ஒரு நிறுவனத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர் திடீரென இறந்துபோனால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர் நடத்தும் நிறுவனமும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும். அவர் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால், அவரது குடும்பம் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் தப்பிக்கும். அதுமாதிரி அவர் சார்ந்திருக்கிற நிறுவனமும் பொருளாதாரப் பாதிப்பில் சிக்காமல் இருக்க, எடுத்துக்கொள்ள வேண்டிய இன்ஷூரன்ஸ்தான் `கீ மேன் இன்ஷூரன்ஸ்’.

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்து இன்ஷூரன்ஸ் ஆலோசகர் கமலேஸ் பட்டிடம் பேசினோம்.

Also Read: ஹெல்த் இன்ஷூரன்ஸ் விதிமுறைகளில் மாற்றம்… பாலிசிதாரர்களுக்கு பாதிப்பா?

“ஒரு நிறுவனத்தின் முக்கியப் பதவியில் இருப்பவர்களை `கீ பெர்சன்ஸ் (Key persons)’ என்பார்கள். அவருக்காக எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ் பாலிசியே கீ மேன் இன்ஷூரன்ஸ். அதாவது, ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ, எம்.டி போன்றவர்கள் இந்த கேட்டகிரியில் வருவார்கள். என்றாலும், கீமேன் யார் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

இந்த `கீ பெர்சன்ஸ்’ என்பவர் மரணமடைந்தால்தான் இந்தப் பாலிசி மூலம் இழப்பீடு கிடைக்கும் என்றில்லை; விபத்தால் செயல்பட முடியாமல் போனால்கூட க்ளெய்ம் கிடைக்கும்.

இந்தப் பாலிசியின் மூலம் கீ மேன்களின் ஆதரவில்லாமல் நிறுவனங்கள் தொடர்ந்து வருமானம் பெறுகிற மாதிரி க்ளெய்ம் தொகை கிடைக்கும். ஆனால், க்ளெய்ம் தொகை நிறுவனத்துக்குத்தான் தரப்படுமே ஒழிய, குடும்பத்தினருக்குக் கிடைக்காது.

இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் பிரீமியம்!

கீமேன் இன்ஷூரன்ஸை, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபத்தின் மூன்று மடங்கு, நிறுவனத்தின் நிகர லாபத்தின் ஐந்து மடங்கு, இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் கீமேனின் சி.டி.சி-யைப்போல (Cost to the company) பத்து மடங்கு என்கிற இந்த மூன்று அம்சங்களில் எது குறைவோ, அந்த அளவுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் எடுத்துக்கொள்ளலாம். இந்த மூன்று விவரங்களையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

கமலேஸ் பட்

டேர்ம் பாலிசியைப்போலவே, ஒவ்வோர் ஆண்டும் பிரீமியம் கட்டும்படியாகத்தான் இந்த பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்பவரின் வசதிக்கேற்ப 10, 20, 25 ஆண்டுகள் என பாலிசி முதிர்வுக்கால அளவை அமைத்துக்கொள்ளலாம். முதிர்வுக் காலம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கட்ட வேண்டிய பிரீமியமும் குறையும். வியாதியுடன் (சிறுநீரகம் செயலிழப்பு, இருதய அறுவை சிகிச்சை போன்றவை) இருப்பவர்களுக்கென்று தனியாக கிரிட்டிக்கல் இல்னஸ் ரெய்டர் பாலிசி இருக்கிறது. இதனுடன் எடுத்துக்கொள்ளும்போது பிரீமியம் அதிகமாகும். இந்த ரெய்டர் பாலிசி இல்லாமலும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்தப் பாலிசி எடுக்கும்போது உடல்நலம் பரிசோதிக்கப்படும். எடுத்துக்கொள்ளும் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகையைப் பொறுத்தும், கால அளவைப் பொறுத்தும், உடல் நிலையைப் பொறுத்தும் கட்ட வேண்டிய பிரீமியம் மாறுபடும். இந்த இன்ஷூரன்ஸுக்குக் கட்டும் பிரீமியத்தை செக்ஷன் 37(1)-ன் கீழ் நிறுவனத்தின் செலவாகக் காட்டி வரிச் சலுகைப் பெறலாம்.

சில நிபந்தனைகள்!

இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபர் அந்நிறுவனத்தில் 51 சதவிகிதத்துக்கும் குறைவாகப் பங்குகள் வைத்திருக்க வேண்டும் (அதாவது கடையோ, ஓனர்ஷிப் நிறுவனமோ, பிரைவேட் லிமிடெட் நிறுவனமோ எதுவானாலும் 100% ஓனராக இருப்பவருக்கு எடுக்க முடியாது. காரணம், தனிநபர் நிர்வகிக்கும் நிறுவனம் எனில், 100% ரிஸ்க் இருக்கும் என்பதால் இந்தப் பாலிசி தரப்படுவதில்லை.

இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபரும் அவர் குடும்பத்தாரும் சேர்த்து நிறுவனத்தில் 70 சதவிகிதத்துக்கு மேல் பங்குகள் வைத்திருக்கக் கூடாது (பெயரளவில் குடும்ப உறுப்பினர் 4 பேர் பார்ட்னர்களாக கணக்கு காட்டிவிட்டு காப்பீடு எடுக்க முடியாது). அந்த நபர் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பதற்கும், அவருடைய மரணம் நிறுவனத்தைப் பாதிக்கும் என்பதையும் நிரூபிக்க வேண்டும். மேலே சொன்ன அனைத்துக் காரணிகளும் கொண்டிருக்கும்பட்சத்தில் நிறுவனத்தில் வேலை செய்யும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கீமேன் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.

இன்ஷூரன்ஸ்

நிறுவனம் ஒரு நபரின் மீது கீமேன் இன்ஷூரன்ஸ் எடுத்த பிறகு, அவர் வேலையை விட்டு விலகினால், நிறுவனம் அதன் பிறகு பிரீமியம் கட்டுவதை நிறுத்திவிட்டு பாலிசியைக் காலாவதியாக விடலாம். அல்லது பாலிசியை அவர் அடுத்து வேலைக்குச் சேரும் நிறுவனத்துக்கு மாற்றிவிடலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்!

கீமேன் புரபோசல் விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் விவரங்களுடன் பூர்த்தி செய்து இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனோடு நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தீர்மானத்தை இணைக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டறிக்கை (இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் ஆண்டுக்கு முந்தைய மூன்றாண்டுகளுக்கானது), கீமேன்களின் வருமான வரித் தாக்கல் செய்ததற்கான நகல் அல்லது அவர்களின் மூன்று மாதச் சம்பளப் படிவம் கட்டாயமாகத் தர வேண்டும்” என்றார் தெளிவாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.