புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் உள்ளது. இங்குத் தினமும் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தான், இங்குப் புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் சீட்டின் பின்புறம் இரட்டை பொறிக்கப்பட்டிருந்துள்ளது. இரட்டை இலை பொறிக்கப்பட்டிருந்த நோட்டீஸ்களை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் புற நோயாளிகளுக்கு மருந்து எழுதிக்கொடுக்கும் சீட்டாகவும் பயன்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

புற நோயாளிகள் மருத்துவ சீட்டு

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன்,

“இரட்டை இலை மட்டும் தெரியும் வகையில் அந்த நோட்டீஸை, ஓபி சீட்டாக நோயாளிகளுக்குக் கொடுத்திருக்கின்றனர். முன்புறம் வெள்ளைத் தாள், பின்புறம் `நமது சின்னம் இரட்டை இலை’ என்று இரட்டை இலை படத்துடன் பொறிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அந்த நோட்டீஸ் முழுவதும் சரியாக இரட்டை இலை படத்துடன் தான் கட் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, ஒரு வாரக் காலமாக இதுபோன்ற ஓபி சீட்டைக் கொடுத்திருக்கின்றனர். இதுவும் ஒரு பிரசார தந்திரம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பிரசாரம் செய்து அமைச்சர் விஜயபாஸ்கரைத் திருப்திப்படுத்தவும், அமைச்சர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்ற எண்ணத்தில் தான் மருத்துவ அதிகாரிகள் இதுபோன்று அலட்சியமாக நடந்திருக்கிறார்கள். நிச்சயமாக மருத்துவ அதிகாரி, மருத்துவர்களுக்குத் தெரியாமல், இது நடந்திருக்காது.

சுகாதார நிலையம் முன்பு திரண்ட திமுகவினர்

அரசின் நலத்திட்ட உதவிகளில், அ.தி.மு.க விளம்பரமும் இரட்டை இலை சின்னம் பொறித்த விளம்பரமும் இருப்பது அமைச்சர் விஜயபாஸ்கரின் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தான் மருத்துவ சீட்டிலும் கூட இதுபோன்ற அரசியல் ஆதாயம் தேடுவது வேதனையளிக்கிறது. அரசு பணத்தில் அ.தி.மு.கவுக்குப் பிரசாரம் செய்து அரசு மருத்துவமனையில் அராஜகம் மற்றும் அத்துமீறல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, இதுபோன்ற நடந்தால் போராட்டங்கள் நடத்துவோம்” என்றார்.

இதுபற்றி சுகாதார அலுவலர் துரை.மாணிக்கத்திடம் கேட்டபோது, “வழக்கமாக ஒன்சைடு சீட்டை நான் தான் வாங்கி வந்து மருத்துவர்களிடம் கொடுப்பேன். மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென ஓபி சீட் முடிந்துவிட்டது. மருத்துவர்கள் உடனே, அங்கிருந்த ஊழியர்களிடம் சொல்லி ஒன்சைடு சீட் வாங்கி வரச் சொல்லியிருக்கின்றனர்.

புற நோயாளிகள் மருத்துவ சீட்டு

ஊழியர்கள் அருகே உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸில் ஒன்சைடு சீட் கேட்க, அவர்களோ உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்திய நோட்டீஸை கட் செய்து கொடுத்திருக்கின்றனர். மருத்துவர்களோ இரட்டை இலை சின்னம் இருந்ததைப் பார்க்காமல், எழுதிக்கொடுத்திருக்கின்றனர். இதுபற்றி நோயாளிகள் சிலர் தகவல் சொன்னவுடன் உடனே அந்த சீட்டுகள் கொடுப்பதை மருத்துவர்கள் நிறுத்திவிட்டனர். திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை. எதிர்பாராதவிதமாக நடந்திருக்கிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.