45 நிமிஷம் பேட்டி தந்திருக்காங்க. பேட்டியில் அவங்களுக்கு இக்கட்டான சூழல் உருவாகுற மாதிரி சில கேள்விகளை நான் கேட்டதால, இப்ப அவங்க வேற ஒரு கதை சொல்றாங்க. பேட்டி எடுக்க வந்தவங்க மீது திருட்டுப் பட்டம் கட்டுறாங்க. வடக்கில் இந்த மாதிரி எதிர் மனநிலையில் இருந்து குறுக்கு கேள்விகள் கேட்கிற, பிடிக்காத பத்திரிகையாளர்களை அவதூறு பண்ணுற பழக்கம் உண்டு. இப்ப தென்னிந்தியாவுல கலையரசி அம்மா அதுக்கு பாதை போட்டிருக்காங்க. இது ஒரு மோசமான முன்னுதாரணம்.

மதன் ரவிச்சந்திரன்

நான் என் யூ-டியூப் சேனலுக்காக பேட்டி கேட்டுத்தான் போனேன். அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. அவங்க நாங்க தப்பு செஞ்சிருந்தா அதுக்கான ஆதாரங்களைப் பொது வெளியிலயே வெளியிடட்டுமே?! நகை காணாமப் போனதா சொல்றாங்களே, அது தொடர்பா போலீஸ்ல புகார் தரணுமில்லையா? தரட்டும்னுதான் நானும் வெயிட் பண்ணிட்டிருக்கேன். போலீஸ் என்னைக் கூப்பிட்டு விசாரிக்கிறப்ப எல்லா உண்மைகளும் வெளியில வரும். கலையரசி அம்மாவுக்குப் பின்னாடி யார் இருக்காங்கணும் அப்ப நிச்சயம் தெரிஞ்சிடும்’’ என்கிறார் மதன்.

நகையைத் திருடியதாக கலையரசி நடராஜன் குற்றம்சாட்டும் வளர்மதி (எ) வெண்பா கீதாயனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் இதுவரை எங்களிடம் பேசவில்லை. அவர் பேசினால், அவர் தரப்பு விளக்கமும் இங்கே வெளியிடப்படும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.