`வீட்டுத்தோட்ட விவசாயத்துல பலர் வெற்றியடையாமப் போகக் காரணம் நீர் நிர்வாகம். அதை யாரும் பெருசா எடுத்துக்கிறதில்லை. அதுல கவனமா இருந்தாதான் எதிர்பார்த்த மகசூலை எடுக்க முடியும்’னு சொல்றாரு நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ்.

மழை பெய்துகொண்டிருக்கும் இந்தக் காலத்துல வீட்டுத்தோட்டப் பயிர்களுக்கான நீர் மேலாண்மை பற்றிப் பல ஆலோசனைகளை இந்தப் பகுதியில் சொல்லப் போறாரு பிரிட்டோராஜ். அவர் சொல்ற ஆலோசனைகளைக் கேட்போமா?

பிரிட்டோ ராஜ்

மாடித்தோட்ட விவசாயத்துல நீர் நிர்வாகம் செய்றதுல ரொம்ப கவனமா இருக்கணும். ஆனால், பலரும் அதைச் செய்றதில்லை. பிளாஸ்டிக் ஹோஸ் மூலமா தண்ணியைத் தெளிக்குறாங்க. ஆனா, அது தவறான நடைமுறை. அதை முதல்ல நிறுத்துங்க. அதே மாதிரி பூவாளியில தண்ணி ஊத்தும் போதும், தொட்டி நிறையிற அளவுக்கு ஊத்துறாங்க. அதுவும் தவறான செயல். ஒவ்வொரு செடிக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி தேவைனு கணக்கு இருக்குது. அந்த அளவுக்குத் தண்ணி கொடுத்தா போதும். அளவுக்கு அதிகமா தண்ணி கொடுக்குறதால வேர் அழுகிப் போக வாய்ப்புகள் அதிகம். நல்லா முட்ட முட்டத் தண்ணியைக் கொடுத்துட்டு கொஞ்ச நாள்ல செடி செத்துப் போச்சுனு சோகமா இருக்குறதால என்ன பயன்?

அதனால அளவா தண்ணி கொடுக்கணும்ங்கிறதைக் கவனத்துல வெச்சுக்குங்க. இதுதான் மாடித்தோட்ட விவசாயத்துல முக்கியமான ஆலோசனை. ஒரு பைக்கு 100 மில்லி தண்ணி போதுமானது. செடியோட சைஸ் பெருசா இருந்தா 200 மில்லி கொடுக்கலாம். அதுக்கு மேல தண்ணி கொடுக்கக் கூடாது. மழைக்காலத்துல ரொம்ப கவனமா இருக்கணும். பையில் ஈரம் இருக்கும்போது தண்ணி கொடுக்கக் கூடாது. ஈரம் காய்ந்த பிறகே தண்ணி கொடுக்கணும். பொதுவா, நாம கொடுக்குற தண்ணி செடிகளோட வேர் நனையிற அளவுக்கு இருந்தா போதும். அதே மாதிரி வீட்டுத்தோட்டத்துல இயற்கை இடுபொருள்களைத்தான் பயன்படுத்தணும்.

Terrace Garden

இப்ப மழை பேய்ஞ்சுகிட்டே இருக்குது. பல பேர் மாடித்தோட்டத்துல பயிர் வளர்ற பையில ஊடகமா மண், தென்னை நார் கழிவுகளைத்தான் பயன்படுத்தி இருப்பீங்க. மழைத் தண்ணி தொட்டி முழுக்க நிரம்பி நிக்கும். அதனால மண்ணுல இருக்க சத்துகள் கரைஞ்சு, கீழ்ப் பகுதியில வெளியேறுற தண்ணியோட கலந்துப் போயிடும். குறிப்பா, சாம்பல் சத்து அதிகமா போயிடும். அந்தச் சத்து போனா இலைகள் மஞ்சள் நிறமாகிடும். அந்தச் சத்துகளை ரீசார்ஜ் செய்யணும். ஜனவரி 15-ம் தேதிக்குப் பிறகு இதைச் செய்யலாம். அதுக்குப் பிறகு, பெருசா மழை இருக்காது. ரீசார்ஜ் செய்றதுக்கு, 10 லிட்டர் தண்ணியில 100 மில்லி மீன் அமிலத்தைக் கலந்துக்கணும். அதுல 100 மில்லி எடுத்து ஒவ்வொரு பையிலயும் செடியோட வேர் பக்கத்துல ஊற்றணும். இதை 100 செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.

அதே போல 100 கிராம் வேக வைக்காத நிலக்கடலை பருப்பை 2 லிட்டர் தண்ணியில 2 மணி நேரம் ஊற வைக்கணும். 2 மணி நேரத்துக்கு ஊறுன பிறகு, கடலையை நசுக்கி ஊறுன தண்ணியோட கலந்து விடலாம். அதுல அரிசி வடிகட்டின தண்ணி ஒரு லிட்டர்ல கலந்துக்கணும். அதைப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். நேரடியா தெளிக்காமல் 250 மில்லி கரைசலை எடுத்து ஒரு லிட்டர் தண்ணியில கலந்து ஒவ்வொரு பயிருக்கும் 100 மில்லி ஊற்றலாம். இதை 12 பைகளுக்குப் பயன்படுத்தலாம். பிறகு, அடுப்பு சாம்பல் 2 இலந்தைப்பழம் அளவுக்கு (30 கிராம்) செடி மேல தூவி விடணும். சாம்பல் கிடைக்காதவங்க பொட்டாஷ் பாக்டீரியானு கடையில கிடைக்கும். அதை வாங்கி 10 லிட்டர் தண்ணியில 100 மில்லி கலந்துக்கணும். அதைச் செடிக்கு 100 மில்லி அளவுக்கு ஊற்றலாம். இது மழை முடிஞ்ச பிறகு, செய்ய வேண்டியது. மழை பெய்யும்போதே செய்யக் கூடாது.

மாடித்தோட்டம்

இதெல்லாம் மீறி, வேரழுகல் வந்துடுச்சுன்னா, 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு தூளை வேர்ப்பகுதியில தூவலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணியில 10 மில்லி சூடோமோனஸ் கலந்து வேரைச் சுற்றியும் ஊற்றலாம். சில இடங்கள்ல நூற்புழு தாக்குதலும் இருக்கும். அதுக்கு 10 லிட்டர் தண்ணியில 50 மில்லி பேச்சிலோமைசிஸ் திரவத்தைக் கலந்து தெளிக்கலாம்.

விதைத் தேர்வுல ரொம்ப கவனமா இருக்கணும். பழைய விதைகளை வாங்கிப் போடாம, புது விதைகளா பார்த்து வாங்கணும். 6 மாசத்துக்கு மேல ஸ்டாக் வெச்சிருக்க விதைகளைப் பயன்படுத்துறதைத் தவிர்க்கலாம். அதே போல விதைகளை விதைக்குறதுக்கு முன்னாடி விதைநேர்த்தி செய்றது ரொம்ப முக்கியம். தைப்பட்டத்துல விதைக்குறவங்க, இதைக் கடைப்பிடிக்கணும். சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் பயன்படுத்தி விதை நேர்த்தி பண்ணி விதைச்சா, வேர் சம்பந்தமான நோய்கள் வர்றதுல இருந்து பயிர்களைக் காக்கலாம்.

அதே போல ஒரு லிட்டர் தண்ணியில 50 கிராம் மஞ்சள்தூள் போட்டு ஒன்றரை மணிநேரம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி வைக்கணும். சூடு குறையும்போது 10 பல் பூண்டு நசுக்கி உள்ளே போட்டு ஆற வைக்கணும். அந்தக் கரைசலை ஒரு லிட்டர் தண்ணியில கலந்து செடிக்கு 100 மில்லி ஊற்றினால் அழுகல் மாறும். செடிகளோட வளர்ச்சிக்குத் தேமோர் கரைசல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தும்போது பூக்கள் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். தேமோர் கரைசல்ல 5 கிராம் பால் பெருங்காயம் கலந்து தெளித்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். இது எதுவும் கிடைக்காதவர்கள், 50 மில்லி பசும்பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். பஞ்சகவ்யா, இ.எம் தொடர்ந்து பயன்படுத்தலாம். பெவேரியா பேசியானா, வெர்டிசீலியம் லகானியை ஒரு லிட்டர் தண்ணிக்கு 50 மில்லி கலந்து தெளிச்சா மாவுப்பூச்சி கட்டுப்படும். நான் சொன்ன உயிர் உரங்கள் எல்லாம் கடைகள்லயே கிடைக்கிது” என்றார்.

வீட்டுத்தோட்டம்

Also Read: மாடித்தோட்டத்தில் மிளகாய் சாகுபடி… விரிவான வழிகாட்டி இதோ! – வீட்டுக்குள் விவசாயம் – 13

மாடித்தோட்டத்துல நீர் மேலாண்மையில கவனமா இருந்தா போதும். வெற்றிகரமான வீட்டுத்தோட்ட விவசாயியா மாறிடலாம். உங்களோட சந்தேகங்களை 99444 50552 என்கிற நம்பருக்கு கால் பண்ணி பிரிட்டோவிடம் கேட்டுக்கலாம். உங்க சந்தேகங்களைக் கமென்ட்லயும் கேட்கலாம். வரும் வெள்ளிக்கிழமை வேறொரு செய்தியோட சந்திக்கலாம்.

– வளரும்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.